அந்தியில் திகழ்வது - எதிர்வினைக்கு எதிர்வினை



அந்தியில் திகழ்வது தொகுப்பு குறித்தான எனது பகிர்விற்கு நண்பர் சிலம்பரசனின் எதிர்ப்பு :

அந்தியின் திகழ்வது குறித்த இவ்வாசிப்பு பகிர்வானது அக்கவிதைகளை ஒற்றைத்தன்மையால் அணுகுவதாக தோன்றுகிறது.எந்த கவிதையையும் நேரடியான பொருளுக்குட்படுத்தி பார்த்தல் என்பது அதன் எல்லைகளை சுருக்கி பார்ப்பது போல.இதில் மேற்கொள் காட்டப்பட்டிருக்கும் ஊற்று கவிதை வே.நி.சூர்யா எழுதிய மிகச்சிறந்த கவிதைகளுள் (தேவதச்சன் கவிதையின் சாயல் இருந்தாலும்) ஒன்றாக நான் கருதுகிறேன்.இப்பதிவில் சொல்லப்பட்டிருப்பது போல இவ்வுலகத்தில் பிறந்தால் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் அதனால் துக்கம் மேலிடுவதாக என்னால் அந்த கவிதையை பார்க்க முடியவில்லை.இந்த மனநிலையை வயதானவர்களிடத்தில் வெகு இயல்பாக காணவியலும் அல்லவா? ஒரு குழந்தையை கைகளில் ஏந்துகின்ற கணத்தில் அவர்களுடைய ஓட்டுமொத்த வாழ்வும் மின்னல்வெட்டாய் வந்துவிட்டு போகும்போது துளிர்க்கின்ற கண்ணீரின் விரிவாக இக்கவிதையை பார்க்கலாம்.அதையும் தாண்டி அந்த துக்கம் குழந்தையை குறித்தானது என்று மட்டும் பார்க்க முடியாது.இனி அடையவியலாத ஏதுமற்ற நிலையை குறித்தான ஏக்கத்தின் வெளிபாடாகவும் கருதலாம்.அது தான் சாகிப்கிரான் அவர்களுடைய கட்டுரையில் வெளிப்பட்டிருக்கிறது என தோன்றுகிறது.மற்றொன்று‌ அக்கட்டுரையில் வெளிப்பட்டிருக்கும் கருத்தானது அவருடைய வாசிப்பின் வழியாக கொண்டிருக்கும் ஒரு பார்வை அல்லது தற்கால தமிழ் கவிதையின் மீதான ஒரு அவதானம் மட்டும் தான்.அது இறுதியானது அல்ல.அது எந்தவிதத்தில் முழுமையாக சாத்தியம் என்று உரையாட வேண்டியிக்கிறது.ஆனால் அந்த உரையாடல் இந்த பகிர்வில் வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது.

"இறுதியில் யாவும் தருணங்கள் தானா ?"கவிதையில் ' கொஞ்ச நேரமாவது ' என்ற வரியொன்று இருக்கிறது.அது மட்டுமல்லாது அதை மனித வாழ்வோடு மட்டும் என்னால் தொடர்புப்படுத்தி பார்க்க முடியவில்லை.இப்பிரபஞ்சத்தின் தொடர் நிகழ்வில் நிகழும் ஒரு நிறுத்தத்தைக் குறித்த கனவு என்று கூட அதை கருதலாம்.ஆனால் அப்படியொன்று நிகழ்ந்தால் அதன் வினை எவ்வாறு இருக்கும் என அதை பெருக்கிக் கொண்டே போக முடியும் சாத்தியம் அந்த கவிதையில் உள்ளது
மொழியாக்கத்தின் தாக்கம் வே.நி.சூர்யாவின் கவிதையில் மேலதிகமாய் இருப்பது ஏற்புடையது தான்.அது எந்தளவு கவிதையை உயர்த்தி அல்லது நெருக்கி பிடிக்கிறது என்பதை பற்றி பேச வேண்டியது இருக்கிறது தமிழ்.

தனியனின் உலகம் எந்தளவு வாசகனை வெளி நிறுத்துகிறது அல்லது உள்ளே அனுமதிக்கிறது என்பதைக் குறித்தும் பேச வேண்டி இருக்கிறது.அதே போல அக்கறையற்ற, அரசியலற்ற என்று coining யை ஏற்க முடியவில்லை.
இப்பதிவு ஏற்பில்லா ஒரு விஷயத்தின் மீதான ரொம்பவும் மோலேட்டமான அவசரமான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.
இதில் கூறப்பட்டுள்ளதை தாண்டியும் அக்கவிதைகளில் கவனிக்கத்தக்க நிறைகளும் குறைகளும் நிறையவே இருக்கின்றன.

எனது தரப்பு :

அந்தி என்கிற ‘ஒற்றைத் தன்மை’யை சுற்றி புனையப்பட்டுள்ளது இத்தொகுப்பு. சில கவிதைகள் வெளியிலும் இருக்கின்றன.  இந்த ‘ஒற்றைத் தன்மை’யான கவிதைகளில் தனிமை என்கிற ‘ஒற்றைத் தன்மை’ இருக்கிறது. அவற்றில் மட்டுமில்லாமல் வெளியில் இருக்கின்ற கவிதைகளிலும் தனிமை என்கிற ‘ஒற்றைத்தன்மை’ இருக்கிறது. போற்றுவோம் நண்பர்களே, அலைகளை எண்ணுபவன், கண்களும் வெற்றிடமும், எனக்கு மனம் கிடைத்துவிட்டதே, மே 16 2020, நீல வதனம், விதி, மாபெரும் அஸ்தமனம், நிழலாக இருப்பது நன்று நிழலாக இல்லாமலிருப்பது அதனினும் நன்று, வீடுகளின் வீடு, வெளியேற்றம், லீலை, பரிசு...etc இவ்வாறு இத்தொகுப்பில் தன்னை மட்டுமே பிரதானப் படுத்தும் ஏராளக் கவிதைகள் உண்டு. தனக்கான உலகத்தை உருவாக்கி பழைய பாடுகளிலிருந்து மீட்டெடுப்பதற்கான இடம் உள்ளது. அந்தப் புதிய உலகத்தில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர் ‘ஒற்றைத்தன்மை’யில் மட்டுமே சிந்திக்கிறார். இதற்குப் பெயர் நேரடியாக பார்த்துப் புரிந்துகொள்வதில்லை. தொகுப்பின் மனநிலையே ‘ஒற்றைத்தன்மை’யில்தான் இருக்கிறது. இதை நான் மிகத் தெளிவுடனும் திடமாகவும் சொல்கிறேன்.
 
ஊற்றுக் கவிதையினை மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக கருதுவதாய் சொல்கிறீர்கள்? எதனடிப்படையில் சொல்கிறீர்கள்? 
\\ ஒரு குழந்தையை கைகளில் ஏந்துகின்ற கணத்தில் அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்வும் மின்னல்வெட்டாய் வந்துவிட்டு போகும்போது துளிர்க்கின்ற கண்ணீரின் விரிவாக இக்கவிதையை பார்க்கலாம்// என்றால் அந்த ஒட்டுமொத்த வாழ்வு இங்கு என்னவாக இருக்கிறது? அப்படி மின்னல்வெட்டாய் வரும்போது ஏன் கண்ணீர் வருகிறது? பிறகு இந்தக் கவிதையில் இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும் அந்த பஞ்சுக்கன்னத்தை என்று குழந்தையின் அழுகையைப் பற்றி சொல்கிறார். அந்த அழுகை குழந்தைக்கு ஆனந்த கண்ணீராகவும், துக்க கண்ணீராகவும் இருக்கலாம். மனித வாழ்வில் ஆனந்த கண்ணீர்களில் இடத்தைக் காட்டிலும் துக்க கண்ணீர்களின் இடமே அதிகம். பிறந்த குழந்தையின் மீது துக்கத்தை ஏற்றுவது என்னளவில் வாழ்வைப் புரிந்துகொள்ளாதப் பார்வையே. அந்தக் குழந்தை வளரட்டும், வாழ்க்கை பாடுகளைப் பார்க்கட்டும். அது முடிவெடுக்கட்டும். உங்கள் முடிவுகளை பிஞ்சுக் குழந்தையிடம் ஏற்ற வேண்டாம் என்பதே என் வாதம். மேலும் கவிஞர் ஆகா எனக்கு ஆனந்தமாக இருக்கிறது என்று கவிதையை முடிக்கவில்லை. துக்கமாக இருக்கிறது என்றுதான் சொல்கிறார். துக்கம் என்ற பகுதி உண்மையை ஏற்றுக்கொண்டாலும், பிறந்தாலே துக்கம் மட்டும்தான் கிடைக்கும் என்று ஒற்றை மனப்பான்மையில் கவிதையிருக்கிறது. அதனாலே இங்கிருப்பதை விட்டு வெளியேறி வேறொரு உலகத்தை கட்டமைக்கும் ‘ஒற்றைத்தன்மை’யிலான கவிதைகள் கடற்கரையில் நுரைக்கும் அலைகளைப்போல நொதித்து கிடக்கின்றன. அந்த அலைகளை தனியன்கள் எண்ணலாம். அவர்களால் ஒருபோதும் மனிதர்களை எண்ணமுடியாது. மேலும் இக்கவிதையில் வரும் துக்கம் குழந்தையை குறித்தானது மட்டும் என்று நான் சொல்லவில்லை. சாகிப் கிரானின் பார்வையானது தற்கால தமிழ் கவிதையின் மீதான ஒரு அவதானம் மட்டும் தான் என்று சொல்லியுள்ளீர்கள். சாகிப் தற்கால தமிழ் கவிஞர்களில் யார் யார் கவிதைகளை வைத்து இந்த அவதானத்தை சொல்லியுள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். 

அக்கறையற்ற, அரசியலற்ற கவிதைகள் என்று காய்னிங் செய்யவில்லை. உண்மையில் அது குறித்தான எந்த இடமும் இக்கவிதைகளில் இல்லை. முடிந்தால் தொகுப்பை மறுபார்வையிட்டுப் பாருங்கள். எதை வைத்து உங்களுக்கு நான் காய்னிங் செய்வதாகப்படுகிறது என்று புரியவில்லை. ஒருவேளை இப்பகிர்வைக் குறித்தான உங்களின் பார்வை ‘ஒற்றைத்தன்மை’யில் இருப்பதால் இது தோன்றலாம். மேலும் இத்தொகுப்பு எனக்கு ஏற்பில்லா ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை சக மனிதனைப் பற்றி யோசிக்காதவர்களை கருத்தில் கொள்ளமாட்டேன். சக மனிதன் பற்றியான குறைகள், நிறைகள் இருக்கலாம். ஆனால் மனிதர்களே இல்லாமல் இருப்பது தன்னை அனைவரிடத்திலிருந்தும் விலக்கிக்கொள்ளும் மனநிலை. அந்த மனநிலையைக் கொண்டவர்களின் உலகம் எனக்குத் தேவையில்லாத ஒன்று. ‘இறுதியில் யாவும் தருணங்கள் தானா?’ கவிதையை மனித வாழ்வோடு மட்டும் என்னால் தொடர்புப்படுத்தி பார்க்க முடியவில்லை என்று சொன்னீர்கள். இத்தொகுப்பையே என்னால் மனித வாழ்வோடு தொடர்புப்படுத்தி பார்க்க முடியவில்லை. இப்பிரபஞ்சத்தின் தொடர் நிகழ்வில் நிகழும் கனவு எனக்குத் தேவையும் இல்லை. இது தன்னை மட்டும் பற்றிய ஒரு பொழிப்புரை என்று சொல்லமுடியாதென்றாலும் சில கவிதைகள் அப்படித்தான் இருக்கின்றன.

மேலும் இத்தொகுப்பை பலமுறை வாசித்ததன் அடிப்படையிலிருந்து அணுகப்பட்ட பார்வையேத் தவிர, நீங்கள் குறிப்பிடும் அவசரப் பார்வை இதிலில்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இதில் கூறப்பட்டதை தாண்டிய நிறைகளும் குறைகளும் இத்தொகுப்பில் நிறையவே இருப்பதாய் சொல்கிறீர்கள். அந்த ‘நிறையவே’ குறித்து கூறுங்கள். உரையாடுவோம்.

Comments