அசமந்தம் - பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்தான பார்வை!
அசமந்தம் – பெரு. விஷ்ணுகுமார்
---------------------------------------------
கற்றுக்கொடுத்தது என்னமோ
தன்னிடம் இருக்கும் ஒன்றை மறையச்செய்து
மீண்டும் அதை
அதே இடத்தில் தோன்றவைக்கும்
ஒரு எளிய மந்திரத்தைதான்.
காதில் விழாததுபோல் நிற்குமிந்த மரங்களோ
அதனைச் செய்துமுடிக்க
இலையுதிர் முடிந்து வசந்தகாலம் வரட்டும் என்கின்றன.
(அகழ் இணைய இதழ்)
முதலில் இயற்கை சார்ந்த கவிதையென்று நினைத்திருந்தேன். அறிவின் வழியாக அணுகினால் இது கவிதையே இல்லை என்றும், கற்பனாவாதத்தின் வழியாக அணுகினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கவிதைதான் என்றும் இரு குரல்கள் எனக்குள் கிளம்பின. இரண்டும் விவாதங்களாகி குழப்ப நிலைக்கு தள்ளியது. தொடர் வாசிப்பில் பிடிபட்டுவிட்டது. மனிதர்களின் அசமந்தத்தன்மையை, இயற்கையை பாடுபொருளாகக் கொண்டு விஷ்ணு எழுதியிருக்கிறார். அதிலும் இரண்டு தரப்புகள் என்னளவில் தோன்றியது.
இயற்கைக்கு அசமந்தம் உண்டா என்றால், அது தன்னை வெளிப்படுத்தும் தன்மையை நாம் ஊகமாகத்தான் கொள்ளமுடிகிறது. இதுதான் இயற்கை செய்யுமென்று உறுதிபட கூற முடியாது. ஆனால் இயற்கை மீது நாம் வகுத்துள்ள பருவநிலைகளை, அதாவது கோடை, குளிர், வசந்தம் போன்ற நீண்ட காலநிலைகளை அறிந்திருக்கிறோம். பருவநிலைகள் மாற்றம் காண்பதற்கு சில காலங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. மனிதர்களுக்குமே தங்களுக்குள்ளிருக்கும் சிக்கலை கண்டறிவதற்கும், திருத்தம் காண்பதற்கும் காலங்கள் தேவைப்படுகின்றன. அதனை அவர்களின் அசமந்தம் தடுக்கிறது. அதாவது, தள்ளிப்போட்டுக்கொள்ளாலாம் என்கிற அலட்சிய செயல்பாடு நம்மிடையே அதிகமுள்ளது. குறிப்பாக, ‘எளிய மந்திரம்’ என்று கவிதையில் ஓரிடம் கையாளப்பட்டிருக்கிறது. எளிமை என்று நாம் கருதும் ஒவ்வொரு செயலின் மீதும் ஏளனத்தையும், அலட்சியத்தையும், எளிதில் முடித்துவிடலாமென்கிற தன்மையையும் கொண்டிருப்போம். அதுவே அதன் மீதான விலகலை அதிகரிக்கவைக்கிறது. இதில் இன்னொரு பார்வையும் எனக்குள் இருக்கிறது, கற்றுக்கொடுத்தது என்னமோ என்கிற கவிஞரின் குரலானது அறிவுச்செயல்பாட்டினரின் (Intellectual) பிரதிநிதியாக உள்ளது. கற்றுக்கொடுத்தது என்னமோ………… ஒரு எளிய மந்திரத்தைதான், இங்ஙனம் எளிய மந்திரமானது சிலருக்கு எளிமையாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்கலாம் இல்லையா?. ஆசிரியரின் கற்றுக்கொடுத்தலில், மாணவர்களுள் சிலர் எளிதில் கற்றலை கைகொள்வதும், சிலர் அசமந்தமாக இருப்பதும் இயற்கையே. ஒட்டுமொத்தமானவர்களுக்கும் எளிமையான காரியமென்று இங்கு எதுவுமில்லை என்பதே என் தரப்பு. அது அவரவரின் வாழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் காணும். தன்னை மேலாக கருதுபவர்களிடம் ஒரு சிக்கலிருக்கிறது. தான் கண்டடைந்த இடத்தை அறிவுச்செயல்பாட்டில் இல்லாதவர்கள் காணவில்லையென்பதுதான். ஆக, எதார்த்த வாழ்நிலையில் இருப்பவர்கள் அசமந்தமாக இருக்கிறார்கள் என்கிற மேலாதிக்க மனநிலையை கவிதை வெளிப்படுத்துகிறது. இக்கவிதையில் எளிமையை எல்லோருக்குமான பொது இடத்தில் கொண்டால் முன்சொன்ன அவதானமான மனிதர்களின் அலட்சியப்போக்கினை கவிதை சொல்கிறது எனலாம். அறிவுச்செயல்பாட்டினரின் தொணியிலிருந்து எளிமை எடுத்தாளப்பட்டிருக்கிறது என்றால், இரண்டாவது கூறிய அவதானத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மரங்கள் காலங்களுக்கு ஏற்ப தன் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலை தொடர் செயல்பாடாக இருக்கும். மனிதர்களும் அப்படியே. அவன் இந்த வாழ்க்கை முழுவதும் பண்படுதலை கற்றுக்கொண்டே இருக்கிறான். அவன் வாழ்க்கையின் வெளியிலிருந்தாலும், உள்ளேயிருந்தாலும் படிப்பினையானது மரணம் வரை தொடர்கிறது. முடிந்தவரை வாழ்க்கையின் உள்ளேயிருக்கவே நான் முயற்சி செய்கிறேன் / விரும்புகிறேன்.
Comments
Post a Comment