கங்கு - சிலப் பகிர்வுகள்



கங்கு இன்னமும் சுட்டிருக்க வேண்டும்எடுத்தாண்டிருக்கும் களம் தற்காலப் போக்கில் முக்கியமானதுஅதனாலேயே சில இடங்கள் கூடுதல் கவனத்துடன் அணுகப்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறதுநினைவுவழிக் குறிப்பாக இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளதுமேலவளவு படுகொலை கிளைக்கதையாக வருவதும்லீலாவதி கொலை உரையாடல் வழியாகச் சொல்லப்படுவதும் புனைவிலக்கியத்திற்குள் ஆவணப்படுத்துதல் கையாளப்பட்டிருக்கிறதுசிற்றரசுவின் பார்வையில் விரியும் கதையில் நாகேசு என்கிற ஒற்றையாளின் ஒடுக்குதலுக்கு எதிரான கிளர்ந்தெழுதல் நாயக பிம்பமற்று எளிய மனிதனின் சட்டப் போராட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. முதற்பக்கத்தில் ‘சாதியத்தால் மனிதமற்று திரிந்த காலத்திற்காக மன்னிப்புக் கோருகிறேன்’ என்று சுயத்தைக் கேள்விக்குட்படுத்திய நாவலாசிரியரின் குரல் முற்றிலும் வரவேற்கத்தக்கது. மேலும் இந்நாவலையொட்டி சில எண்ணங்கள் உள்ளுள் எழுகிறது.


1.    நாகேசுவின் முன்னெடுப்புகளுக்கு பதினெட்டாம்படி போன்ற சொந்த சமூக ஆள் சில தருணங்களில் குழப்பம் விளைவிப்பவராக வருகிறார். வரலாறு முழுக்க ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு அவ்வாட்களாலேயே சில இன்னல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதனால் பதினெட்டாம்படி போன்ற பாத்திர அமைப்பை நாவலாசிரியர் உருவாக்கியது பிழையன்று. இறுதியில் அவன் திருந்தி நாகேசுவின் பக்கம் நிற்கிறான். அது திடீர் தன்மையாய் நிகழ்கிறது. அதற்கான விவரிப்புகள் ஏதுமில்லை. Dilemma மனவமைப்பை உடைய பாத்திரமாகவும் கொள்ளமுடியவில்லை. தன் சமூகத்தவர் தாக்கப்படும்போது அறமானது பதினெட்டாம்படியின் கண்ணைத் திறந்திருக்கலாம்.

 

2.    ஒடுக்கப்படும் தரப்பினரிடையே பதினெட்டாம்படி போன்றப் பாத்திரத்தை காண்பித்திருப்பது சரியென்றாலும், அடிவார சாதி-இந்துக்களில் ஒடுக்கப்படும் தரப்பிற்காக பேசுவதற்கான பாத்திரத்தை அமைத்திருக்கலாம். பாண்டியின் பக்கத்துவீட்டுப் பெண், மூக்குத்திப் பெண் ஆகியோர் ஒடுக்கப்படும் தரப்பிற்கு ஆதரவு குரல் நீட்டியிருக்கிறார்கள் என்பதை புறந்தள்ள முடியாதுதான். ஆனால் அவர்கள் இரக்கப்படுதலின் குரலாக மட்டும் ஒலிக்கிறார்கள். இந்த இடத்தை நாவலாசிரியர் இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம்.

 

3.    கல்லொடைக்கையில் அதன் சத்தத்தை எண்ணுவதாக சிற்றரசு கூறுகிறான். அது இந்நாவலில் திடீர் கணமாக நிகழ்கிறது. அவ்வொலியை வரையப் பிரயத்தனப்படுகிறான். இதுவும் திடீர் ஞானம்தான். இப்படி சில திடீர்கள் இந்நாவலில் உண்டு. ஒலியைச் சித்திரமாக்கும் சிற்றரசுவின் துணிவையெண்ணி நாகேசு வியப்பதாக சொல்லப்படுகிறது. உடனே ‘கொஞ்ச நாளைக்கு எதுவுமே வரையாதடா, ஒன்னையவும் நம்மளை சுத்தி இருக்குறதையும் உன்னிச்சு பாரு. அதெல்லாம் ஏன் எதுக்குன்னு ஒனக்குள்ளயே ஓட்டிப் பார்த்து பதில தேடு’ என்கிறார். இந்த குரல் நாகேசு என்கிற எலக்ட்ரிசயனுடையது அல்ல. அவரிடம் சாமானியனின் குரலே பிரதிபலிக்கும். இது அப்பாத்திரத்தை மீறி வெளிப்பட்ட நாவலாசிரியரின் குரல். இதுபோன்ற பாத்திரப் படைப்புகளில் சில விதிவிலக்குகளும் உண்டுதான்.

 

4.    ஸ்கல்ப்ச்சர் கோர்ஸ் சார்ந்த உரையாடலின்போது, “நான் எப்படி ஸ்கல்ப்ச்சர் செய்வேனு நீ முடிவு பண்ணுன” என்று சிற்றரசு கேட்க, அதற்கு நாகேசு “டேய் ஒங்க அப்பா அம்மா காணாத கல்லா, மண்ணா. நம்ம மல ஒன்ன அறியாமலே ஒனக்குள்ள இருக்குடா. நீ அங்க போயிட்டு சொல்லுவ பாரு’ என்கிறார். கலையை தனக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக நாகேசு இப்படி கூறியுள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் மாற்றுக்கோணத்தில் பார்த்தால், பெற்றோர்கள் கல்லுடைப்பதைப் பார்த்து மனச்சங்கடத்திற்குள்ளாகி அதை ஓவியமாக்கும் சித்திரக்காரனாக மாற சிற்றரசு எத்தனிக்கிறான். அதைப் புரிந்துகொள்பவராக நாகேசு இருக்கிறார். அப்படி புரிதல்கொண்டப் பாத்திரம் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டாம். இது சிற்றரசுவின் பெற்றோர்களின் வலியை உள்வாங்காத மேம்போக்கான சொல்லாடலாகியிருக்கிறது. மலை சிற்றரசுவிற்குள் இருக்கிறதென்றால் அம்மலையை அவன் கடக்க வேண்டும். மலையென்பது அவனது கிராமம். அண்ணல் அம்பேத்கர் கிராமங்கள் தீண்டாமையின் பிறப்பிடம் என்று சொல்லியிருக்கிறார். அதனால் கிராமங்களைவிட்டு வெளியேறி நகரத்திற்குள் நுழையவேண்டும். சிற்றரசு படிப்பின் பொருட்டு நகரத்தை நோக்கி விரைந்திருக்கிறான். இன்னும் விரைவான்.

 

5.    அடிவாரத் தரப்பினரிடம் இறுதிவரை மனம் திருந்தாத, வருந்தாதப் பாத்திரங்கள் எதுவுமில்லை. அப்படி திருந்திய பாத்திரங்களை அமைப்பதற்கான வெளி நாவலில் உள்ளது. எதார்த்தத்தில் ஒடுக்கப்பட்ட தரப்பினரின் குரலாக ஒலிக்கும் இடைநிலை சமூக மனிதர்கள், குறைவென்றாலும் இருக்கவேதானே செய்கிறார்கள். மேலும் அப்படி அமைக்காதது நாவலின் மையச்சரடினைச் சிதைக்கவில்லை.  

 தவிர, முத்துராசா குமாருக்கே உரிய மொழியும், காட்சிப்படுத்துதலும் நாவலில் விரவியிருக்கிறது. பாறையை மண்டவெல்லமாகப் பார்க்கின்ற படிமம் அவரிடம் தொடர்ந்து வெளிப்படுவதை கவனிக்க முடிகிறது. சிற்றரசு அப்படிப் பார்ப்பதாக சொல்லப்பட்டாலும் அந்த கண்கள் நாவலாசிரியருடையதுதான்.        


Comments