கல் நின்றவள்
"கல் நின்றவள்"
அம்மாவிற்கு வலியெடுத்தது. வயிற்றிலிருக்கும் நான் யோனி வழியே வெளிவர தயாராகிக் கொண்டிருந்தேன். அம்மாவிற்கு நான் அவள் வயிற்றில் உருகொண்ட பாறாங்கல்லாகத் தெரிந்திருக்கலாம். கற்சுமையை அவள் இறக்கி வைக்க பெரும்பாடு நடந்துகொண்டிருந்தது. எழுபது வயதிலொரு கிழவி திடுதிடுவென ஓடிவந்தாள். அவளுடன் ஐம்பது வயதுக்காரி ஒருத்தியும் இருந்தாள். அவர்கள் ஊரின் வைத்தியச்சிகள். இவர்களை விட்டால் பிரசவத்திற்கு இங்கு யாரும் கிடையாது. எங்கள் ஊர் பொது ஆண்டுக்கு முந்தையது. வேப்ப மரங்கள் நிறைந்தது. கிழவி, அம்மாவின் காலை அகட்ட, உடன் வந்தவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அம்மா என்னை வெளித்தள்ள வைத்திய கிழவி என் தலையை லாவகமாக பிடித்து இழுத்தாள். அவளின் கைகள் கல்லைப் போன்று இருந்தது. அம்மாவும் அந்நேரம் ஒரு கல் போன்றுதான் இருந்தாள். அம்மாவின் கைகளைப் பிடித்திருந்தவளும் நிச்சயம் கல் போன்றவளாக இருந்திருப்பாள். அம்மாவை நான் படுக்கை வாட்டத்தில் இருக்கும் ஒரு கல்லாகவே உணர்ந்தேன். வைத்தியச்சிகள் அம்மாவைத் நெட்டுக்குத்தாக தாங்கும் கற்களாகினர். அம்மா மீது ஒருப்பெண் பழக்கூடையை இறக்கி வைத்தாள். பிறகு தூக்கிக்கொண்டு சென்றாள். ஒரு உப்பு வணிகன் மூட்டையை இறக்கி வைத்து இளைப்பாறினான். இப்படி பலர் அம்மாவை உபயோகித்தார்கள். என்னால் வெளியேற முடியவில்லை. நான் ஒரு சுமைதாங்கி கல்லிற்குள் சிக்குண்டேன். அம்மா மீது அமரும் புட்டங்களே! இன்று நாங்கள் எத்தணாவது நூற்றாண்டில் இருக்கிறோம் எனச் சொல்லுங்களேன்?
Comments
Post a Comment