பஞ்சுர்ளி


'பஞ்சுர்ளி' 

[காந்தாரா]

மேலுள்ளது விஜயநகர பேரரசின் சின்னம். அவர்கள் பன்றியைச் சின்னமாக வைத்திருந்தது பரவலாக தெரிந்த விடயமொன்றே. இவர்களைத் தவிர்த்து கன்னடப்பகுதியை ஆண்ட சாளுக்கியர்களுக்கும் பன்றியே சின்னமாயிருந்தது. 'நடுகல்' வெளியீடாக வந்த சத்யபெருமாள் பாலுச்சாமியின் 'பஞ்சுர்ளி' எனும் நூல் வாசிக்கையில் அவரும் விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயர் காலந்தொட்டு பன்றி வழிபாடு (காட்டுப்பன்றி) குறித்து சொல்கிறார். விஜயநகர பேரரசின் கட்டமைப்பை பொறுத்தவரைக்கும் அது நான்கு வம்சத்தால் (சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு) கட்டமைக்கப்பட்டது. இங்கு 'துளுவ' வம்சாவழியில் வந்தவர் கிருஷ்ணதேவராயர். ஹம்பியில் பிறந்தவர். துளுவைத் தாய்மொழியாய் கொண்டவர். காந்தாரா திரைப்படத்தில் பஞ்சுர்ளி தெய்வம் 'துளு'வில் பேசும். சத்யா, பஞ்சுர்ளி என்பது துளுவாக இருந்தாலும் அது தமிழின் மருவே என்றுரைக்கிறார். அதன்படி பன்றிக்குருளை(குருளை - குட்டி) என்பது பஞ்சிக்குருளை - பஞ்சிகுர்ளே - பஞ்சுர்ளே - இறுதியில் "பஞ்சுர்ளி" ஆனது. உழவுக்கு எதிரி காட்டுப்பன்றியாக இருப்பினும் காட்டின் இருப்பிற்கு அதன் தேவையும் வேண்டும் என்பதை அறிந்த மக்களுள் சிலர் பஞ்சுர்ளி வழிபாட்டினை தொடங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

மேலுள்ள படத்தில் உள்ள சின்னத்தில் சங்கு, சக்கரம் போன்றவை உள்ளது. அது விஜயநகர பேரரசின் வைணவத் தன்மையைக் காட்டுகிறது. விஷ்ணுவின் வராஹ அவதாரத்தை நினைவுபடுத்தும் சின்னம் இது. ஆனால் சாளுக்கியர்களின் சின்னத்தில் பன்றி மட்டுமே பிரதானமாக இருக்கும். சாளுக்கிய பண்பாட்டில் விஜயநகரம் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம்.

வரலாற்றில் சாளுக்கிய - பல்லவப்போர் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் புலிகேசியின் ஐகோல் கல்வெட்டு வழி அது நமக்குத் தெரிகிறது. சாளுக்கியரை வென்ற பல்லவர்கள் காஞ்சியில் தலைகுனிந்தவாறு பன்றிச்சிலை ஒன்றை அமைத்து சாளுக்கியர்களை அவமதித்தனர். பிறகு அதை சாளுக்கியர்கள் படையெடுத்து வந்து உடைத்தனர். உடைத்ததை பிற்கால பல்லவர்கள் சரிசெய்தனர். இதுவெல்லாம் எட்டாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நடந்த நிகழ்வு. 

பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேர்விட்ட விஜயநகரம் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் நிலைத்து நின்றது. ஆகவே சாளுக்கிய பண்பாட்டிலிருந்து சிலவற்றைத் தனக்கேற்றதாய் மாற்றியிருக்கும் வாய்ப்புண்டு. அதில் இப்பன்றிச்சின்னமும் ஒன்று.

Comments