கோடையின் த்யானம்

கோடையின் த்யானம்

 

கோடை,

தன்னை தார்ச்சாலையில்

கொட்டும் காலத்தில்

பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கிறேன்.

வெம்மை அப்பிய காற்றின் பாய்ச்சல்

முகத்திரையில் அப்புகிறது.

கருவேலங்கள் வீற்றியிருக்கும்

கரம்பையின் மணமோ 

நாசிக்குள் ஏறி மண்டையைத் தட்டுகிறது. 

கிறங்க வைக்கும் வெக்கையின்

ஆழம் புரிந்த கண்கள் சொக்கின.

சகபயணியின் தோளில் 

தலை சாய்த்தேன்.

தெரியாத தலையும்

தெரியாத தோளும்

சந்திக்கும் இடத்தில் 

வெடித்துப் பிறக்கிறது கருணை.

வெடித்துப் பிறக்கிறது த்யானம்.

வெடித்துப் பிறக்கிறது சாந்தம்.

அடுத்த நிறுத்தத்தில்

எதிர்வந்த பேருந்துடன் மோதிய

எங்கள் பேருந்து 

ஹாரன் பிளிறி செத்தே போனது

அல்லது

எங்களின் த்யானத்துடன்

இணைந்தது.

 

“எழுப்புங்கள் எங்களுக்கோர் நடுகல்லை“


நன்றி - (நுட்பம் இணைய இதழ்)

Comments