மாயப்பட்சி ~ பா. ராஜா கவிதைகள் குறித்து...
கவிஞர்களை அவர்களின் நிலம், தொழில் அடிப்படையில் – இந்தக் கவிஞர் இந்த நிலத்தைப் பற்றி நன்றாக எழுதுவார், இந்தத் தொழிலைப் பற்றி நன்றாக எழுதுவார் போன்ற பாகப்பிரிவினையானது தொடர்ந்து பேச்சுக்களாலும் எழுத்து வழியாகவும் சொல்லப்பட்டு வருகிறது. நானும் இப்படிச் சொன்னவன் என்பதில் விதிவிலக்கல்ல. நாம் ஒரு எழுத்தாளனை / கவிஞனை இதன் மூலம் ஒரு பெட்டகத்தில் அடைத்து விடுகிறோம். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் பா.ராஜா எனக்குள் அறிமுகம் ஆகும்போது ‘தறி’ சார்ந்து எழுதக்கூடிய கவிஞர் என்ற விதத்தில் அறிமுகமானார். ஆனால் கவிதைகளை வாசித்ததில் அவ்வறிமுகம் தவறு என்றேப்பட்டது. தன் வாழ்நிலத்தை படைப்பாளனொருவன் சமயம் வாய்க்கையில், அதன் தேவையின் பொருட்டும் எழுத்தில் வெளிப்படுத்துவான். அவ்வெளிப்படுத்தலே அவனது நிரந்தர அடையாளமென்று முத்திரையிட்டு கண்ணாடிக் குடுவைக்குள்ளிட்டு காட்சி செய்வதே சூழலில் தொடர்ந்து நடக்கிறது.
***
ராஜாவின் இத்தொகுப்பு தொழிற்கூடத்தில் மாட்டிக்கொண்டவனின் வாழ்நிலை பாடுகளும், குழந்தைகளின் உலகமும், பொதுமனிதர்களின் மன எண்ணங்களும் கலந்த கலவையானப் பிரதியாக வாசகனுக்கு காட்சிப்படுகிறது. புதுக்கவிதைகளில் கவிஞன் ஒரு தனிக்குரலாக ஒலிக்கின்றான். தனிநபரின் சிக்கலையும், வாழ்முறைகளையும் பேசுகிறான். அப்படியென்றால் சமூகத்திற்கானதாக புதுக்கவிதைகள் இல்லையா என்றால், அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. கவிதையை வாசிப்பவர்கள் கவிஞனின் உலகத்தோடு தொடர்புடையவர்களாக இருந்தால் அவர்கள் அக்கவிதையினைத் தனக்கானதாகக் கொள்வர். கவிஞனும் சமூகத்தில் தானே இருக்கிறான். அவனது கவிதைகளும் சமூகத்தில் இருக்கும் எவரையாது பிம்பமிட்டுக் காட்டும். மேலும் தனது அகச்சிக்கல், புறச்சிக்கல் அனைத்தையும் கவிதைக்குள்தான் சொல்லிவிடமுடிகிறது. சமூகத் தனியனாக கவிஞனானவன் இருக்கிறான் என்பதே எனதெண்ணம். இவ்வெண்ணம் மாறலாம், பாறை உடைந்து சிலையாகும் நாள் வரத்தானே செய்யும். ராஜா கவிதைசொல்லியாக வலி நிறைந்த வாழ்வினையே முதலில் எடுத்து வருகிறார். பின்னர்தான் அது வெவ்வேறு குணங்கள் கொள்கிறது.
தொகுப்பின் முதல் கவிதை “விசைத்தறிகளின் பற்சக்கரங்கள்” என்று ஆரம்பிக்கிறது.
விசைத்தறியின் பற்சக்கரங்கள்
காக்கி ட்ராயரின் புட்டத்துக் கிழிசலின் வழி
நிர்வாணத்தின் துளிகள் சில வெளிப்பட்டாலும்
பாக்கெட்டிலிருந்த கனவு
கசியாமல் வெகு பத்திரமாகத்தானிருந்தது
பிறகு
சூழ்ந்துவிட்டவொருப் பெரும்போரில்
புராதானப் பசியை போராடி வெல்லவியலா நிலையில்
புறமுதுகிட்டோடியதில்
தெறித்த அது
விசைத்தறியின் பற்சக்கரங்களில் விழுந்து
நெடுங்காலமாய் நசிந்துக் கொண்டிருக்கிறது.
இக்கவிதை தொழிற்கூடத்தில் தன் கனவுகளைத் தொலைத்த ஒருவனின் மனப்புலம்பல்களாய் உள்ளது. அக்கனவினை மீட்டெடுக்க முடியாமல் நதியில் அடித்துச் செல்லும் மரக்கொப்பைப் போன்ற ஒரு வாழ்வினை அதன் போக்கிலே வாழ்கிறான். இதனையொட்டியே இன்னொரு கவிதை “விரும்பும் உலகம்” எனும் தலைப்பில் தொகுப்பில் உள்ளது.
// டிபன் கேரியல்களே
விற்பனை செய்யப்படாதவொரு உலகினை
தெருமுனை ஓவியனிடம் வனையக்கூறியவன்
முற்றுப்பெறாத ஓர் ஓவியத்தின் முன்
மூப்படைந்து அமர்ந்திருக்கிறான். //
விரும்பிய உலகத்தினை அடைய எண்ணியெண்ணி அவனுக்கு மூப்பெய்தியதுதான் மிச்சம். அவனால் கடைசிவரை பழைய உலகத்தை மாற்றி அமைக்க முடியவில்லை அல்லது மாற்றி அமைக்கும் தொடர்நிகழ்வில் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கிறான். இரு கவிதைகளும் ஒரே உலகத்தைப் பற்றின இருவேறு மனத்தின் பிரதிகளே.
***
குழந்தைகளின் உலகத்திற்குள் வளர்ந்தவர்களான நாம் செல்வதற்கு நாமும் குழந்தைகளாய் மாற வேண்டியிருக்கிறது. இதை சாதாரணமாக எல்லோரிடத்திலும் பார்க்கலாம். குழந்தைகளைக் கொஞ்சும்போதும் விளையாட்டுக் காட்டும்போதும் குழந்தைகளாகவே மாற வேண்டியத் தேவை உள்ளது.
சமைப்பதற்கென
நறுக்கப்படும் வெண்டைக்காயின்
புறக்கணிக்கப்படும் முனைகளையெடுத்து
நெற்றி
கன்னம்
தாடையென அப்பிக்கொண்டு கடாப்பூதமாகி
முகத்தில் கோரச்சுழிப்பொன்றைக் காட்டி
திடுமென அச்சுறுத்தும் சிறுமியின் செயலுக்கு
பயந்து போவதாய் நடிக்கும் பொழுதுதான்
நம் கைக்குச்சிக்குகிறது
குழந்தையுலகத்து திறவுகோல்.
பெரியவர்களுக்கான உலகில் இருந்து சற்றுக் கீழறிங்கி, நிறுவனத்தன்மைக்குள் இருக்கும் ஒருவனது, கட்டளைக்கு அடிபணியும் தருணங்களையும் சம்பளத்திற்கு கட்டுப்படும் போலி முகத்தினையும் விடுத்து நெகிழ்வடையச் செய்து எந்த நபருக்கும் நிறுவனத்திற்கும் கட்டுப்படாமல் இருக்க ஒரு குழந்தையின் கையசைப்பிற்கு பதில் கையசைப்பு காரணமாகிறது.
எங்கள் நிறுவனத்திற்கு
விருந்தினராய் வந்திருந்த உங்களை
வெகுபத்திரமாய் வழியனுப்புவதற்கு
நியமிக்கப்பட்ட நான்
உங்களின் மிகச்சிறந்த சேவகன் என
ஊதியத்தை மனத்தில் வைத்து
நடித்து முடித்தாலும்
இறுதியாய் ரயில் மெல்ல ஊர்ந்தோடத் தொடங்கியதும்
ஜன்னலின் நீண்ட உங்கள் செல்ல மகளின்
பிஞ்சுக் கையசைப்பிற்கு
பதில் கையசைப்பு நான் செய்ததில்
நிறுவனத்தின்
கட்டளைகள் எதுமில்லை.
ராஜாவின் கவிதைக்குள் வருகின்ற பெரியவர்களும் சரி, சிறுவர்களும் சரி அவரவர்களுக்கான எதார்த்த குணாதிசயங்களோடே வருகிறார்கள். வயதை மீறிய பெரிய அறிவாளிகளாகவோ, மேதாவிகளாகவோ இல்லை. இதுதான் ஒரு படைப்பிற்கு முக்கியம். “அற்புதங்கள்” கவிதையில் வரக்கூடிய சிறுமி அதற்கொரு உதாரணம்.
\\ மிட்டாயொன்று கரைவதற்குள்
கால் நூற்றாண்டை அதில் அடக்குதல் போலான
அற்புதங்கள்
வளர்ந்தவர்களின் உலகில்
இல்லையென்பதை உணர்ந்தவள் //
குழந்தைகளின் உலகத்தில் நிகழும் அற்புதங்கள் நிச்சயம் பெரியவர்களின் உலகத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். அது ஒரு கனவு உலகம் போன்றுதான். அங்கே மாயாஜாலங்களுக்கு அனுமதி உண்டு. மீபுனைவுக்கு இடமுண்டு. பெரியவர்களின் உலகம் கேள்விகளையும், கவலைகளையும், நின்று மெதுவாய் முன்னேறும் அமைப்பையும் கொண்டது. குழந்தைகளுக்கு நிற்கவெல்லாம் நேரமிருக்காது. அவர்களுக்கு பறக்க வேண்டும். குழந்தைமையினை வெளிப்படுத்தும் வகையிலான கவிதைகளை ராஜாவிடம் அதிகம் பார்க்க முடிகிறது. “கோகுல்” என்ற சிறுவனின் சித்திரம் தொடர்ந்து கவிதைக்குள் பயணிக்கிறது. மேலும் “சீழ்க்கையொலிச் செருப்பு” மாதிரியான கவிதையையும் எடுத்துக்காட்டலாம்.
***
நகரமயமாக்கலின் அரசியலை தேவதச்சனின் “நிலவும் நிலவுகளும்” கவிதை வெளிப்படுத்தும். அதுபோல ராஜாவின் “வேம்பின் கசந்த நிழல்” கவிதையும் அதே அரசியலை முன்னிறுத்துகிறது.
// தற்போதவனுக்கு
ஒரு துண்டு நிலம் தேவையாயிருக்கிறது
இப்பெருநகரின் நிலப்பரப்பில்
அவனது விதைக்கான நிலத்தை
கண்டடையவியலாது களைத்தவன்
கண்ணயறுகிறான்
அவனது
தலையில் முளைவிட்ட வேம்பொன்றின்
கசந்த நிழல்
அப்பெருநகரின் மீதொரு
சூன்யமென கவியத்துவங்குகிறது. //
ஒரு பெருநகரம் ஒரு மரத்தின் விதையை விதைக்கக்கூட நிலமில்லாமல் இருக்கிறது. அந்த அளவிற்கு நில அழிப்புத் தொடர்ந்து நடைபெறுகிறது. கட்டிடங்கள் பெருகிவிட்டன. மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் பொருளீட்டுவதைப் பொறுத்தும் நகரங்களைக் கட்டமைக்கின்றனர். இந்த கட்டமைத்தலில் ஒரு வேப்பமரத்திற்கு இடமில்லை. அதனை விதைக்க நினைத்தவனின் தலையிலேயே நியாபகமாய் துளிர்விடுகிறது.
***
மனிதர்களிடம் எண்ணங்கள் பல்கிப் பெருகிப் பூதாகரமாய் நெஞ்சுள் புதையுண்டிருக்கின்றன. ஊரில் ஒரு பழமொழியுண்டு, “ எல்லாப் பாதைகளையும் தெரிந்தவன் சரியான இலக்கிற்குப் போய் சேரமாட்டான்”. மனிதன் தனது தேர்ந்தெடுப்பிலும், பயன்பாடுகளிலும் ஒருவித குழப்பவாதியாகவே இருக்கிறான். அவனால் எதிலுமே நிறைவைப் பெற முடிவதில்லை. அவனுக்குள் நீடிக்கும் குழப்பம் ஒரு சமயத்தில் தலையிலேறி அமர்ந்துகொண்டு அவனை அங்கேயே நிரந்தரமாக நிறுத்திவிடுகிறது. “புராதனக் குடுவை” அதற்கொரு நல்ல உதராணம். அக்குடுவையின் பயன்பாடு சார்ந்த குழப்பம் நீடிக்க கவிதையின் முடிவு வரியில்
// எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால்
சிரம் வெடித்துச் சிதற
கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை
சற்றே சிதிலமடைந்து. //
என்று இருக்கும். மனிதனின் பெரும் வியாதியே குழப்பம்தான். அது எளிதில் மண்டையில் ஏறி அமர்ந்துகொண்டு பரமபதம் நிகழ்த்திவிடுகிறது.
***
சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவிதைகளில் அழகாக எடுத்து இயம்ப முடியும் என்பது சமீபத்தில் நண்பர்களின் உரையாடலின் வழி அறிந்துகொண்டது. பறவைகள் மின்சாரம் தாக்கி மரணிப்பது நாம் அனைவரும் எதிர்கொண்ட ஒன்று. அந்தப் பறவைகளுக்காக மின்கம்பி வருந்துவது மாதிரி ஒரு கவிதை எழுதியிருக்கிறார் ராஜா. உயிர்களிடத்தில் மற்றொரு உயிரி பச்சாதாபம் காட்டுவது சாதாரணமொன்று. அதற்கு பதில் ஒரு உயிரற்ற பொருள் கருணை கொள்வதாக எழுதுவது கவிஞனுக்கு மட்டுமே சாத்தியம்.
ஒரு கைப்பிடி தானியங்களுக்காக
நாள் தோறும் வானத்தின் ஏதோவொரு மூலையிலிருந்து
இறங்கிவரும் பறவை
அதுவே எதிர்பாரதவொரு தருணத்தில்
மின்கம்பியில் சிறைப்பட்டு
கசக்கி வீசியக் காகிதமாய் மடிந்து வீழ்ந்தை
ஞாபகக்கிடங்கில் இறுத்தி வைத்திருந்த அக்கம்பி
கோடைகாலம் கழிந்து
மழைக்காலம் வந்த முதல் நாளில்
அழுதழுது ஓய்ந்துவிட்டப்பிறகும்
அணிவகுப்பில் தொக்கி நிற்கின்றன
நிறையக் கண்ணீர்த்துளிகள்
உயிர்குடித்த வேதனையில்.
இக்கவிதையில் பெரிதாக கவித்துவ மொழிதல் இல்லையென்றாலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்திற்கான காரணம் ராஜா கவிதைசொல்லியாய் மட்டுமில்லாமல் கதைசொல்லியாக இருக்கிறார். கவிதைக்குள் ஒரு கதையை அவரால் சொல்லமுடிகிறது. கவிதைகள் வலியையும், குழந்தைமையையும் சொல்கிறது என்று நோக்குடனே நகர்கையில் அங்கே பகடியாகவும் எழுதுகிறார். கடவுள் என்ற கவிதையுண்டு. எனக்கு தனிப்பட்டவிதத்தில் மிகவும் பிடித்தமான கவிதையிது.
கடவுள்
பிரார்த்தனைகளால் குரல்வளை நெறிக்கப்பட்டு
சுயநலச்சொற்களின் புளித்த வாடையால்
இருப்பு கொள்ளாமல்
கர்ப்பகிரகத்தினுள்ளிருந்து வெளிப்பட்ட கடவுள்
காலார நடந்து ஒரு முட்டுச் சந்தில் சிறுநீர் கழிக்க முற்பட
புதியவனை கண்டுவிட்ட நாயொன்று
முகத்தை கோரமாக்கிக்கொண்டு உறுமலோடு விரட்டியதில்
தெருவெல்லாம் மூத்திரமொழுகிக்கியபடி ஓட்டமெடுத்து
மதுவின் தள்ளாட்டத்தில் வந்த ஒருவன் மீது மோதி மூச்சிரைக்க
ஒரு அதட்டலால் அதை அடக்கிவிட்டு
உங்களுக்கேதாவது வேண்டுமாவென்ற அவனது சொற்களில்
அதிர்ந்த கடவுளுக்கு தான் கடவுள்தானாவென்ற சந்தேகம்
மெல்லத் துளிர்க்கிறது
ஆமோதிப்பதாய் தலையசைத்து அவனது கோவணத்தின்
முனையை
கிழித்துத் தரச்சொல்லி பெற்றுக்கொண்ட கடவுள்
அதனைச்சுருட்டி செவித்துளைகளில் சொருகிக்கொண்டு
பழைய நிலையிலேயே சென்றமர்ந்துக்கொள்ள
விடிகிறது பொழுது
பிரார்த்தனைகளுடன் வருகின்றனர் மனிதர்கள்.
மனிதர்களின் தொடர்புலம்பல்களைக் கேட்டு அச்சளாத்தியான கடவுள் காதிற்கு பஞ்சு வைத்துக்கொண்டால் நல்லாதானே இருக்கும் என்று நமக்கே தோன்ற வைத்துவிடுகிறது இந்தக்கவிதை. கிட்டத்தட்ட இக்கவிதை மனிதனை மட்டுமில்லாமல் கடவுளின் தன்மையுமே கேலிக்குள் கொண்டுவந்து நிறுத்துகிறது. இது நியாயமான கேலியும் கூட.
ராஜாவின் கவிதைகள் எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனும் தொடர் சங்கிலியாய் இயங்குகிறது. இது சரியா தவறா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை இருப்பினும் எளிய வாசகன் கவிதையை அணுகுவதில் இம்முறை செளகரியமாக உள்ளது.
***
மைபொதி விளக்கில் க. மோகனரங்கன் ஒரு விஷயத்தைப் புரிய வைத்தார்.
“ ஒரு நல்ல கவிதைக்கான தேட்டத்தில் ஈடுபடும் ஒருவன் அதிகமும் நம்ப வேண்டியது தன் உள்ளுணர்வையும் சொந்த ரசனை மட்டத்தையுமே. எந்த வரிகளின்முன் இதயத்தையும் மூளையையும் ஒருசேர நீ இழக்கவும் பெறவும் செய்கிறாயோ அதுவே உனக்கான கவிதை”.
இக்கூற்றின் வழியே எனக்கான கவிதைகளைத் தேடத் தொடங்கியுள்ளேன். பா. ராஜாவின் மாயப்பட்சி குறித்த எனது கருத்துகள் ஒரு வாசகப் பார்வையாக மட்டுமே முன்வைத்துள்ளேன்.
***
கவிதைய வாசிச்சி முடிச்சி கீழ உங்க விமர்சனத்த வாசிக்கும் போது.. ப்ச் ஆமால..னு தோணுச்சி தமிழ்.. அழகு💚
ReplyDeleteஅச்சளாத்தினா என்னங்கய்யா...?
ReplyDelete