என் இனிய எண்ணங்களே!


கழிவிரக்கம் எதிர்பார்க்கும் மனிதனாய் இருக்கிறேன்.
எவரோடும் ஒட்டி உறவாட முடியாதவனாக இருக்கிறேன்.
நான் யாரென்று அனைவருக்கும் நிறுவ வேண்டும்.
கோடை இடிகளைத் தடுக்க வேண்டும்.
மழை பெய்தால் ஓலைக் குடிலுக்குள் விரைகிறேன்.
என்னுடன் பேச யாருமில்லை.
கண்டுகொள்ள ஒரு ஜீவன் இல்லை.
நீங்கள் நினைக்கும் அளவிற்கு எனது மூளை கயமையை கொண்டிரவில்லை.
பழைய சாதத்திற்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாயின் அளவிற்கான கயமையே என்னிடம் உள்ளன.
என் நண்பர்கள் முன்பு மாதிரி கொண்டாடவில்லை.
காதலியோ முகங்கொடுத்து பேசவில்லை.
அவளுக்கு நான் தோல்வியுறப்போவது முன் கூட்டிய தெரிந்திருக்கிறது.
நான் மிகவும் ஜாலியானவன்.
நீ தீவரமாக இரு என்று நண்பன் சொன்னான்.
நான் மிகவும் தீவிரமானவன்.
உன் பழைய ஜாலியை நீ தொலைத்துவிட்டாய் போல என்றான்.
தீவிரத்தில் ஒரு காலும் 
ஜாலியில் ஒரு காலும் ஊன்றி
இடைப்பட்ட வெளியில் சிறுநீர் கழிக்கிறேன்.
அடக்கி வைத்திருப்பதை திறந்துவிடுதலே சுகம்.
சுகம் கண்டவனின் செயல் 
திரும்பத் திரும்ப அதையே நோக்கும்.
இப்போது கையில் வேலையில்லை.
பணம் இல்லை.
உனக்கு உண்மையான எதிரி வாய்தான் என்றான் அதே நண்பன்.
என் இயல்பை மாற்ற நீ யாரென்று பதிலுரைத்தேன்.
நண்பன் விட்டுச் சென்றான்.
ஆம், வாய்தான் என் செறு.
அடுத்து விட்டுப்போக வரிசையாக
அமர்ந்திருக்கும் உறவுகளைப் பார்த்தேன்.
இந்த இரவுக்குள் என்னை நிருபித்தே ஆக வேண்டும். 
நான் எவ்வளவு பெரிய பலசாலி.
நான் எவ்வளவு சிறிய எறும்பு.
போர்க்களம் புகுந்து செறுவெல்லும்
தன்மையை அடைவேன்.
என் இனிய பிறழ்வே,
என்னை தூங்கவிடு.
இந்த இரவைத் தூங்கிக் கடத்தலே
இப்போதைக்கான நிரூபித்தல்.

- தமிழ்மணி

Comments