'அரிசி' - பவித்ரன் தீக்குன்னி கவிதை குறித்து!


பவித்ரன் தீக்குன்னியின் 'அரிசி' கவிதையானது குடும்ப அமைப்பிலுள்ள பெண்ணை மையமாகக் கொண்டு  கட்டமைக்கப்பட்டுள்ளது. அவரின் 'கோழியும் நரியும்' கவிதையுமே பெண்ணை மையப்படுத்தியதே. அக்கவிதையில் வரக்கூடிய பெண், தனக்கான தருணம் வரும்வரை எதிர்பார்த்து காத்திருந்து ஆணின் அதிகாரப்போக்கினை கீழிறக்குபவளாக புனையப்பட்டிருப்பாள். அக்கவிதை ஆணின் பார்வையிலிருந்து பெண்ணை அணுகியிருக்கும். 'அரிசி' கவிதை அதிலிருந்து விலகி குடும்ப அமைப்பிலுள்ள பெண்ணில் இடர்களை பேசக்கூடியதாக இருக்கிறது. இதில் முதலில் வரும் பெண் சித்திரம், எளிய குடும்ப அமைப்பினைச் சார்ந்தவள்; பசியைப் பற்றி உணர்ந்தவள். அவளை உடைந்துபோகும் மண்பானையோடு தொடர்புபடுத்தியிருப்பதிலிருந்து வர்க்கரீதியாக கீழ்நிலையில் இருக்கிறாள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல், இரண்டாவது பெண் சித்திரமான அம்மு அக்காள், வர்க்கரீதியில் மேல்நிலையில் இருக்கிறாள் என்பதை செம்புப் பானையில் சோறு பொங்குவதன் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். கவிதை பேசியிருப்பது வர்க்கரீதியாக கீழுள்ள பெண்ணைப் பற்றியே. அவளின் வாழ்நிலையை 'அரிசி'யைக் கொண்டு உவமைப்படுத்தியிருக்கிறார். அம்மு அக்காளின் அரிசி சோறாகிறது. இவளின் அரிசி, அரிசியாகத்தான் இருக்கிறது என்று தீக்குன்னி சுட்டியிருக்கும் இடத்தின்வழி அவளின் குடும்ப சூழலும், எதிர்கொள்ளும் சிக்கல்களும் என்றைக்கும் நிலையானதுதான், அது மாற்றம் காண்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறார். சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிகளும் உதவிகளும் 'அம்மு அக்காள்' போன்ற காரணிகளின் மூலம் நடந்தாலும் எதார்த்தமென்பது உடைந்து விழும் பானைதான்.


     இக்கவிதையை வாசிக்கும்போது, எஸ். காமராஜ் எழுதிய பிள்ளைச்சோறு கதை நினைவிற்கு வந்தது. வறுமையின் பின்னணியில் உழலும் பெண், தன் குழந்தையின் பசியினை தீர்ப்பதற்காக எடுக்கும் சிரத்தையே கதை. யாரிடமும் கையேந்தக் கூடாது என்கிற இருமாப்பும் அவளிடம் இருக்கும். எங்கும் சோறே கிடைக்காமல் இருக்கும்போது எதிர்வீட்டு பெண்ணொருத்தி 'எங்க நம்ம கருவாயன்' என்று கேட்டுக்கொண்டே குழந்தைக்கு பிள்ளைச்சோறு கொண்டு வருவாள். இந்த எதிர்வீட்டுப் பெண்ணே பவித்ரன் தீக்குன்னியின் அம்மு அக்கா.


     

Comments