சீமுர்க் - பாலசுப்ரமணியம் பொன்ராஜ் சிறுகதை குறித்து!
"பரிநிர்வாணத்தை அடைந்தவர்களாலும் கூட வாழ்வின் சலிப்பில் இருந்து தப்ப முடியாது"
- தியோடர் ராவுல் ஹஸ்க் (கதையிலிருந்து)
நிகழ்காலத்திய எழுத்தாளனின்(கதைசொல்லி) எழுத்து சார்ந்த முடக்கத்தினை மத்தியகாலத்தில் வாழ்ந்த கஸ்வினி எனும் எழுத்தாளனின் எழுத்து முடக்கத்தோடு ஒன்றிணைத்து அதிலிருந்து இருவரும் விடுபடும் கணத்தினை இக்கதையின் மையச்சரடாக கருத்தில் கொள்ளலாம். கஸ்வினிக்கு 'இபின்-சினா'வினுடைய பிரதியைப் படிப்பதால் ஏற்படும் முடக்கம், கதைசொல்லிக்கு ஜூவாதானோ புருனோ வாழ்க்கை வரலாற்றினை வாசிப்பதன் வழியே ஏற்படுகிறது. கஸ்வினிக்கும், கதைசொல்லிக்கும் ஒப்புமை இருப்பதை கதையினை தொடர்ந்து வாசிக்கையில் உணரமுடிகிறது. [கஸ்வினி நூல் ஒன்றை எழுதுகிறார்; கதைசொல்லி கதை ஒன்றை எழுதுகிறார்; இருவருக்குமே முடக்கம் ஏற்படுகிறது. கஸ்வினிபோல நானும் புத்தகம் வாசிப்பேன் என்று கதைசொல்லி கதைக்குள்ளே எடுக்கும் குரல், இருவரும் உள்முகக் கேள்விகளால் குழப்பம் அடைவது போன்றவை உதாரணம்.]
வரலாற்றில் உள்ள பாத்திரங்களை அறிமுகப்படுத்தி கூடவே அவர்களின் அறிவின் தன்மையும் சுட்டப்படுகிறது. அத்தகு பாத்திரங்கள் எழுத்தாளர்களாகவும், வரலாற்றாசிரியர்ளாகவும் உள்ளார்கள். குறிப்பிட்டு சொல்லப்போனால் அறிவுச் செயல்பாடுடைய துறையினராக உள்ளார்கள். இது கதையினையும் அதன் மாந்தர்களையும் விட்டு அகன்று தரவுகளின் வழியில் கட்டமைக்கப்படுகிறது. இதனை கதைசொல்லியும் கதையினூடே குறிப்பிடுகிறார்.
"கதையை விட்டு வெளியே ஒரு சில வரிகளை வாசிக்குமளவிற்கான பொறுமையுடையவர் நீங்கள் என்பதை இவ்வளவு தூரம் நீங்கள் இக்கதையை வாசித்ததிலிருந்து நம்புகிறேன்"
- கதைசொல்லி (கதையிலிருந்து)
*
கஸ்வினி போரின் அழுத்தத்தால் இடப்பெயர்வினை அடையும் நபராக இருக்கிறார். பல ஆசிரியர்களிடம் நேரடியாக ( உதா: முய்ன் அல் தின்) மற்றும் வாசிப்பின் வழி (உதா: இஸ் அல் தின் பின் அல் அதீர்) படிப்பினையைப் பெறுபவராகவும் இருக்கிறார். கதைசொல்லிக்கு இந்தத் தன்மை இருப்பதனை அவரின் குரல் ஒலிக்கும் இடத்திலும் கதையினை மொழிந்த விதத்திலும் அறிய முடிகிறது. பிரான்சிஸ் பேகன் 'அறிவே அதிகாரம்' என்றுரைத்தால், கதைசொல்லியோ 'அறிவு, நினைவுகள் சொல்லும் கதை' என்கிறார். நினைவின் வழியே இந்த கதை சொல்லல் முறையை பாலசுப்ரமணியம் பொன்ராஜ் (கதைசொல்லி) அணுகியிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
செங்கிஸ்கானும், அவரது பேரனும் போர்த்தொடுத்த நகரங்களில் வாழ்ந்திருக்கிறார் கஸ்வினி. இருவரின் அழித்தொழிப்பில் இருந்தும் தப்பித்திருக்கிறார். அவருக்கு மனதளவில் படையெடுப்புகள் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மங்கோலியர்களின் மூர்க்கத்தை அவர் கண்ணுற்றிருக்கிறார். இதேபோன்ற போர்ச்சூழலை கதைசொல்லியும் தற்கால போர்களை செய்திகளின் அடிப்படையில் முன்வைக்கிறார். கதைசொல்லியின் போர் குறித்தான கருத்து நிதர்சனத்தின் வெளிச்சமே.
"வரலாறு முழுக்க ஆண்களுக்கு 'போர்' வாளின் வடிவத்தில் (அ) துப்பாக்கியின் வடிவத்தில் தெரிந்தால், பெண்களுக்கு அது அன்றும் இன்றும் ஆண்குறிகளின் வடிவத்தில் மட்டுமே தெரியும்"
- கதைசொல்லி (கதையிலிருந்து)
மங்கோலியர்கள் பெண்களை வன்புணர்வு செய்வதை காணுகின்ற குதிரைகளின் குறிகள் விரைத்திருப்பதாகவே நம்புகிறார் கதைசொல்லி. இதனை ஏன் இப்படி சொல்கிறார் என்ற கேள்வி முதலில் எழுந்தாலும் இன்பமும் சித்ரவதையும் முழுவதுமாக விளக்கமுடியாமல், தான் திணறுவதை தன் லௌகீகத்தின் சிக்கலின்வழி ஒப்புக்கொள்கிறார். இங்கு குதிரைக்கு புணர்தல் ஒரு இன்பகரான காரியமாகப்பட்டாலும் அதன் ஐந்தறிவிற்கு ஆறறிவின் சத்தம் வன்புணர்வின் சித்ரவதை கதறல் என்று தோன்றாது.
படையெடுப்புகள் அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று முன்சொன்னதற்கு, மங்கோலியர்களால் பிரதிகள் எரிக்கப்பட்டதும் ஒரு காரணகர்த்தா. இதனாலேயே கதைத் தொடங்கும் முன் விளக்கால் ஒளிரும் படகுகளை கண்கொட்ட பார்க்கிறார் என்றும், அவ்வொளிப் புள்ளிகள் மறைந்த பின்னே மாளிகையின் மாடியிலிருந்து இறங்குகிறார் என்றும் கருதுகிறேன்.
*"உலகின் மர்மம் இன்னும் நீங்காதிருப்பதைப் போலவும் அதை அவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் போலவும் புதிதாக எழுத வரும் ஒவ்வொரு எழுத்தாளரும் கருதிக் கொள்கிறார். நான் செய்ய நினைத்திருக்கும் பணியின் மதிப்பும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து யாருடைய மேசையிலாவது அது அமர்ந்திருக்குமா? அல்லது இன்னொரு போர் வந்து எல்லா நூல்களையும் எரித்தும், ஆறுகளிலும் வீசிவிடுமா?"
(கதையிலிருந்து)
மேற்சொன்ன இச்சந்தேகம் கஸ்வினிக்கும் சரி, கதைசொல்லிக்கும் சரி ஒரே அளவில் உள்ளுள் ஒலிக்கிறது. இது அவர்களின் முடக்கத்திற்கு தூபமிட்டுச் செல்கிறது. இருவரின் முடக்கமும் கடைக்காரர் ஒருவர் சொன்ன "ஞானி"கதையின் வழியாக திறக்கப்படுகிறது. கஸ்வினிக்கு சாயம் பூசவருபவர் ஒரு கூற்றினை கதைக்குள் சொல்லி நகர்கிறார். "என்னவென்றே தெரியாமல்தான் சரியான இடத்தைக் கண்டுபிடித்து முலைப்பாலை அருந்தினோம். அப்போது நாம் பெயரற்றவர்களாகவும், நாம் அருந்துவதின் பெயரையும் அறியாதவர்களாகவே இருந்தோம்". என்று சாயம் பூசுபவர் சொன்ன கருத்தினை அசைபோடும் ஆளாகவும் "ஞானி" கதையின் (கதையில் ஞானிக்கு பெயர் கிடையாது; பெயரை ஒரு பொருட்டாக ஞானி கருதவில்லை) வழி திறப்பு கிட்டியதை உணரும் வாழ்வின் தத்துவத்தை புரிந்துகொண்டவராகவும் கஸ்வினி வெளிப்படுகிறார். அவர் திறப்படைந்த கணம் கதைசொல்லியும் தன் முடக்கத்தை தூர எறிந்து நாம் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கதையைச் சொல்லி முடிக்கிறார்.
ஞானி கதையானது கனவில் நிகழக்கூடிய ஒன்று. ஒருவேளை அக்கனவு வராமலிருந்திருந்தால் இக்கதை(சீமூர்க்) நிகழ்ந்திருக்காது என்று நினைக்கிறேன். எழுத்தாளனுக்கு சோர்வும் முடக்கமும் ஏற்படுவது இயல்பு. அதனை அவன் எதன்வழி கடந்து கரைதொடுகிறான் என்பது முக்கியம். பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் எனும் கதைசொல்லி கஸ்வினி வழியாக தன் முடக்கத்தைப் போக்கியுள்ளார். கண்ணில் காண்பவற்றை எல்லாமும் கதைக்குள் எடுத்து வந்துள்ளார் (கனகாம்பரம் சூடிய பெண் உட்பட). அது கதையின் வேகத்தை குறைத்தாலும் தன் இருப்பில் இருந்தே அனைத்தையும் அணுகுகிறார் என்று எடுத்துக்கொள்கிறேன். ஒரு கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டு அதனை பரிசோதித்து பார்க்கும் தன்மையான கதையிது.
சீமூர்க் என்பது நம் ஊரில் யாளி போன்ற கற்பனை விலங்கு மாதிரி பாரசீகத்தில் உள்ள கற்பனை விலங்கு(பறவை) என்று சொல்கிறார்கள். கஸ்வினி காலத்து மக்கள் ஃபேண்டஸியை தங்களின் நம்பிக்கையில் பொறித்து வைத்துள்ளார்கள் என்று பா.பொன்ராஜ் குறிப்பிடுகிறார். அந்த எட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தினை தொடுவதன் வழியாக தன் பாணியிலான கதையொன்றினை எழுதிப் பார்த்துள்ளார். முடிவில் அவருக்கான கதையை கற்பனை பறவையான சீமூர்க்கே தூக்கி வந்துள்ளது.
~ தமிழ்மணி
வாசிக்க :
சீமுர்க் - பாலசுப்ரமணியம் பொன்ராஜ்
Comments
Post a Comment