கட்டைக்கால் பெரியப்பா

Painting - widener collection 


சிலந்தி வந்து காலெடுத்தப் பிறகு
ஒருகால் கட்டைக்கால்தான் பெரியப்பாவுக்கு
டக் டக் சத்தம் கேட்டாலே வருகிறாரென்று
புத்திக்கு உரைக்கும்
பாவோடிகள் அடசல் முடித்து
பாவுப் பிணைக்க கூப்பிட்டால் நோகாமல் செல்பவருக்கு
புளிப்பு மிட்டாய்க்காக
சிரட்டை தழும்ப கோந்தினைச் சுரண்டி வருவேன்
நன்றாக உண்பவரென்பதால்
அம்மா சூட்டியப் பெயர் பெருந்தீனி
தரை விண்டு பெயர்ந்து வருவதற்கான பழியையும்
பரிசுப்பெட்டியில் அவருக்கு தந்தனுப்புவாள்
சம்பாத்தியத்தில் பாதியை தருவதாலேயே
வீட்டாருக்குள் மெலிதாய் துளிர்த்திருந்தது
எப்போது வேண்டுமானாலும் உடைபடும் சகிப்பு
இயேசு கதைகளையும்எம்ஜிஆர் கதைகளையும்
சொல்லி தூங்க வைப்பவரை
கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள மட்டை ஊறுகாய்
வாங்கிவந்த நாள்தான் கடைசியாய்ப் பார்த்தது
சாமத்தில் கோபித்துக்கொண்டு கிளம்பியபோது
விடிபல்பினைச் சுற்றிவரும் விட்டிலாய் கண்ணுற்றேன்
தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு
இரண்டு கால்களாலும் விருட்டென்று சென்றார்
ஆம் இரண்டு கால்களாலும்

Comments