ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் - பகிர்வு
சிறுகதைகளின் போக்குகளும் அதன் புழங்குவெளிகளும் காலத்திற்கேற்ப வெவ்வேறான தகவமைப்பை நிகழ்த்தியவாறு இருக்கின்றன. புதிய வாயில்களை புதுக்குரல்கள் திறக்கின்றன. அத்திறப்புகளில் மதிஅழகனின் வருகையும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. எட்டுச் சிறுகதைகள் அடங்கியத் தொகுப்பாக ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் இருக்கிறது. ஒற்றைத் தன்மையிலான கதைசொல்லல் முறையை மதி கையாண்டிருக்கிறார். இது வாசிப்பு மனதிற்கு சில நேரங்களில் தடையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு கருத்தியலை எடுத்து அதனைச் சுற்றி பாத்திர அமைப்புகளைத் தேர்ந்து கட்டமைத்து உருவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அறிவின் வழியாக இக்கதைகள் அணுகப்பட்டிருக்கிறது. இவற்றில் பனிச்சுடலை மட்டும் சிறுதெய்வ வேரினைத் தொட முயற்சி செய்துள்ளது. பெரும்பாலான கதைகளில் ஒரு பாத்திரம் கதையைத் துவங்க வேறொரு பாத்திரம் அதை முடித்துவைக்கிறது. புத்தர், பைபிள், சிலப்பதிகாரம், ஆண்டாள், சுடலைமாடன் போன்ற முன்னத்திகளைப் படிமங்களாக கதைகளில் கையாண்டிருக்கிறார். அதன் சாராம்சங்களை எடுத்துக்கொண்டு மாயப் புனைவாய் எழுதிப் பார்த்திருக்கிறார் மதி. பின்னட்டையில் குறிப்பிட்டிருக்கும் எதார்த்தத்தை முற்றிலும் மறுதலித்த கதைகள் இவை என்ற அறுதியை முழுமையாகக் கொள்ளமுடியவில்லை. எதார்த்த உலகில் இருந்தே இக்கதைகள் பிறக்கின்றன. பிற்பாடு அதன் போக்கு மாயத்திற்குள் நுழைகிறது.
ஒவ்வொரு கதையிலும் பிராதானப் பாத்திரத்திற்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறது. மனரீதியிலும், புற உலகம் வழியாகவும் அப்பிரச்சினையை அப்பாத்திரம் எதிர்கொள்கிறது. கேள்விகளுக்கான பதிலைப் பாத்திரங்கள் தேடுகின்றன. சிக்கல் மிகுந்த அதன் முடிச்சை அவிழ்ப்பதாய் நீண்டு செல்கிறது கதைகள். அம்முடிச்சை வாசிப்பவர்களும் அவிழ்க்கும் தேவையை உருவாக்குகிறது. பாத்திரங்கள்(சில) முட்டாளாக இருக்க விரும்பாதவையாக இருக்கின்றன. கூடுதல் அறிவுடன் வார்த்தைகளை பிரயோகிக்கின்றன. இதனாலேயே Quotes நிரம்பிய தொகுப்பாக இருக்கிறது. இது எல்லாமும் எழுத்தாளனின் குரல் என்று புரிந்துகொள்ள முடிகிறது. மொழிபெயர்ப்புத் தன்மையில் கதைகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாதுதான். மார்கழியில் ஒரு காதல் கதை எனும் கதை காதல் x காமம் என்கிற உள்ளடக்கம் கூடிய நகைச்சுவை கதையாக இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள ஒரே நகைச்சுவை கதை இதுதான். நாடகமாக சொல்லப்பட்டதால் விதூஷகன் மூலம் அவ்வங்கதத்தை உணர முடிகிறது. இருந்தாலும் நாடகமாக்கிய இடங்களில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
கதைகளுக்குள் வரலாறுகள் சொல்லப்படுகிறது. சில கதைகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், அதாவது இசை கதையில் இசை பிறந்த வரலாறு புனைவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பலூன் கதையிலும் தான். பலூன் கதை ஒருபுறம் அறிவியல் கதையாகவும் இருக்கிறது. அதேபோல ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும் கதையில் காப்பிய காலக்கட்டத்தின் மாந்தர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறா
சாபம் பற்றி ஆராய்ந்தவன் குறிப்புகள், பனிச்சுடலை ஆகிய கதைகள் அமானுஷ்யங்கள் கொண்ட மாயத்தைப் பேசுகின்றன. சாபம் கதை சாபத்தைக் குறித்து ஆராய்பவர்களின் பார்வையில் பயணித்து வேதகாமத்தின் சாபக் குறியீடான பாம்பைக் கொண்டு முடிகிறது. இதில் இந்து மதத்தின் தர்மனை அதாவது காலனையும் வேதகாமத்தையும் இப்பாம்பு இணைக்கிறது. ஒருசில கதைகளைத் தவிர்த்து மற்றயனைத்தும் நேரியல்பற்ற கதைகள். அந்நேரியல்பற்ற பண்பைச் சரியாகக் கையாண்ட கதையாகப் பனிச்சுடலை இருக்கிறது. ஒரு மரணத்தின் பின்னணியை ஆராயச் சென்று அதிலுள்ள அமானுஷ்யத்தை அறிந்து சுடலைமாடனில் வந்துமுடிகிறது. இது லண்டனில் நடக்கும் கதை. அங்கு மரண தேவனுக்கும் மயானத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இங்கு சுடலை மாடனுக்கும் மயானத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இந்த இரண்டு புள்ளிகளும் இக்கதையில் இணைகின்றன.
முடிவாய், இக்கதைகள் அனைத்தும் உள்ளுள் எழும் கேள்வி, அதனையொட்டிய சிந்தனை, அதனெழுச்சியாலான தேடுதல், பின்னர் தெளிவை கண்டடைதல் என்ற கோர்வையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித நுண்ணுணர்வின் அலைகளை இத்தொகுப்பில் குறைவே. உணர்வு வெளிப்பாடுகளுக்கான தேவைகள் ஆங்காங்கே, பனிச்சுடலை போன்ற கதைகளில் வெளிப்பட்டிருந்தாலும் முழுமையான ஒன்றை கடத்தவில்லை. அதற்கு முன்கூறிய அறிவின் நிலையிலிருந்து பிறந்த கதைகளாகவே இவை இருப்பதும் ஒரு காரணி. ‘ஆசையும் ஆச்சரியமும்தான் மனிதனின் முதல் கதைக்கான ஆரம்பம்’ என்று மதி எழுதியிருப்பதுபோலவே அவ்வாரம்பத்தின் முதற்படியைத் தொட்டிருக்கிறார் என்று என்னளவில் நம்புகிறேன்.
(மேலும் எனக்கு சிந்தனைப் பள்ளிகளின் மீது புகாரிருந்ததில்லை. ஆனால் அதை பின்னட்டை குறிப்பில் முன்மொழிந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.)
நூல் ~ ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும்
ஆசிரியர் ~ மதிஅழகன் பழனிச்சாமி
வெளியீடு ~ எதிர்
Comments
Post a Comment