அந்தியில் திகழ்வது - தன்னை மட்டுமே குறித்தான பிரதானம்
நான்
இருபத்தி இரண்டு ஆண்டுகள்
படிப்பு வேலை தொழில்
எல்லாம் பார்த்தாகிவிட்டது
சந்தித்த முகங்கள்
மறக்கத் துவங்கியாயிற்று
என் தாய் இப்பொழுது விதவை
வானொலிப் பெட்டிகள் மாற்றப்பட்டு
வானொளிப் பெட்டிகள் வந்துவிட்டன
கோடிக்கணக்கான வார்த்தைகள் சேர்ந்து
எங்கும் கவிதைகளாய்த் தெரிகின்றன
பழைய புதிய இலக்கியங்கள்
வெளிவந்தவண்ணமிருக்கின்றன
கட்சிகள் உடைந்து
ஏராளமாய்ப் புதிய கட்சிகள்
தோன்றியுள்ளன
ஏராளமான தலைவர்கள் இறந்துள்ளனர்
புதிய புதிய தலைவர்கள் உருவாகி வருகின்றனர்
தெருக்களின் பெயர்கள் மாறி வருகின்றன
புதிய நகர்ப்புறங்கள் உருவாகியுள்ளன
விஞ்ஞானத்தில்
மெய்ஞ்ஞானத்தில்
ஏராளமான சாதனைகள் நிகழ்கின்றன
பல போர்களை
உலகெங்கும் பார்த்தாகிவிட்டது
இதோ உலகப்போர்
இதோ உலகப்போர்
என்ற அச்சம் பலமுறை வந்துவிட்டது
இனி போரே இல்லை
இரு பக்கமும் சமம்
என்ற குரலும் பழகிவிட்டது
அணுப் போருக்குப் பின்
புதிய சமுதாயம்தான்
என்றும் அச்சுறுத்தியாகிவிட்டது
இருந்தும்
இன்னும் ஒரு முறைகூட
அண்டை வீட்டானுடன் பேசியதில்லை
ஆத்மாநாமின் இக்கவிதையின் உட்பொருள் அந்தியில் திகழ்வது தொகுப்பின் ஒட்டுமொத்தப் பண்பினையும் விவரிப்பதாகப்படுகிறது. தன்னை மட்டுமே பிரதானப்படுத்தும் ஆழ்ந்த சிந்தனைகளால் விரவிக்கிடக்கும் இத்தொகுப்பில் மனிதர்கள் குறைவாகவே தென்படுகிறார்கள். இத்தொகுப்பினைப் பற்றி கவிஞர் சாகிப்கிரான் ‘ஓர் அமைதி நிறுத்தற்புள்ளி’ என்கிற கட்டுரையில் “மனித லட்சியத்திற்கு உதவக்கூடிய புதிய வடிவங்களோ, உத்திகளோ தோன்றுவதற்கான அவசியம் என்பது எவ்வளவு அவசியமில்லை என்பதை ஒரு படைப்பாளி முற்றாக தன்னுணர்வும் நுண்மையும் அடைந்துவிட்ட பிறகு படைப்பு செயலிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்வதற்கு ஒப்பான ஒரு ஒத்திகையாகக்கூட அத்தகையாக ஏதுமற்ற எளிமையைப் புரிந்துகொள்ளலாம். இது தன்னியல்பான உள்ளொளியின் அல்லது மனம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் ஒரு எதேச்சையான உத்தியாகவே இருக்க வேண்டும்.” என்று கூறுகிறார். சாகிப் குறிப்பிடும் ஏதுமற்ற எளிமையானது படைப்புச் செயல்பாட்டில் இருக்கக்கூடிய ஒருவர் தன்னை அரசியல் நீக்கமற்றவராக, சக மனிதர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடுபவராக காட்டிக்கொள்கிறார் என்று கருதலாம். அது தனியன் என்கிற மனோபாவத்திற்கு வித்திடுகிறது. அத்தனியன் தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி, அதனுள்ளே சுழன்றபடி இருக்கிறான். அவனுக்கு சக மனிதர்களின் பாடுகள் பற்றிய அக்கறையில்லை. ‘இறுதியில் யாவும் தருணங்கள்தானா?’ கவிதையின் முதல் வரிகளில்,
இருள் தொட்டதெல்லாம் கண் காணாமல் ஆகிவிடுகிறது.
தண்ணீர் தொட்டதெல்லாம் ஈரமாக
வானம் தொட்டதெல்லாம் புரிந்துகொள்ள முடியாததாக..
நான் இருக்க வேண்டும்
கொஞ்ச நேரமாவது
எதையும் தொடாமலும்
இயன்றால் எதனாலும் தொடப்படாமலும்.
இக்கவிதையில் வரக்கூடிய தனியன் எதையும் அண்டாமலும், எதனாலும் அண்டப்பாடமலும் இருக்க வேண்டும் என்கிற மனநிலையைக் கொண்டுள்ளான். ‘மாபெரும் அஸ்தமனம்’ என்கிற கவிதையில் ‘தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்...’ என்று முன்சொன்னதை உறுதியுடன் சொல்கிறான். அதையே விரும்புகிறான். அதுவே தன் சுவர்க்கம் என்று நம்புகிறான். அவனால் தன்னைத் தாண்டி வெளியில் பெரிதாக யோசிக்க முடிவதில்லை. அவனுக்கு அவனே பெரும் சிக்கலாக இருக்கிறான்.
மாபெரும் அஸ்தமனம்
அந்திவானில் மகத்தான ரத்தத்துளிகள்
அதன் ஒளிப்பரிவாரங்களோடு
அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது.
அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்.
ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது.
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்...
ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி
எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே?
ஒருவேளை வீட்டை இழுத்துச் சாத்திவிட்டு
வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்?
இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை
வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா?
என்னுடையா நானே திரும்பி வராதே...
நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு,
அதுவே உன் சுவர்க்கம்.
அவன் இருப்பின் மீதான சங்கடங்களை வேறொரு இடத்திற்கு பெயர்வதன் மூலம் அதாவது வேறொரு இருப்பில் பொருத்திக்கொள்வதன் மூலம் நிவர்த்தி செய்துகொள்ள முடிகிறது. அதனாலேயே இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு திரும்பி வராதே என்கிற குரல் பலமாக ஒலிக்கிறது. இது ஒருவகையான தப்பித்தல்தான்.
இருக்கக்கூடிய இருப்பே பிரச்சினையாக உள்ளதால், பிறக்காமல் இருப்பதன் மூலம் அதனை சரிசெய்துவிட முடியுமா? அது எப்படி சாத்தியம்? இயற்கைக்கு புறம்பான கருதுகோள் இல்லையா இது? ஆனால் ‘ஊற்று’ கவிதையின் பூடகமே இதுதான்.
ஊற்று
பிறந்து சில நாட்களேயான குழந்தையைப் பார்ர்கச் சென்றிருந்தேன்
சாவகாசமாகத் தொட்டியில் உறங்கிக்கொண்டிருந்தது
உனக்கோ பெயரில்லை கரடுமுரடான நேற்றில்லை
நானும்தான் இருக்கிறேன்... பார்த்தாயா?
இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும்
அந்தச் சிறிய பஞ்சுக்கன்னத்தை,
உலகத் துக்கம் அழுந்தத் தொடாத அந்த மிருதினை
தொட்டுப்பார்த்தேன்.
பறக்கப் பழகாத கழுகுக் குஞ்சே
ஒரு பெரிய கதையின் முதல் எழுத்தே
எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே
எனக்குத் துக்கமாக இருக்கிறது.
இவ்வுலகத்தில் பிறந்தால் துன்பத்திற்கு நிச்சயம் ஆளாகவேண்டியிருக்கும்; அதனால் சமீபத்தில் பிறந்த குழந்தையைப் பார்க்கும்போது துக்கமாக இருக்கிறது என்கிறது கவிதை. மனித வாழ்வே அப்படித்தானே. பிறப்பார்கள், இறப்பார்கள் அதற்கு நடுவிலே ஏற்ற இறக்கங்களையும் சில கரடுமுரடுகளையும் சந்திப்பார்கள். எல்லோருக்கும் பொதுவான அம்சம்தான் இது. அதற்காக நாம் துக்கப்படத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
‘விதி’ கவிதையில் தவறுதலாய் வீட்டார்களால் வீட்டிற்குள் பூட்டப்பட்ட தனியன், வீட்டிற்கு வெளியிலிருந்தால் நடப்பவற்றை சேர்த்தும் வீட்டிற்குள் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள் என்றும், அவர்களை எதிர்பார்த்தப்படி காலாட்டிக்கொண்டு காத்திருப்பதாகவும் கவிதை முடிகிறது. வீடானது தனியனுக்கு சிக்கல் மிகுந்த இருப்பாக இருக்கிறது. ஒவ்வொருமுறையும் அவன் அதைத் தாண்டவே நினைக்கிறான். வீடென்றால் அதில் உள்ளவர்கள் மனிதர்கள்தானே. ஆக வீட்டு மனிதர்கள் தனியனுக்கு சிக்கலாக இருக்கிறார்கள்.
இத்தொகுப்பில் தனியனுக்கு கடற்கரையும், அலைகளும், அந்தியும், இலையும், நீல வதனமும் கொடுத்த பூரிப்பை மனிதர்கள் கொடுக்கவில்லை என்பது கவலையளிக்கவே செய்கிறது. இதில் வாசகனாக கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லைதான். ஆனால் தனியனுக்கு நிழலாக இருப்பது நன்றாகவும் அல்லது நிழலாக கூட இல்லாமல் இருப்பது அதனினும் நன்றாகவும் இருப்பதைப் பற்றி புரிந்துகொள்ள முடிவதால் ஒரு வாசகனாக நான் தனியனைவிட்டு மனிதர்கள் அதிகம் இருக்கும் உலகத்திற்கு செல்வதே சரியென்றுபடுகிறது.
மேலும் ‘அந்தியில் திகழ்வது’ பற்றி ‘இன்மைகளில் வலிகளின் நோய்மையின் அழகியல்’ கட்டுரையில் எழுத்தாளர் சமயவேல் கருத்தொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.
“வே. நி. சூர்யாவின் வாசிப்பை நான் நேரடியாக அறிவேன். உலகின் மிகச் சிறந்த கவிகளை எல்லாம் அவர் தேடித் தேடி வாசித்து வருகிறார். வாசிப்பு முறைகளிலேயே மிகச் சிறந்தது ‘மொழிபெயர்ப்பதன் மூலம் வாசிப்பது’ என்பதை அறிந்திருப்பதால், சூர்யா கவிதை மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மிகச் சிறந்த உலகக் கவிதைகள், சூர்யாவின் அகத்தில் ஆன்ம பெலத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது தலை முட்ட, வயிறு முட்ட, மனசு முட்ட கவித்துவத்தை நிரப்பியிருக்கிறது. ‘அந்தியில் திகழ்வது’ தொகுப்பு முழுவதுமே அவரது ஆன்மாவின் விகசிப்பதைக் கேட்க, உணர முடியும்.”
வாசிப்பு முறைகளிலேயே மிகச் சிறந்த வாசிப்பு ‘மொழிபெயர்ப்பதன் மூலம் வாசிப்பது’ என்று சொல்லியுள்ளார். எதனடிப்படையில் இதனை திடமாக சொல்கிறார் என்று புரியவில்லை. மேலும் அதற்கான உதாராணங்கள் எதுவும் தரவில்லை. அந்தியில் திகழ்வது தொகுப்பின் கவிதைகள் மொழிபெயர்ப்புத் தன்மையோடு இருப்பதால் சமயவேல் சொல்வதில் பகுதி உண்மையும் இருக்கிறது. மற்றபடி தன்னை தனியன் என்று நம்புகிறவர்களுக்கு இத்தொகுப்பு நெருக்கமாகவும், ஆன்மத் தரிசனத்திற்கு வழிவகுக்கும் வகையிலும் இருக்கும்.
- தமிழ்மணி
Comments
Post a Comment