கோடை - சில கவிதைகள்




மாற்றிக்கொள்ளல்


நடுமதிய வெயிலில் 
அரவமற்ற இரயில்வே பிளாட்பாரம்.
சிமெண்ட் அட்டை வேய்ந்த கூரையின்
நிழலில் நானும் பிச்சைக்காரனும்.
எனக்கு அவனுலகு வேண்டும்
அவனுக்கு என்னுலகு.
ஒருவர் மாற்றி ஒருவர் 
பார்த்துக்கொண்டே இருந்தோம்.
இரு மௌனங்களின் இடைவெளியில்
தண்டவாளத்தில் சரக்கு இரயில்
ஊர்ந்து முன்னேறியது
'குச்சூக் குச்சூக் குச்சூக் குச்சூக்....'
அய்யா என்றேன்,
இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தை 
என்னிடம் நீட்டினான்.
நானோ அவனின் உலகில்
அவனோ எனது உலகில் 
மணிக்கணக்காய் மாட்டிக்கொண்டோம்.
இச்சிறுநேர கூடுபாய்தலில்
'ன்' 'ர்' ஆகிறார்,
'ர்' 'ன்' ஆகிறான்.
இரயில் கடந்த தடமெல்லாம்
உருமாற்றத்தின் 
சில்லறைகள்.

***

'கோடை விளையாட்டு'


இளவேனில் சமீபமாக மழையைத் 
தருகிறது.
பெருத்த இடி சப்தங்களுடன் மின்னல் கீற்றாய் வானம் சிமிட்டிடுகிறது.
என் பகுதியில்
வடகம் காயவைத்தவளுக்கு 
வெண்மேகங்களுடன் பிணக்கு.
துணி துவைத்தவளும் அவளுடன்
சேர்ந்து கொள்கிறாள்.
வெளீரென பளிச்சிடுபவைகள்
கைகோர்த்து கருமைத் தட்டி 
பொழிப்புகளை நடத்தும் காலம்
அனைவரும் அறிந்ததே. 
இந்த பொழிப்பின் ரகசியம்
எங்கள் நூற்றாண்டிற்கு தெரியாது.
எங்கள் கால்களுக்கும் தெரியாது.
சுள்ளென்று கொதிக்கும் நிலமோ
குழைவாய் இருக்கும் சகதியோ
எங்களுக்கு தெரியாது தேவையுமில்லை.
மேனி கறுக்க விளையாடுவதுதான்
எங்களுக்குத் தெரிந்த ஒன்று.
சமீபித்திருக்கும் சாதனையும் அதுதான்.
இளவேனில் மழையைத் தரும்போது
வடகங்களும், ஈரத்துணிகளும்தான் பயந்தோடும்
நாங்களோ மழையைப் பிடித்து 
வெயிலுக்கு திண்ணக் கொடுப்போம்.

***

'கோடை  தெய்வம்'


கோடையில் நாங்கள் எத்தனைமுறை 
கானலைக் கடந்திருப்போம்?
முங்கி யெழுந்திருப்போம்?
வாரி அடித்திருப்போம்?
அள்ளிப் பருகியிருப்போம்?
தாகமெடுத்து வரும் கரிச்சானுக்கு
கிண்ணியில் கானலை வைக்கும்
திருவிழா ஆண்டுதோறும் நடக்கும்.
குடித்துவிட்டு அது மழையைக் கூட்டிவரும்.
அடைமழையில் ஊர் நடுங்கும்.
கண்மாய், கிணறு நிரம்பும்.
இவைகளெல்லாம் தற்காலிகள்,
சில நாள் மகிழ்வுகள்.
எங்களுக்கு
என்றும் வற்றா ஊற்று நீதான் கானலே!
உன்னை ஒரேயாருமுறை
மூதாய் ஊற்றென்று அழைக்கட்டுமா?
அடுத்த நிறுத்தத்தில் இளவேனில் 
இறங்கப்போகிறது. 
இனி முதுவேனிலுடனே நம் பயணம்.

***

- தமிழ்மணி 

Comments