திரை
1993 :
அடர் இருட்டு. கண்களில் பழைய தெளிவு இல்லை. பதற்றம் கூடிப்போன முகத்தை ஒட்டிக்கொண்டவனாக சுற்றி முற்றிப் பார்த்தான். இருக்கைகளில் தலைகள் மட்டும் தெரிந்தன. அதிலும் குறிப்பாக சிலரின் பிடறி மயிர்க்கற்றைகள், சிலரின் காதுகள், கிருதாக்கள், சிலரின் முகங்கள் தெளிவில்லாமலும். 'இதுயெனக்கு பெரிதாக சரிப்படாதயிடம் ஆயிற்றே’. மகன் என்னை இப்படி வற்புறுத்தி இங்கு வரவழைத்து துன்புறுத்துகிறான். ஐந்து வருடம் சென்றுவிட்டது, பழைய கசப்புகள் மறைந்துவிடும் என்று எண்ணி வந்திருந்தான். அக்கசப்பு அவனை மீண்டும் துரத்தியது. நண்பன் சேகரின் நியாபகம் தொரத்தியது. இராட்சத மின்விசிறிகள் பயங்கரமாக சுழல்றம. அதன் சப்தம் அவனை பயமுறுத்துயது. ஒரு மின்விசிறிக்கு நேரே வரிசைக்கட்டி இருக்கின்ற இருக்கைகளில் முதல் இரு இருக்கைகளில் அவனும் மகனும் அமர்ந்தார்கள். அவனின் முதுகுப்புறமிருந்து பேரொளியொன்று விரிந்து எதிரே பரந்து கிடந்த திரைச்சீலையில் மோதியது. சுற்றியிருந்த ஸ்பீக்கர்கள் அலறின. சுவர்களின் மூலைகளிலிருந்த வௌவால்கள் சிதறிப் பறந்தன.
1969 :
”நேத்து எங்கப்பா கூட அடிமைப்பெண் படத்துக்கு போனேன்ல..., எம்ஜிஆரு பின்னிட்டாரு தெரியுமா, இனிமே எம்பேரு வேங்கயன் சொல்லிப்புட்டேன் ஆமா”
”டேய் சேகரு நெசமாலயுமே படம் நல்லா இருக்காடா”
”அடேயப்பா நெசத்த சொல்லமா உன்னக்கெனக்க பொய் சொல்லிட்டா திரிவேன்”
”சேரி...வேங்கயன்னா யாரு”
“ஆ..படத்துல எம்ஜிஆரு பேருப்பி, நாளைக்கு படத்த பாத்துட்டு வந்து நீ தான் வேங்கயனு சொல்லுவ அதான் இப்பயே சொல்ட்டேன்”
“எப்பா ராசா அதெல்லாஞ் சொல்ல மாட்டேன், இன்னைக்கே நானும் எங்கப்பா கூட போவேன்ல”
”சரி சரி போ..போய்ட்டு வந்து எப்டி இருந்துச்சுனு நாளைக்கு வந்து சொல்லு”
சேகரின் வீட்டுத் திண்ணையை விட்டு இறங்கி தன் வீட்டைப் பார்த்து கிளம்பினான் செல்வம். இவர்கள் இருவரின் வீடும் எதிரெதிர் வீடு தான். விவரம் தெரிந்த வயதில் இருந்தே இருவரும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஆறாவது படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
”அப்பா, இப்ப கூட்டுப்போவ முடியுமா? முடியாதா?” செல்வத்தின் காட்டுக்கூச்சல் கைத்தறி சத்தத்தையும் மிஞ்சிக் கேட்டது.
“டேய் ஏன்டா படுத்துற, இன்னுங் காவாசி சேல ஓட்ட வேண்டிகெடக்கு”
செல்வம் அப்பாவின் பேச்சுக்கு பிடிகொடுக்கவில்லை.
“நேத்து சேகருலாம் படம் பாத்துட்டு வந்துட்டான், அவேன்ங் அப்பாலாம் கூட்டுப் போய்ட்டு வன்ட்டாரு தெரியுமா”
”ஏய் அனத்துறத நிறுத்து, சாயந்தேரம் போவோஞ் சரியா”
அது ஆறு மணி ஷோ. எல்லா நாளிலும் டூரிங் டாக்கீஸ்க்காரர்கள் ஈவ்னிங் ஷோவும் நைட் ஷோவும் போடுவார்கள். பொங்கல் தீபாவளி வந்துவிட்டால் மட்டும் நாலு ஷோ போடுவார்கள். அதுவெல்லாம் கூட்டம் கலைகட்டுகிற நாட்கள். இவர்கள் போன நேரம் பெரிய கூட்டம் இல்லை.
இருபத்தஞ்சு பைசாக்கு டிக்கெட் எடுத்தார் தவசி. டூரிங் டாக்கீஸ் உள்ளே மணல் பரசிக் கிடந்தது. இரண்டாவது தூணிற்கு அருகே செல்வத்தை உட்கார வைத்தார். ’டேய் சனம் பெருசா இல்ல, முதுகு வலிச்சா தூண்ல சாஞ்சிக்க இல்லாட்டி படுத்துட்டே படம் பாரு’ என்றார் தவசி. செல்வம் உட்கார்ந்து கொண்டும் தூணில் சாய்ந்துகொண்டும் மணலில் படுத்துக்கொண்டும் தோதுபடி படம் பார்த்தான். எம்ஜிஆர் நடந்துவரும் காட்சியைப் பார்த்து ”என்னடா உங்காளு நடக்க சொன்னா பாவுக்கு பச போடுறாரு” என்று கேலியடித்தார் தவசி. “அப்பா பேசம படத்த பாரு” சிணுங்கி கொண்டே சொன்னான் செல்வம்.
அடுத்த நாள் ’ஆயிரம் நிலவே வா’ பாட்டை முணுமுணுத்தபடிக்கே சேகரின் வீட்டுத் திருணையை நோக்கி செல்வம் வந்தான்.
“என்னடா படம் பாத்துட்ட போலயே”
“டேய் வேங்கயா எம்ஜிஆருதேன் நெச வேங்கயன்டா”
“டூரிங் டாக்கீஸ்ல படம் பாக்க எப்டி இருந்துச்சு”
“சோக்கா இருந்துச்சு, இன்னுஞ் சின்ன பிள்ளையா இருக்கையிலலாம் அப்பா மடிலையோ அம்மா மடிலையோ தான்டா ஒக்கான்ட்டு படம் பாப்பேன், அப்டியே தூங்கிருவேன், முழுசாவே படம் பாத்ததில்ல. ஆனா நேத்து ஆச தீர படம் பாத்தேன். மணல நல்லா பரசிப் போட்டுருந்தாய்ங்க, குண்டி குளு குளுனு இருந்துச்சு”
”ஹாஹாஹா...சேரிடா செல்வம், மன்றம் வரைக்கும் போவோமா”
“எதுக்கு டா”
“தந்தி பேப்பர்ல புதுப்பட ஸ்டில் போட்ருப்பான், அடிமைப் பெண் ஸ்டில் இருந்தா சுட்ர வேண்டிதான்”
”சும்மாவே நாம போனா அங்கிருக்குற கெழவேங் தொரத்திவிட்ருவான்ங்
”
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்ங்” தைரியம் ஊட்டினான் சேகர்.
இவர்கள் போன நேரம் கிழவர் மன்றத்தில் இல்லை. நல்லதா போச்சு என்று தந்தி பேப்பரைப் புரட்ட ஆரம்பித்தனர். கிழவர் இருந்திருந்தால் விரட்டிவிட்டிருப்பார். எப்பப்பார்த்தாலும் இந்தப் பொடிக்குஞ்சுகள் பேப்பரை கிழித்துக்கொண்டு ஓடிவிடுவதால் மன்றத்துக்கு வருபவர்களால் படிக்க முடியாமல் போகிறது. அதனாலேயே எந்தப் பொடியர்களையும் உள்ளே விடமட்டார்.
”டே இங்க பாரு, இதுல பாதி பக்கம் அடிமைப்பெண் ஸ்டில் தான்” செல்வம் குதூகலமாய் சொன்னான். சேகர் தான் கொண்டு வந்திருந்த கத்திரிக்கோலால் படத்தை வெட்டி எடுக்க இருவரும் மன்றத்தை விட்டு தெறித்து ஓடினர். ஸ்டில்லை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து பின் டவுன் தேட்ருக்காரர்கள் போல் தட்டி செய்வொம் என்ற முடிவுக்கு வந்தார்கள். சேகர் வீட்டிலிருந்து நடா வண்டியை எடுத்து வந்தான். செல்வம் காகித அட்டையை கொண்டு வந்தான். அட்டையில் அடிமைப்பெண் ஸ்டில்லை பசையால் ஒட்டி நடா வண்டியில் கட்டினார்கள். வண்டியை தெருவில் தள்ளிக் கொண்டு வாயில் பீப்பீயை ஊதியபடிக்கே “அடிமைப் பெண், அடிமைப் பெண்...காசி டாக்கீஸ்ல...எல்லாரும் வந்துருங்க” என்று கத்தி விளையாடினார்கள்.
1974 :
”மேரே சபுனோஹி ரானி கப் ஆயேகி து
ஆயி ருட் மஸ்டானி கப் ஆயேகி து
பீடி ஜாயே ஸிந்தகானி கப் ஆயேகி து
ச்சலியா...ஆ, ட்டு ச்சலியா...ஆ”
”என்னடா செல்வம் எப்ப இந்திலாம் பாட கத்துக்கிட்ட”
”நேத்து ஒரு விசேச வீட்டுக்குப் போனேன் டா வேங்கயா, அங்க இந்தப் பாட்டு படிச்சது, நிறையதாட்டி போட்டாய்ங்க, மனப்பாடமே ஆய்ப்போச்சு, படம் பேரு எதோ ஆராதனாவாம்”.
“இப்பலாம் இந்திப் பாட்டுதேன் கேக்க நல்லாருக்கோ?”
“அப்படியும் சொல்லலாம்டா வேங்கயா”
“நம்ம காசி டூரிங் டாக்கீஸ்ல பாபி படம் போட்ருக்கான், போன வருசம் நாடு முழுக்க நல்லா ஓடுன படமாம், ஆப்ரேட்டர் அண்ணேஞ் சொல்லிச்சு, இன்னைக்கு சாய்ந்தேரம் போறேன் வரியா” செல்வம் கம்பேனிக்கு அழைத்துப்பார்த்தான்.
“அட போட பியுசி பரிச்சைக்கு ஒழுங்கா படிக்கலைனா எங்கப்பா என்னய
நெஞ்சுருவாரு, உனக்கென்ன நீ தறி ஓட்ற, படம் பாக்கலாம்”
“உனக்கு லீவு தான”
“இது பரிச்சைக்கு படிக்க லீவுடா”
“வர முடியுமா முடியாதா”
ஒரு அதட்டலுக்குப் பிறகு சேகர் ஒத்துக்கொண்டான். அவனுக்கும் கொஞ்சம் இளைப்பாறல் தேவைப்பட்டது.
“தமிழ்ப் படமா எதாவது போவோம் டா, டவுன் தேட்ருல தங்கப்பதக்கம் போட்ருக்கான்”
”அதெல்லாம் உங்கப்பாரும் எங்கப்பாரும் பாக்குற படம், பொச்சப் பொத்திட்டு வா பாபி தான் பாக்குறோம்” என்று செல்வம் பேச்சை முடித்தான். அரை மனதுடன் சம்மதித்து தலையை ஆட்டிகொண்டே செல்வத்துடன் நடந்தான்.
காசி டாக்கீஸில் மொதுமொதுவென கூட்டம். ஒரு இந்திப் படத்திற்கு இவ்வளவு வரவேற்பை சேகர் அப்போதுதான் பார்த்தான், செல்வமும் தான். எல்லாரும் பாட்டுக்காக வந்தவர்கள். எழுபத்தஞ்சு பைசா டிக்கெட். செல்வமும் சேகரும் நன்றாக மணலைக் கூட்டி மேடாக்கி அதில் அமர்ந்தனர். “முறுக்கே கல்லமிட்டாயே...முறுக்கே கல்லமிட்டாயே” என்று கொட்டகைக்குள் கூவிக்கொண்டே தட்டு நிறைய முறுக்கோடும் கடலை மிட்டாயோடும் ஒரு குரல் வலம் வந்து கொண்டிருந்தது. இரண்டு முறுக்கும் நாலு கடலைமிட்டாயும் தீம்பண்டமாய் வாங்கி கொறித்தபடியே படம் பார்த்தனர். முன்னாடி உட்கார்ந்திருந்த ஒரு ஆள், பெரிய மேடாக செய்து உட்கார்ந்து இருந்தான். “அண்ணே கொஞ்சம் மறைக்கிது, மணல சரி பண்ணி ஒக்காருங்க” சேகர் சொன்னான். அந்த ஆள் சட்டை பண்ணவில்லை. திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்தான் சேகர். கேட்டும் கேட்காத மாதிரி இருந்தான் அந்த ஆள். டூரிங் டாக்கீஸைப் பொறுத்தவரைக்கும் பின்னாடி இருப்பவன் படம் பார்க்க கூடாது என்பதற்காகவே சிலர் இப்படி நடந்து கொள்வார்கள். செல்வம் சேகரிடம் “ ஒரு நிமிசம் பொறு” என்று சொல்லிவிட்டு முன்னாடி இருந்த ஆளின் மணல் மேட்டை சுரண்டினான். மணல் கொஞ்சம் கொஞ்சமாய் குறைவது அந்த ஆளுக்கு தெரிந்தது. உடனே இரண்டு கையையும் முதுகு பின்னாடி கொண்டுபோய் மணலைக் கூட்டி, “டேய் தம்பிகளா என்ன சேட்ட இது, வகுந்துடுவேன் பாத்துக்க, பேசாம படம் பாக்கனும்” மிரட்டல் தொனியில் பேசினான் அந்த ஆள். கடுப்பேறிய மனதுடன் இருவரும் படம் பார்த்தனர். இடைவேளை நேரத்தில் அந்த ஆள் பீடி பற்ற வைக்க கொட்டகயை விட்டு வெளியே சென்றான். செல்வம் சடக்கென்று அந்தாள் உட்கார்ந்து இருந்த மணல் மேட்டைத் தோண்டி வாயைக் காறி எச்சிலைக் கூட்டி சளியைத் தோண்டியக் குழியிலேயே துப்பினான்.
“ஏய் வேங்கயா, நீயும் துப்பிவுடுறா, தாயிலி மண்டையா பேசுறான்”
சேகர், மூக்கை சிந்தி குழியில் வீசினான். அப்படியே குழியை மூடி பழைய நிலைக்கே கொண்டுவந்தனர். பீடி குடித்துவிட்டு அந்த ஆள் உள்ளே வந்து மணல் மேட்டில் உட்கார, அந்த ஆளின் பின்னாடி இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டது.
படம் முடிந்து வெளியே வந்ததும் சேகர் படத்தை கொண்டாடித் தீர்த்தான்.
“இத தான் அப்பவே சொன்னேன் கேட்டயா, இந்தி படம் நல்லாதா இருக்கும்”
”படம் நல்லாருக்கானு சொல்ல தெரிலடா மாப்ள, ஆனா பாட்டு பின்னிட்டாய்ங்க”
“ம்.. அது சரி, நீ தர்மேந்திரா படம் பத்தேனு வையி சண்டையினாலே அவர்தானு சொல்வடா”
“அது அப்ப பாதுக்கலாம், ஆமாண்டா... நீ ஏன் தேட்ருலாம் வர மாட்ற டூரிங் டாக்கீஸ்தான் போணும்னு அடம்பிடிக்கிற”
“அது ஒன்னுமில்லடா, தேட்ருல சீட்ல ஒக்காந்துட்டு படம் பாக்க எரிச்சலா இருக்கு, நம்ம குண்டி மணல்ல ஒக்காந்தே பழகிருச்சுப் பாரு”
“அட போடா நீயும் ஓங் காரணமும்”
“சேரி, நீலாம் எப்டி சீட்ல ஒக்காந்து படம் பாக்க பழகுன”
“சனி நாயிறு லீவு விடுவானுங்கள்ல, அப்ப பசங்களோட தேட்ருக்கு போவேன். மருதைலயே பெரிய தேட்ரு. சென்ட்ரல்னு பேரு”
“சேரி சேரி”
அதற்குப் பிறகு சேகர் லீவுக்கு வந்தாலே செல்வத்துடன் படம் பார்ப்பதைப் பழக்கமாக்கினான். கழுதை கெட்டா குட்டிச்சுவர் போல டூரிங் டாக்கீஸே கதியாக இருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து வருவதை டூரிங் டாக்கீஸ் ஆப்ரேட்டர் கவனிக்க, ஒரு நாள் கேட்டே விட்டார்.
“என்ன நம்ம பயக அடிக்கடி கண்ணுல படுறீகளே”
“சேகருக்கு லீவுணே, நான் இப்பதான் பாவடசிருக்கேன், அப்டி இந்தப் பக்கமா வந்துட்டு போவாம்னு வந்தோம்”
“தறி ஓட்ற நம்ம ஆளுக இருக்குறனாலதா டூரிங் டாக்கீஸ் உருப்புடியா ஓடுது, தறிய விட்டா சினிமாதான பொழுதுபோக்கே”
“ஆமாணே ஆமாணே” என்றவாறு செல்வம் சேகரைக் கூட்டிக்கொண்டு நகர்ந்தான்.
படங்கள் வரத்து கணிசமாக இல்லாத காலத்தில் இடையிடையே பிட்டு படங்களும் டூரிங் டாக்கீஸில் போட்டனர். இடைவேளைக்கு முன்பு பத்து நிமிடம் இந்த பிட்டைப் போடுவர்கள். போலிஸ் வருவதுபோல இருந்தால் ரீலைக் கழட்டி ஒளித்து வைத்துவிடுவார் ஆப்ரேட்டர். சில நேரம் போலிஸும் பிட்டுப் பார்ப்பதுண்டு. சேகர் ஊரில் இல்லாதப் பொழுதெல்லாம் செல்வம் தனியாக சென்று படம் பார்ப்பான். பகல் முழுக்க தறி. இரவானால் படம். குறைந்தது வாரத்திற்கு இரண்டு படம் பார்த்துவிடுவான்.
1983 :
”என்ன ஆப்ரேட்ரே சந்தோசமா இருக்கிங்க போல”
செல்வம் கேலிக்கு கேட்டாலும் இந்த கேள்வி ஆப்ரேட்டருக்கு சங்கடத்தையும் கொஞ்சூண்டு ஆத்திரத்தையும் கொண்டுவந்தது. அடக்கிக்கொண்டு சிரித்துவாறே பதில் சொன்னார்.
”அதெல்லாம் இல்லப்பா வீட்டுக்கு சாயா வாங்கலாம்னு இப்டிக்கா வந்தேன்ங், ஆமா இப்பல்லாம் ஏன் படம் பாக்க வர்றது இல்ல”
”வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க, அப்பா வேற சத்தம் போடுறாருணே, ஊர சுத்தாம பொறுப்பா கெடனு”
“அது சரி, ஒங் கூட்டாளியையும் இப்ப பாக்க முடிறது இல்லயே”
“அவன நா பாத்தே கொல்ல நாளாவது, அவனுக்கு கல்யாணமாச்சு அப்டியே மருதையிலேயே செட்டில் ஆய்ட்டான், ஊருக்கு வந்தா வீட்டுப்பக்கம் வராம போக மாட்டான்"
“வாழ்க்க அமஞ்சுருச்சுனா அவங்க அவங்க தனக்கேத்த வழில போய்கிற வேண்டிதான் பா”
“ஏதும் புதுப்படம் போடுறீகளா”
“முன்னமாறிலாம் இல்லப்பா, உனக்கேத் தெரியும், நல்ல படம் எல்லாம் பெரிய தேட்ருலதான் போடுறானுக, சனமும் அங்கதா போவுது, ரொம்ப சிக்கலாத்தேன் இருக்கு, பிட்டு போட்டாலும் பெருசா கூட்டம் வர மாட்டிகிது, எங் ஓனரு என்னைக்கு இழுத்து மூடப் போறாருனு தெரில, நம்ம குலத்தொழிலயே செஞ்சிருக்கலாம் போல”
அவரின் புலம்பல் செல்வத்தை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் டூரிங் டாக்கீஸை மூடிவிடுவார்களோ என்கிற நினைப்புதான் எதோ செய்தது.
கல்யாணம் ஆன புதிதில் செல்வத்தின் மனைவி காமச்சி மண்வாசனைப் படத்திற்கு கூட்டுப் போக சொல்லி அடம்பிடித்தாள். நடிகர் பாண்டியன் பார்ப்பதற்கு காமச்சியின் தம்பியைப் போல் இருப்பான். அதனாலேயே படத்தைப் பார்க்க பிரையாசைப்பட்டாள். இதில் பிரச்சனை என்ன என்றால் அந்தப்படம் டவுண் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. புதுப் பொண்டாட்டி கேட்டால் செய்துதானே ஆக வேண்டும். காமச்சியைக் கூட்டிக்கொண்டு டவுண் தியேட்டருக்கு போனான் செல்வம். கோமதி என்று பெரிய எழுத்தில் எழுதியிருக்கும். ஊரிலேயே பெரியத் தியேட்டர் இதுதான். தியேட்டர் சீட்டில் செல்வத்திற்கு சரியாக உட்காரவரவில்லை. “புட்டம் ஒரு இடத்துல ஒக்காருதாம் பாரு” என்று காமாச்சி தலையிலடித்துக் கொண்டாள். “அதா உந் தம்பி வன்ட்டான்ல படத்த பாத்துத் தொலடி”. உடலை முன்னேத் தள்ளிக்கொண்டும் பின்னேத் தள்ளிக்கொண்டும் எப்படியோ படத்தைப் பார்த்துவிட்டான். அன்னையிலிருந்து காமச்சி படத்துக்குக் கூப்பிட்டாலும் மனிசன் போறதில்லை. தெரு பொம்பளைகளுடன் செட்டு சேர்ந்து காமச்சி போய்க்கொண்டாள். பொண்டாட்டிக்குத் தெரியாமல் காசி டாக்கீஸில் மட்டும் பழைய ஸிப்ட் படங்கள் எதாவது ஓடினால் பார்ப்பான். அப்போதும் தனக்கேத்தபடி படுத்துக்கொண்டு தூணில் சாய்ந்துகொண்டுதான் படம் பார்ப்பான்.
எல்லாவற்றிற்கும் வரும் முடிவு டூரிங் டாக்கீஸுக்கும் வந்தது. டாக்கீஸின் இடம் கை மாறி விட்டது. அந்த இடத்தில் இரும்புப் பட்டறை வரப்போவதாக பேச்சுக் கிளம்பியது. கொஞ்ச நாட்களில் அதற்கான வேலைகளும் நடந்தன. டாக்கீஸ் இருந்த இடம் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டது. செல்வமும் இடையில் வேறு எங்கு சென்றும் படம் பார்க்கவில்லை. எப்பொழுதாவது இரவு நேரத்தில் ரோட்டுப்பக்கம் சோலிக்குச் சென்றால் மூடியிருக்கும் இரும்புப்பட்டறையின் முன் நின்று சிரித்துக்கொள்வான். சங்கர் பிறந்ததிற்குப் பிறகு பெரும்பாலும் படத்திற்கு போவதைத் தவிர்த்தேவிட்டான். அவனுடன் விளையாடி, அவனுக்கு விளையாட்டுக்காட்டி பொழுதைப்போக்குவது செல்வத்துக்கு பிடித்துவிட்டது.
1984:
வருடத்திற்கு ஒரு முறை வந்துபோகும் சேகர், அன்று சங்கரைப் பார்ப்பதற்காக வந்தான். சேகரின் மனைவி கழித்து முழுகாமலிருந்த நேரம். சங்கர் பிறந்தும் சரியாக ஒருவார காலம் இருக்கும். அவனையும் பார்ப்பதற்காகவுமே ஓடி வந்துவிட்டான்.
“அப்டியே உன்னகெனக்கா இருக்கானே”
“என்ன மாதிரிலா இல்லடே வேங்கயா, அவள மாதிரிதாங் இருக்கான்.”
”என்னவோ போ, ஆனா உன்ன மாதிரிதாங் குணமிருக்கும் பாரு”
“அதக் காட்டும்போது தெரிஞ்சுக்கலாம்”
“காட்டதாம் போறாம் பாரு”, டேய் நாம, ஒன்னா படத்துக்கு போய் எவ்ளோ நாளாச்சு"
"நினைச்சாலுமே முடியாது டா"
"ஏன் அப்புடி"
"அதான் டூரிங் டாக்கீஸ மூடிட்டாங்களே"
"ஏய் வெளக்கெண்ண, அதாம் டவுண்ல பெரிய தேட்ரு இருக்குல அங்க போலாம்"
"ஏற்கனவே எம் சம்சாரத்தக் கூட்டுப்போனேன், நமக்கு அந்த சீட்டே ஒத்துவர மாட்டிகிது"
"போகப் போகப் பழகிரும்டா, இன்னும் டூரிங் டாக்கீஸயே ஏன் கட்டி அழுகுற, காலத்துக்கு ஏத்தபடி மாறனும்டா, எனக்காகவாது வா"
சேகர் பிடிவாதமாய், பிரியத்தின் மிகுதியில் கேட்பதால் வேறு வழியில்லாமல் செல்வம் ஒத்துக்கொண்டான். நைட் ஷோவிற்கு சென்றனர்.
கோமதி டாக்கீஸில் 'தாவணிக் கனவுகள்' ஓடிக்கொண்டிருந்தது. இவர்கள் தியேட்டருக்கு வந்த நேரம் சரியான பேய்மழை. சனநெருக்கடி ஏதுமில்லாமல் மிதமானக் கூட்டமே இருந்தது. சேகர் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தான். இருவரும் ஒருசேர உள்ளே நுழைந்தனர். செல்வத்திற்கு காசி டாக்கீஸின் சொளகரியம் இங்கு கிடைக்கவில்லை. என்னதான் தியேட்டர் சரிபட்டு வரவில்லை என்றாலும் சேகருக்காக மௌனமாய் அமர்ந்து படம் பார்த்தான். சிறிது நேரத்தில் அவன் தொடையருகே ஏதோவொன்று ஊறுவதாய் தோன்றியது. அது அவனை அச்சமயம் சுகப்படுத்தியது. அவனது வலது கையை இன்னொரு கை வந்து பிடித்து இன்னொரு தொடையில் போட்டது. நிதானம் சிறிது பிசகியிருந்தும் உடனே சுதாரித்துவிட்டான் செல்வம். சேகருக்கு சொத்தென்று அறை விழுந்தது. கதவைத் திறந்துகொண்டு தியேட்டரை விட்டு வெளியேறினான் செல்வம். அதற்கடுத்து இருவரும் முன்னமாதிரி பார்த்துக்கொள்வதில்லை, பேசிக்கொள்வதில்லை.
'கோமதி' டாக்கீஸின் பக்கம் சென்றாலே செல்வத்திற்கு சேகரின் முகம் கண்முன்னால் வந்து நிற்கும். அவனால் நிதானமாய் இருக்க முடியாது. அந்த இடத்தைவிட்டு வேகமாய் அகலவே நினைப்பான்.
1988 :
ஒருநாள் ஆப்ரேட்டர் அண்ணனை எதேச்சயாக செல்வம் பார்த்தான். நான்கு தெரு தள்ளிதான் அவர் வீடு. வேறு ஒரு சோலியாக போயிருந்தான். வீட்டு வாசலில் பாவுக்கு பசைப் போட்டுக் கொண்டிருந்தார் ஆப்ரேட்டர். அவரைப் பார்த்ததும் அடிமைப்பெண் எம்ஜிஆர் செல்வத்தின் நியாபகத்திற்கு வந்துபோனார்
.
“என்னணே பச போடுறீங்க போல, நம்ம தொழில்ல எறங்கியாச்சோ”
அவரிடம் ஒரு இறுக்கம் தெரிந்தது.
“என்ன பண்றது, விதி விட்ட வழியிலதான போவ வேண்டிருக்கு தம்பி, நம்ம ஊருக்கு பக்கத்து கிராமத்துலலாம் இன்னும் டூரிங் டாக்கீஸ்லதா படங் காமிக்கிறான், நம்ம ஊரானுகளுக்கு மெட்ராசுல இருக்குறதா நெனப்பு, அதுலயும் நம்ம பசப்பண்ணாடிமாரு இருக்கானுகங்ளே என்ன மினுக்கு மினுக்குரானுங்க’ விரக்தி கலந்த கோவமாய் அவரின் வாய்வார்த்தை இருந்தது.
“அப்றம் மைனரு என்ன பன்றாரு”
“இப்பதா ஒன்னாப்பு போய்ட்டு இருக்கான், சரிணே வாரேன்”
செல்வம் கிளம்புவதே அவருக்கு சரி என்றுபட்டது. அவரால் முகம் கொடுத்து பேச முடியவில்லை. ஒரு மனிதன் சுயத்தை இழக்கும்போது பிற மனிதனிடம் போலியாக உரையாடுவான். அப்படி உரையாடி என்ன பயன்?
1993:
”அப்பா கவர்மண்ட் பஸ்ல போவ வேணாம், அதுல பாட்டே வெளங்காது, பூராம் பழையப் பாட்டாப் பொடுவாய்ங்க, ஜோதி அம்மன் வண்டி வரட்டும் அதுல போலாம். ராசா பாட்டா பொடுவங்க”
“...........................”
சங்கர் நினைத்த வண்டியே வந்தது. தடதடவென பின் படிக்கட்டில் ஏறி இடதுபக்கம் உள்ள அஞ்சாவது சீட்டில் ஜன்னல் சைடாய் போய் உட்கார்ந்துகொண்டான். அப்பாவுக்கும் சீட் போட்டான். ஜோதி அம்மனில் ஏறியதில் இவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. ஊரிலேயே இந்த பஸ்சில்தான் ஒவ்வொரு ஜன்னலுக்கும் மேல் ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள். டவுண் போகும்வரை பாட்டுக் கேட்டுக்கொண்டே போகலாம். புதிதாக வந்த படங்களின் பாடல்களும் போடுவார்கள். சங்கர், வண்டியில் ஏறிய நேரம் ‘அந்தியில வானம்’ பாட்டு ஓடி முடிந்திருந்தது. அடுத்து ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் ஆரம்பித்தது. இந்த பாடல் சங்கருக்கு காமாச்சியை நியாபகப்படுத்த சிரிப்புக் கொட்டினான்.
“ஏன்டா சிரிக்குறா”
“அது இல்லப்பா, அம்மா பாண்டியன் ரசிகைல”
”ஆமா டா, பாண்டியன் பாக்க உம் மாமனாட்டம் இருப்பான் அதேங்”
“ஏம்பா எல்லா பொம்பளைகளும் பாண்டியன விரும்பி பாப்பாங்களோ”
“பாண்டியன விட ராமராசனத்தான் அதிகம் பாப்பாளுக, அவேன் படத்துலதேன் அசிங்கம் இருக்காது, சட்டையும் நல்லா பொம்பளகெனக்க போடுவான்”
“அப்ப எம்ஜிஆரு”
“அவரையுந்தான் டா. குமரில இருந்து பல்லு போன கிழவிக வரைக்கும் அவர எல்லாருக்கும் பிடிக்கும்".
சங்கருக்கு இது அஞ்சாப்பு முழுப்பரிச்சை லீவு. படத்துக்கு கூப்பிட்டுப் போக சொல்லி வீட்டில் ஒரே அடம். மாமா கூடதான் இவ்வளவு நாள் படத்திற்கு போய்க்கொண்டிருந்தான். இன்று வெளி சோலிக்கு மாமா போயிருந்ததால் அப்பாவை அனத்திவிட்டான். சங்கர் பிறந்த பிறகு படத்திற்கு அதிகம் போகாத செல்வம் அவனின் அடத்திற்காக ஒத்துக்கொண்டார். காரணம் அவன் அடத்தில் தன்னைப் பிரதிபலிப்பதாய் எண்ணினார். அப்பா தவசியும், நண்பன் சேகரும், காசீ டாக்கீஸும் செல்வத்தின் நினைவுகளை மீட்டெடுத்தன. பஸ்ஸை விட்டு இறங்கி கோமதி டாக்கீஸில் நுழைந்தனர் அப்பாவும் மகனும். ரஜினி நடிச்ச எஜமான் படம் ஓடியது. அஞ்சு ரூபா டிக்கெட். மேட்னி ஷோ என்பதால் கூட்டம் குறைச்சல் தான். டிக்கெட் கவுண்ட்டரில் நிற்கையில்தான் ஆப்ரேட்டர் அண்ணனை செல்வம் பார்த்தார்.
“அண்ணே, ஒரு நிமிசம்”
“அட செல்வம் சொல்லுப்பா”
“என்னணே படம் பாக்கவா?”
”இல்ல இல்லப்பா, நா இங்க ஆப்ரேட்ரா வேல பாக்குறேன்ல, சேந்து ஒருமாசமகுது”.. அவர் சொல்லும்போதே பேச்சில் ஒரு தெளிச்சி.
“மைனர் கூட படம் பாக்க வந்தியாக்கும்”
“ஆமாம்ணே”
“அண்ணே அப்ப தறி”
“அது பொம்பளையாளுப் பாத்துக்குவா, நமக்கு இந்த பிலிமு பிலிமுச் சக்கரத்த விட்டா என்னத் தெரியும் சொல்லு, தார் சுத்த ஒக்காந்தாலே பிலிம் சக்கரந்தான் முன்னக்க வந்து நிக்கிது”,
”என்ன இருந்தாலும் டூரிங் டாக்கீஸ் மாதிரி வருமாணே?”
”வராதுதாங், என்ன சொல்ல. எல்லாத்துக்கு சொளகரியம் பாத்தா எப்புடி. தம்பி ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. இன்னும் ஏழெட்டு வர்சத்துல கைத்தறியோட மதிப்பு கொறஞ்சுரும். இப்பயே அங்கங்க மிசின் தறி வர ஆரம்பிச்சுருச்சு. சோறு திங்கனும்னா எல்லாத்துக்கும் பழகிதா ஆகணும்யா. பழகாமலேயே ஒரு முடிவுக்கு வரப்பிடாது. நாங் புடிச்ச முசலுக்கு மூனுகாலுனு சொல்றவன்ட்ட இந்தாடா தாயிலி நாலாவது காலுனு காட்னா பொத்திட்டு போய்ருவான். நா நாலாவது கால பாத்துட்டேன். நீ எப்பப் பாக்கப் போற”.
செல்வத்திடம் பதிலேதுமில்லை.
“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்”
“சேரிப்பா பெல் அடிச்சுட்டாங்க, நா ரூமுக்குப் போறேன், போய் படம் பாரு”
“...................................”
”இழு” என்று தியேட்டர் கதவில் எழுதியிருந்தது. கைப்பிடியை இழுத்து அப்பாவும் மகனும் உள்ளே நுழைந்தனர். காமச்சியுடன் வந்தபோதைவிட தியேட்டரில் அதிக மாற்றம். சங்கருடன் ஒழுங்காக உட்கார்ந்து படம் பார்க்க முடியவில்லை. சீட்டில் உக்கார்ந்தாலே குண்டியில் எதோ குத்துவதாக ஒரு பிரமை. சடாரென சீட்டைவிட்டு எழுந்தார்.
”எப்பா ஏம்பா எந்திக்கிறீங்க”
“குருக்கு வலிக்குது, நீ இங்க ஒக்காந்து படம் பாரு நா அங்குட்டு போய் படுத்துட்டே பாத்துக்குறேன்”
அப்பா கூட்டுவந்ததே பெருசு என்பதால் வேறு வழியில்லாமல் மண்டையை ஆட்டினான்.
இரண்டு வரிசைகளுக்கு நடுவில் இருக்கும் வழியில் துண்டை விரித்து ஸ்கீரினைப் பார்த்த படிக்கே வலதுகையை தலைக்கு அண்டக் குடுத்து படுத்தார். அவ்வப்போது எழுவதும் படுப்பதுமாக படம் பார்த்தார். சங்கரால் அப்பாவை ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“போத கிராக்கி போல”
தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் குடிகாரப்பயல் என்றே நினைத்துக் கொண்டனர்.
அவரைப் பொறுத்தமட்டில் அவர் படுத்திருப்பது மணல். இடைவேளைக்குப் பிறகு அவரின் முகத்திலோர் தெளிச்சிப் பிறந்தது. கூடாரத்தில் இருப்பதாக உணர்ந்தார். தூண்களெல்லாம் பனைமரங்களாக காட்சியளித்தன. சங்கருடன் சீட்டில் வந்து அமர்ந்தார்.
அது மணல் மேடாக மாறியிருந்தது. அவருக்கு குண்டி குளுகுளுவென இருந்தது. அவர் பழகிக் கொண்டார்.
படம் முடிந்து வீடு திரும்புகையில் ரெண்டுமணி ஜோதி அம்மன் பஸ் கரைக்டாக இருந்தது. சரியான நெருக்கடி. சங்கர் உள்ளே புகுந்து அவனுக்கான சீட்டைப் போட்டுக்கொண்டான். செல்வம் நின்றுகொண்டே வந்தார். குண்டுங்குழியுமான ரோடு, அங்கங்கே வேகத்தடைகள். குலுங்கி குலுங்கிதான் பஸ் முன்னேறியது. அவருக்கு முன்பு இருந்தவரின் புட்டம் இவரின் முன்பகுதியில் பட்டுக்கொண்டே இருந்தது. இவர் நகர்ந்து பார்த்தாலும் சனக்கூட்டத்தால் மாட்டி நகரமுடியாமல் கிடந்தார். புட்டம் உரச உரச இவருக்கு ஒருமாதிரி இருந்தது. அந்தத் தொடுதல் அவரை சுகப்படுத்தியது. பால்ய நண்பன் சேகர் நியாபகத்திற்கு வந்தான். கண்களை மூடி மனதிற்குள் சொன்னார்.
”மன்னிச்சிருடா வேங்கையா”
***
நன்றி நடுகல் இதழ்
Comments
Post a Comment