அவன் (குறுங்கதை)
அந்த மனிதன் எல்லா வகையிலும் புறக்கணிப்பையே பரிசாய் பெற்று வளர்ந்தவன். அவனுக்கென்று எதுவும் நிலையாக இருந்ததில்லை. பெற்றவர்கள் அவனை செல்லமாக சுமை என்றுதான் அழைப்பார்கள். நண்பர்கள் வட்டாரத்தில் அவனது பெயர் அதிர்ஷ்டமில்லாதவன். அவன் என்ன செய்தாலும் போதாது என்கிற பதில் மீண்டும் மீண்டும் துரத்தும். போதாது-விற்கு பயந்துகொண்டே ஒளிந்துகொள்ள இடம்தேடி அலைவான். அவன் நேரத்திற்கு ஒளியவும் இடம் கிடைக்காது. அவன் துயரப்பட்டவன், பாவப்பட்டவன் என்பதை உங்களுக்கு நிரூபிக்க முன்கதைகளை சொல்லி அலுப்புறச் செய்ய விரும்பவில்லை. அவன் எந்தளவுக்கு பாவப்பட்டவனென்பதை ஒரு வரியில் சொல்லி முடித்துவிடுகிறேன். ‘பரமபத விளையாட்டில் தொண்ணூற்றொன்பதாவது கட்டத்தில் வீற்றிருக்கும் நாகத்தை இவன் ஒருமுறைகூட தாண்டியதில்லை’. இப்படிப்பட்ட ஒரு மனிதனை நீங்கள் எங்கேனும் நிச்சயம் பார்த்திருக்கலாம். சவரக் கண்ணாடியிலும் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.
அன்று அவனை பெண்வீட்டார் பார்க்க வந்தனர். இது எத்தனாவது பெண்வீட்டாரென்று எனக்கே சந்தேகமிருக்கிறது. எத்தனைமுறை பற்களை மேலிருந்து கீழாக துலைக்கியிருப்பேனோ அத்தனைமுறையாகக்கூட இருக்கலாம். மாப்பிள்ளையிடம் என்ன இருக்கிறது, எத்தனை சொத்துகள் வைத்துள்ளார் போன்ற கேள்விகளை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவனின் காதுகள் மலட்டுத் தன்மையை நோக்கித் தள்ளப்பட்டுவிட்டது. கேள்விகளுக்கு இவனும் சலிக்காமல் தொடர்ந்து பல்வேறு பதில்களை தொடுத்து நின்றாலும், அவர்களின் ஒரே வார்த்தை ‘போதாது’ மட்டும்தான். இம்முறை இவர்களும் அதே பஞ்சாங்கத்தை சரமாரியாக அவன் முன் வைத்தார்கள்.
மாப்பிள்ளைக்கிட்ட கார் இருக்கா?
இல்ல.
அட்லீஸ்ட் பைக்?
இல்ல.
மாசம் இரண்டு லட்சம் சம்பளமாவது வருமா?
இல்ல.
நகை நட்டு நிலம்னு எதாவது உண்டா?
ம்கூம்..
என்னப்பா எதுனாலும் இல்லனு சொல்ற, அப்ப ஓங்கிட்ட என்னதான் இருக்கு?
புடுக்கு மட்டுந்தான் இருக்கு.
இதை சொன்ன கணமே தன் கால்சராயை கழட்டி, உள்ளாடையை பிய்த்தெறிந்து நிர்வாணம் பூண்டு நின்றான். அவனை நன்றாக உற்றுப்பார்த்தனர்.
‘ம்....போதாது’........
Comments
Post a Comment