தரூக் - கார்த்திக் பாலசுப்ரமணியன்
எளியமொழியும் கதைசொல்லும் லகுவும் கார்த்திக்கிடம் இருக்கிறது. அவர் எழுதிய 'மண்' சிறுகதையின் நாவல் வடிவமாக 'தரூக்'கைக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவைப் பூர்வக்குடி திரள்களிடமிருந்து காலனியாதிக்கத்தின் வழி தங்களுக்கானதாக கட்டமைக்கும் பிரித்தானியர்கள் X பணியின் நிமித்தம் ஆஸ்திரேலியா போன காசிம் என்று இரட்டைக் கதைகள், இவ்விரண்டு கதைகளுக்குமிருக்கும் ஒற்றுமை என்று களம் விரிகிறது.
காலனியப் பாத்திரமான வில்லியம், 'நல்ல' வெள்ளையாராக இருக்கிறார். அதாவது, ஓரளவு மனிதநேயம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கும் கைதி/அடிமை/பூர்வக்குடிப் பாத்திரமான காபாவுக்கும் இடையிலான உறவு நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. வில்லியம் - ரேபேக்கா இருவருக்குமிடையேயான காதல் சமாச்சாரங்கள் அயர்ச்சியைத் தருகிறது. வில்லியமின் பார்வையிலிருந்து இக்களம் விரிவதால் அவரின் அன்றாடத்தை அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. உடன் பயணிப்பதால் நிலங்களைக் கைகொள்ள பிரித்தானியர்கள் என்ன செய்வார்கள் என்று வில்லியமிற்கு தெரியுமல்லவா? ஆனால், ஆஸ்திரேலியாவில் அதைப் புதிதாக காண்பவராக நம்மிடம் விளக்குகிறார். அது கதைசொல்லியின் குரல் என்று புரிந்துகொள்கிறேன். காபா, ஆஸ்திரேலியாவிலுள்ள பூர்வக்குடிகளுடன் நட்பாகிறான். அவனுக்கு அவர்களுடன் இருப்பது பிடித்திருக்கிறது. அவனைப் பிரித்தானியர்கள் தூதுவனாகப் பயன்படுத்துகிறார்கள். ஒருகட்டத்தில் சாகடிப்படுகிறான்.
காசிம், மென்பொருள் நிறுவன ஊழியர். அவரது தந்தை இப்ராஹிம் நிலங்கள் மீது தீராப் பிரியங்கொண்டவர். சொத்துகளை வாங்கி குவிக்கிறார். நிலங்களை எப்படி கையகப்படுத்த வேண்டுமென்கிற (கு)யுக்தி தெரிந்தவர். காசிமிற்காகத்தான் இவற்றை செய்கிறார். காசிம் நிலம்விட்டு ஆஸ்திரேலிய நிலத்தில் பணிபுரிகிறான். அவன் Comfort தன்மையை அதிகம் கொண்டவனாக இருக்கிறான். முடிவெடுத்தலில் சிக்கல் இருக்கிறது. Home Sick போல் அவனுக்கு இந்தியாவிலிருந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. மனைவி பாத்திரமான ஃபர்ஸானாவே அவனுக்கான நேக்குப்போக்குகளை உருவாக்குகிறாள். ஜெட்டா, காசிம் நேசிக்கும் பூர்வக்குடிப் பெண். அலுவலகத்தில் பாகுபாடு காட்டுவதை உள்ளூர உணர்கிறான் காசிம். ஒருமுறை பேருந்து நிலையத்தில் பள்ளிச் சிறார்களால் இனப்பாகுபாட்டிற்கு உள்ளாகிறான். இவையனைத்தும் சேர்ந்து அவனை தற்கொலைக்குத் தள்ளுகிறது, இறக்கிறான்.
பின்னட்டைக் குறிப்பில்,
//300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது இந்நாவலின் கதை//
கண்டிப்பாக இணைகோடு அல்ல. பிரித்தானியர்கள் புதிய குடியிருப்பினை உருவாக்குவதற்கு பின்பான அரசியல் வேறு; பிழைக்கச் செல்பவர்களின் அரசியல் வேறு.
மேலும் பூர்வக்குடிகள் அனுபவித்த/ அனுபவிக்கும் உள ரீதியான தாக்குதல்களின் வீரியமும், பிழைக்கப்போனவர்களுக்கு நடக்கும் உளத் தாக்குதல்களின் வீரியமும் ஒன்றல்ல. இரண்டு வேறுவேறு. அடிப்படையில் பூர்வக்குடிகள் நாடு கடத்தப்படுகிறார்கள்; நிலம் இழக்கிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். காசிம் போன்றவர்களுக்கு நாடு இருக்கிறது; நிலம் இருக்கிறது; வீடு இருக்கிறது. ஜெட்டா, காபா இருவருக்கும் இருந்த பிரச்சினையைவிட காசிம் எதிர்கொண்டது குறைவாகத்தான் இருக்கும்/இருக்கிறது. தந்தை நிலத்தை வாங்கிக் குவிப்பதன் தண்டனையாக காசிமின் இறப்பைச் சுட்டலாமா என்று தெரியவில்லை. அப்படிச் சுட்டுவதன் வழி 'வினை' தொழிற்படுகிறது எனலாம். அதை விதைத்தவனின் அடுத்த தலைமுறையை அறுக்கிறது. காசிம் ஒரு கோழை அல்லது இரட்டை மனநிலைப் பெற்றவன். இறப்பதற்கு முந்தின இரவு எதுவந்தாலும் சமாளித்துவிடுவேன் என்று ஃபர்ஸானாவிற்கு நம்பிக்கையளிக்கிறான். ஆனால் முடிவு வேறொன்றாகயிருக்கிறது.
வில்லியமின் மனமாற்றம் என்பது தனக்கான முன்னுரிமை வழங்கப்படாமையின் காரணமாக ரெபேக்காவை நோக்கித் தள்ளுகிறது. அதில் காபா, சில பூர்வக்குடிகளின் மரணமும் பின்னொட்டாகிறது. ஒரு கூட்டத்தின் குற்றவுணர்ச்சியாய் வில்லியம் பாத்திரம் இருக்கிறது. ஆனால் எழுத்திலிருக்கும் அக்குற்றவுணர்ச்சி வாசிக்கையில் இல்லை.
பூர்வக்குடிகளைப் பற்றி வெள்ளையரான வில்லியம், ஆசியரான காசிம் மூலமாகத்தான் நமக்குச் சொல்லப்படுகிறது. பூர்வக்குடிகளின் கண்கள் வழியாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதையாக இல்லாமல், அந்தக் கண்களை வெளியிலிருந்து பார்க்கும் வேற்றுக் கண்களால் நாவல் முழுமையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இஃதோர் அந்நியத்தை வாசிக்கையில் உணரமுடிகிறது.
Comments
Post a Comment