அண்ணன்களின் தம்பி


அண்ணன்களின் தம்பி (குறுங்கதை)

அண்ணன்கள் என்னை களமிறக்கிவிட்டது என்மீது கொண்ட நம்பிக்கையினால்தான். எனக்கும் நம்பிக்கை அவர்கள்மேல் அளவுக்கதிகமாய் இருந்தது. அண்ணன் ஒருவர் துப்பிய எச்சிலை கூவி கூவியே சந்தையில் விற்றேன். இன்னொரு அண்ணன் நாற்றமாய் விட்ட குசுவை மல்லிகையில் ஏற்றி பூக்கடை பஜாருக்கு கொண்டு சென்றேன். அண்ணன்கள் செய்து தரும் அனைத்தையும் விற்கும் சூசகம் எனக்குத் தெரியும். புதிய அண்ணன்களிடம் பேசினால் பழைய அண்ணன்கள் கோபித்துக்கொள்வார்கள். புதியவர்களுக்கும் பழையர்களுக்கும் இடையில் பாயாச வாளியோடு என்னை நீங்கள் எப்போதும் பார்க்கலாம். என்னைப் பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசுவார்கள். நீதான் தம்பி நாங்கள் நிறுவப்போகும் நாற்காலியில் ஏறி அமர சரியான ஆள் என்று தினந்தோறும்  சொல்லி வைத்தார்கள். ஒரு முறை என்னை குனிய சொல்ல, சரியாக அதை என்னால் செய்யமுடியவில்லை. முதலில் ஒரு அண்ணன் கோபித்தார். பிறகு ஒவ்வொரு அண்ணன்களும் கோபித்தார்கள். விலக்குவதை தொடர் செயல்பாடாக்கிய அவர்களிடம் மீண்டும் மீண்டும் என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் நாற்காலியை அடைந்தே ஆகவேண்டுமே!

ஒரு பகலில், அண்ணன்கள் பல நூறு நாற்காலிகளை உருவாக்கினார்கள். அதில் பல நூறு பேர்களை ஏற்றினார்கள். ஏறியவர்கள் அனைவருமே எனது சிநேகிதர்கள்தான். என்ன ஆச்சரியம், அவர்கள் அனைவருக்கும் எனது முகம் அப்படியே இருந்தது. நாற்காலியில் இருந்து இறங்கி, ஒன்னுக்குபோக ஒதுங்கிய எனது சாயலிடம் கேட்கும்போது சொன்னான். நீங்கள் குனிய சொல்லும்போது ஏன் குனியவில்லை, நாங்களெல்லாம் மண்டியே இட்டோம்.

Comments