மனிதர்களும் விலங்குகளும் தெய்வங்களும்

'போயாக்' சிறுகதைத் தொகுப்பைப் பற்றி...


எட்டுச் சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பின் சரிபாதி கதைகளில் பால்யத்தின் உள்கூடு வெளிப்பட்டிருக்கிறது. அதாவது கதாப்பாத்திரங்களின் பால்ய நினைவேக்கங்கள் ஸ்திரமான கட்டுமானத்திற்குள் உள்ளோடியிருக்கின்றன. ‘மசாஜ்’ கதையில் /எனக்கு அப்பா ஒப்பாரியை ஊளையிடும் சத்தம் கேட்டது/, ஜமால் கதையில் /ஜமாலின் முகத்தில் அம்மாவின் கண்ணீர் இருந்ததைச் சொன்னால் அமீர் நம்பப் போவதில்லை/ என்று இவ்விரு கதைகளிலும் மையப் பாத்திரங்களுடைய பெற்றோர்களின் கடந்தகால நினைவை ஞாபகப்படுத்துவதன் வழி கதை முடிகிறது. ‘வண்டி’ கதையில் பால்யத்தில் ஏற்பட்ட ரணத்தின் துளிகளை மரியதாஸ் பாத்திரம் தன் மகனின் பால்யத்திலும் கையளிக்கிறார், ஆனால் இறுதியில் நடப்பது வேறு. ‘வெள்ளைப் பாப்பாத்தி’ கதையில் நேரடியாக பெண் குழந்தையொன்றின் சிறுசிறு மனக்கிலேசங்களும், அழகியல் தரிசனங்களும் கதையாக்கப்பட்டிருக்கிறது. ‘நாகம்’, ‘யாக்கை’, ‘பேச்சி’ கதைகளில் மையப்பாத்திரங்களின் நினைவுகளைத் துணைப் பாத்திரங்கள் பகிர்வதாக உள்ளது.
*
மசாஜ், யாக்கை ஆகிய இரண்டு கதைகளிலும் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களின் தன்மைகளும், மசாஜ் செண்டர்கள் பற்றின விவரணைகளும் பேசப்பட்டிருக்கிறது. 

/குண்டுப் பெண்மணி குடிக்க பிளாஸ்டிக் சாடியில் நீரும் இரு வெண்கலக் குவளைகளையும் கொண்டுவந்து வைத்தாள். வெளிச்சத்தில் இன்னும் பிரமாண்டமாகத் தெரிந்தாள். அவள் சைஸுக்குக் குட்டைப் பாவடையும் ஸ்லிவ்லெஸ்ஸும் வெடிப்பது போல பிதுங்கிக் கிடந்தன. சாடியில் இருந்த நீரை ஊற்றும்போது மார்பு வெளியே வந்து விழுந்தால் என்ன செய்வது என பதறிப் போனேன்/

என்று மசாஜ் கதையில் வரும் இதுபோன்ற தேவையற்ற வருணனையைத் தவிர்த்திருக்கலாம். இங்கு ஆண்குரல் அதிகம் வெளிப்படுகிறது. இத்தொகுப்பின் ஆண் பாத்திரங்கள் பெரும்பாலும் முரட்டு ஆண்களாகவே இருக்கிறார்கள். பேச்சி-யில் வரக்கூடிய செல்வம் பாத்திரம் அதன் உச்சம் எனலாம். மசாஜ், யாக்கை, பேச்சி கதைகளில் ஆண்களின் இச்சை வெளிப்பாட்டின் ஆழத்தை எழுதியிருக்கிறார். தகப்பன்களின் கதைகளாகவும் (வண்டி, யாக்கை) சிலவற்றைக் குறிப்பிடலாம். மனிதர்களுக்கு இடையேயான வெறுப்பின் கணங்களையும், அன்பின் கணங்களையும் நவீனால் வெளிப்படுத்த முடிகிறது. ஜமால், கதைசொல்லிக்கு உதவினாலும் சீண்டும் பண்பு இறுதிவரை மாறதவனாகவே இருக்கிறான். வெள்ளைப் பாப்பாத்தியில் முட்டிக்கொள்ளும் குழந்தைகளான கொடிமலரும், கணபதியும் இறுதியில் புன்னகையுடன் ஒரு நட்பு சமிக்ஞை இடுகிறார்கள். யாக்கையில் வரும் அப்பனுக்கும் கோபிக்கும் இடையிலான பூசல், பேச்சிக்கும் செல்வத்திற்குமான உரசல்கள் என்று மனிதர்களின் இருவித கணங்களையும் எழுதிச் செல்கிறார். 
*
மனிதர்களுக்கு நிகராக விலங்குகளும் இத்தொகுப்பை நிறைக்கின்றன. போயாக்-இல் வரக்கூடிய முதலைகளும், உராங்கூட்டானும், நாகம் கதையில் வரக்கூடிய மஞ்ச ராசா பாம்பும், பேச்சி-யில் வரும் முனி பன்றியும், கொம்பன் எனப் பெயரிடப்பட்ட நாயும் (இரண்டு கதைகளில் நாய்க்கு கொம்பன் என்று பெயரிட்டுள்ளார்) என்று கதைமாந்தர்களுடன் அஃறிணைகள் பயணிக்கின்றன. வெள்ளைப் பாப்பாத்தியில் கொடிமலருக்கு இணையாக வெண் வண்ணத்துப்பூச்சியின் இருப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. புறச்சூழலில் வாழும் அஃறிணைகள் நமது பிரக்ஞையுணர்வின் அடுக்குகளில் அதன் மீதான நம் சுரத்து தன்மைக்கேற்ப தாக்கம் செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. 
*
இத்தொகுப்பில் நடுத்தர வர்க்கத்தின் பாடுகளையும் காணலாம். சுவாரஸ்யமாக இவையனைத்தும் புதிய புதிய நில அமைப்புகளைச் சுற்றி நிகழ்கின்றன. பேச்சி கதையைத் தவிர மற்ற கதைகளில் பெண்கள் பண்டமாகவே இருக்கின்றனர். ஆண்மையச் சமூக நெருக்கடிகளே அதன் காரண ஊக்கியாக உள்ளன.
*
போயாக், நாகம், பேச்சி ஆகிய கதைகள் மாந்திரீகம், தொன்மம் சார்ந்தவை. போயாக் ஈபான் பழங்குடிகளை வாசகருக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. அப்பழங்குடிகளின் முழு வாழ்வையும் சுட்டுகிறதா என்றால் இல்லை. அங்கு வேலை செய்யவரும் ஆங்கில ஆசிரியரின் வழியாய் கதை விரிகிறது. அவனின் இருப்பும், அம்மக்களின் நம்பிக்கைளில் அவன் கொண்டுள்ள பதற்றத்தையும் சுற்றியே கதை இருக்கிறது. மாந்திரீகம் சார்ந்த நம்பிக்கைகளை ஈபான் பழங்குடிகள் தங்களின் விழுமியங்களாகக் கருதுகின்றனர். இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது ‘பேச்சி’தான். அவளின் இடதுகால் பாதத்தின் சிகப்பு வண்ணம் நினைவில் தற்கணம் வரை நிற்கிறது. தொன்மங்களை நோக்கிச் செல்கையில் நம் அசல் தெரியவரும். அதைப் பெருமிதத்துடன் இணைக்காமல், தெரிந்துவைத்துக்கொள்வதுடன் முன்னோக்கி செல்வதே சிறந்தது. பேச்சியம்மாவின் தொன்மம் இக்கதையில் பேசப்பட்டுள்ளது. குலத்தை அழிப்பவளும், செழிக்கவைப்பவளும் ஒருவளாகவே இருக்கிறாள். தொன்மத்திடம் சரணாகதியாய் ஆகும்வரை அச்சுறுத்தலும், ஆகிய பின் காப்பரணாகவும் மாறும். இது ஒருவித நம்பிக்கையின் அடிப்படையில் காலந்தோறும் மக்களின் கூட்டு மனநிலைக்குள் சேகரமாக இருக்கின்ற தன்மை. ‘பேச்சி’யும் அப்படியே. கதையில் பொன்னி பேச்சியாக இருந்து செல்வத்தின் ஆண்மைய செயல்பாடுகளுக்கு எதிரான பெண்மைய தாக்குதலை தொடுக்கிறாள். பேச்சிக்கு பூசையிட்டு சரணடையும்போது முனி பன்றியிடமிருந்து செல்வத்தைக் காக்கிறாள்.
*
நவீனின் போயாக் கதையை மட்டும் முன்பு இணையத்தில் வாசித்திருக்கிறேன். ஒரு தொகுப்பாக இதுதான் முதன்முறை. எழுத்துமுறை கதைசொல்லும் போக்கை சிதைக்காமல், நேர்த்தியுடன் எழுதக்கூடியவராக நவீன் இருக்கிறார். நூலின் எழுத்துப்பிழைகளையும் கொஞ்சம் கவனத்துடன் கையாண்டிருக்கலாம்.

நூல் – போயாக்
ஆசிரியர் – ம.நவீன்
வெளியீடு – யாவரும் பதிப்பகம்

நன்றி – கன்னிமாரா நூலகம்,சென்னை.

Comments

Popular Posts