அசகவ தாள மனநிலை
அசகவ தாள மனநிலை :
சமீபத்தில் விகடனில் வெளியான 'பெரு. விஷ்ணுகுமாரின்' செவ்வியின் வழியே "அசகவ தாளம்" என்ற தலைப்பிற்கு பின்னால் உள்ள கவிஞனின் மனநிலையைப் புரிந்துகொண்டேன். "அசகவம் என்ற புராண வில், இசைக்கருவியாக எழுவது தாளம்; குறிஞ்சி நில மக்கள் 'வில்யாழ்' இசைத்துள்ளனர்".
"போரும் இசையும் ஒன்றிணையும் புள்ளியாக அது காட்சியளிப்பதைவிட, இருவேறு முரண்பட்ட மனநிலைகள் சந்திக்கும் புள்ளியாக ‘அசகவ தாளம்’ பொருள் தந்தது" என்றும் விஷ்ணு கூறியிருந்தார். இத்தொகுப்பில் முரண்பட்ட இருக்கும் கவிஞனின் மனநிலையை புரிந்துகொள்ள முடிந்தது.
காலம்போன காலம்
அதிகாலைக் குளிரில் அலுவலகம் கிளம்புகையில்
நாயொன்று கண்முன்னே சாவகாசமாய்த் திரிகிறது
நாயென்றால் 'வெறும் நாய்'
ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல
முன்னங்கால் நீட்டிச் சோம்பல்முறிக்கும் அதன்மீது
ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது
விரட்டும் நோக்கில்
வெறுங்கையை வேகமாய் வீசுகிறேன்
நாய் கற்பனை செய்துகொண்ட அந்த 'கல்'
என் கையிலிருந்து பறந்துசெல்கிறது.
இக்கவிதையில் நடைபெறும் சம்பவம் நம் வாழ்வில் தினசரி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது ஒரு விலங்கு, தான் கற்பனை செய்துகொண்ட தனத்தில் கவிதை முடிகிறது என்பதைவிட விலங்கு மனம் நிரம்பிய ஒருவனின்(நாம்) சைகையின் வழியே கவிதை வெளிப்படுகிறது. [ஒரு சிறிய நிகழ்வு - 'ஒருமுறை இரயில் நிலையத்தில் நான் அமர்ந்திருக்கையில் என் அருகே நாய் ஒன்று நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. அது தினந்தோறும் தூங்கும் இடம்அதுதான். அடிக்கடி பார்த்திருக்கிறேன். அன்றோ வழியே சென்ற இரு பெண்மணிகள் நாய் உறங்குவதைப் பார்த்து, இதற்கு கிடைத்த வாழ்வு நமக்கு கிடைக்கவில்லையே என்று புலம்பினர். எனக்குள்ளும் அந்த பெண்களின் குரல் ஒலித்தது. அருகிலிருந்த தண்ணீரை நாய்மீது தெளித்து அதன் தூக்கத்தை கெடுத்துவிட்டேன். அன்றைய என் மனநிலை குரூரமானது]. மேலும் இக்கவிதையில் இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணும் விலங்குமனம் விலங்கிற்கு மட்டுமன்று, நமக்கும் உண்டு எனும் பேருண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
பெரு. விஷ்ணு உருவகப்படுத்துதலில் குழந்தையின் மனத்திலிருந்து உருவகப்படுத்துகிறாரோ? என்று எனக்குத் தோன்றுகிறது. பொருட்களை உருவகப்படுத்துதலில் இத்தன்னையைக் காண முடிகிறது. [உதாரணம் -ஒளிக்கூடை, கரியநதி]
மேற்கொண்டு பருப்பொருள்களை நுண்பொருளாகவும், நுண்பொருளை பருப்பொருளாகவும் காணும் குழந்தையின் மனக்கண்களும் வெளிப்பட்டிருக்கின்றன.
'நெற்றியில் உறுத்தும் கண்' எனும் தலைப்பிட்ட கவிதையை துடுக்குத்தனம் அல்லது குழந்தையின் மனவெளிப்பாடாக பார்க்கலாம். முக்கியமாக "பெய்யாமல் விடப்பட்ட துளிகள் நட்சத்திரங்களாய் தெரிகின்றன" எனும் வரி கவிஞனின் கண்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் கண்களுக்கும் அதை நோக்கிய ஓர் பிரமிப்பு இருக்கும் என்பதை காட்டுகிறது. "கண்களைப் பொத்திக்கொண்டு எங்கே நான் யாரென கண்டுபிடி" என்பதும் குழந்தைகளுக்கானது.
'வலம்' எனும் கவிதையில்
"எல்லா வானத்திலும் சரி
எல்லா காலத்திலும் சரி
காற்றுதான் பறந்துகொண்டிருக்கிறது
பறவையோ நடித்துக்கொண்டிருக்கிறது"
என்கிற வரிகள் தேங்கி நிற்கும் சிந்தனைகளின் ஞாபக வெளிப்பாடாக பார்க்கிறேன். இவ்வாறு தினசரிகளில் நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து பெரும்பான்மையான கவிதைகள் வெளிப்பட்டிருக்கின்றன.
உருவகம் என்று சொல்லுகிறபோது சூரியனை ஆரஞ்சாக கருதும் தேவதேவனின் மனநிலையோடு பொருந்திய என் மனநிலையைப் பற்றி ஒரு குறிப்பு இருதினத்திற்கு முன் எழுதியிருந்தேன். நண்பர் ஒருவர் சொன்னார், 'சூரியனை ஆரஞ்சிற்கு உருவகப்படுத்துவதெல்லாம் க்ளிஷே ஆகிவிட்டன'. நான் மறுமொழியாக, முதலில் வாசிக்கும்போது ஏற்பட்ட மிரட்சியைப் பகிர்ந்தேன் என்றேன். பிறகு அமர்ந்து யோசித்துப் பார்த்தேன். மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டுள்ள ஒரு நெருப்புப்பந்தை ஆரஞ்சு பழம் அளவிற்கு சுருக்கி குறுகிப்பார்க்கும் பூர்ஷ்வாத்தன்மை அவ்வரிகளிலே உள்ளது. ஆனால் அழகியல் சார்ந்து வரும்போது தவறாகவும் படவில்லை. இப்படியான இரட்டை முரண்பட்ட மனநிலை எனக்குள் தொற்றியது.
[இங்கு குறிப்பிட்ட சில கவிதைகள் தற்போதைய மனநிலைக்கு மிகவும் அருகில் இருக்கின்றன]
Comments
Post a Comment