யுகத்தின் குத்து
"எப்டி என் பயல உம் பயங் குத்தலாம், அதுவுங் குத்துற எடமா அது?"
"என்ன சொல்றீங்க, எனக்கொன்னும் புரிலயே"
"இங்கப்பாரு, உம் பய பாத்த வேலய".
எதிர்வீட்டுக்காரர் தன்னருகில் அழுதுகொண்டிருந்த தன் பையனை திருப்பினார். அவனது காக்கி டவுசர் கிழிந்திருந்தது. கிழிந்த ஓட்டையைச் சுற்றி இரத்தம் உறைந்து இருந்தது. என் பையன் எதிர்வீட்டுப் பையனின் குண்டிச்சதையில் கவராயத்தை குத்தியிருக்கிறான். பசங்களுக்குள் எதோ பிரச்சனையில் பள்ளியைவிட்டு வரும்போது, என் மகன் நேரம் பார்த்து இதைச் செய்திருக்கிறான்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்புவரை எனக்கும் எதிர்வீட்டுக்காரருக்கும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் கிடையாது. நேரெதிரே பார்த்தால் ஒரு புன்முறுவலோடு கடப்போம். எங்களுக்குள் எந்தப் பகையும் இருந்ததில்லை. என் மகனும் அவர் மகனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இதைத் தவிர எனக்கும் அவருக்கும் வேறெந்த உறவும் இல்லை. அவருக்கும் எனக்கும் ரசிப்புத்தன்மையும் வாழ்வுத்தன்மையும் வேறுவேறு. அவரின் சொந்த ஊர் மாட்டுத்தாவணி. என் சொந்த ஊர் கீழ்க்குயில்குடி. அவர் நெற்றி நிறையத் திருநீற்றுடன் வலம் வருவார் மற்றும் கூன் விழுந்தவர். நான் மொட்டைத் தலையுடனே காட்சியளிப்பேன். மேற்கொண்டு நான் வெள்ளைச் சாரமும், வெள்ளை மேற்சட்டையும் மட்டுமே அணிவேன். சில நேரங்களில் வீட்டில் நிர்வாண கோலம் பூண்டிருப்பேன்.
"தெரியாம பண்ணிருப்பாங், நான் எம்மவன கண்டிக்கிறேங்"
"எது தெரியாமயா, ஏதோ பல சென்மத்துப் பக மாதிரில குத்திருக்காங்"
"பெரிய வார்த்தயலாம் சொல்லாதீங்க"
"அப்டிதான் யா சொல்வேன், உம்மவன வெளில வரச்சொல்லு"
நான் மெதுவாக வீட்டிற்குள் சென்று, ஒளிந்துகொண்டிருந்த மகனைப் பார்த்து எதிர்வீட்டு திருவை ஏன் குத்தினாய் என்று கேட்டேன்.
"அவேன் பேரு திரு இல்லப்பா, முழுப் பேரு திருஞானசம்பந்தேங். அவன எல்லாரும் அடிக்கடி இப்டி கூப்டும்போது கடுப்பா இருக்குப்பா. அதாங் குத்திட்டேங்"
நான் சலனப்படாமல், 'நீ செஞ்சது சரிதாங்' என்றேன்.
"யோவ் உள்ள எம்பூட்டு நேரமா கொஞ்சிட்டு இருப்ப கூட்டுவா உன் புள்ளைய"
நான் மெதுவாக நடந்து வீட்டின் வெளியே வந்தேன். என் கையோடு ரொம்ப நூற்றாண்டாய் என் புட்டத்தின் பின்புறம் சொருகியிருந்த கழுமரத்தை இழுத்து வந்திருந்தேன்.
"அய்யா! எதிர் வீட்டுக்காரரே உங்கள் மகன் திருவின் முழுப்பெயரென்ன?"
"ஆங்ங், திருஞானசம்பந்தேங்"
"உங்களுடைய தெய்வீக நாமம் என்ன?"
"அரிகேசரி"
கழுமரத்தைத் தோளில் ஏந்திக்கொண்டு, விட்டுக்கிட்டு ஒரு துரத்து துரத்தினேன்.
~ தமிழ்மணி
Comments
Post a Comment