சாபம்
இழவு வீட்டின் திண்ணையில் எறும்புகளின் வரிசையைக் குலைத்துவிட்டபடி இருந்தேன். வீட்டைச் சுற்றி மனிதர்களின் கூட்டம். இவர்களை எப்படி குலைப்பது?. அத்தை இறந்து நடுவீட்டில் கிடக்கிறாள். சொந்தம் அழுகிறது. எனக்கு சொட்டுநீர் சுரக்கவில்லையே?. மனிதக்கூட்டத்தின் நடுவில்போய் நின்றேன். அவர்கள் மனதிற்குள் சிரிப்பதை காதால் உணர்ந்தேன். அவர்கள் ஏன் இப்படி சிரிக்கிறார்கள்?. இழவுயென்பது துக்கம் சார்ந்த சம்பிரதாயம்தானே?. முகத்தில் சோகத்தைத் தாங்கியிருப்பது போல் வைத்துக்கொண்டு அகத்திற்குள் பூடகமாய் ஏதோ நினைக்கிறார்கள். இவர்கள் வஞ்சகத்தின் சாட்சியாளர்கள். காழ்ப்பின் உச்சிக்கொம்பின் கூரில் புட்டத்தை வைத்து சொகுசாய் அமர்ந்திருக்கிறார்கள். அது ஒருநாள் குத்துவது உறுதி. இல்லையெனில் நானே குத்துவேன். வேப்பமரத்தின் நிழலில் மனம் ஒதுங்குகிறது. கசப்புகளை அதனிடம் ஒப்படைத்து சாதாரணனாய் போகலாம் என நினைத்தேன். நான் மரத்தின் அருகே சென்றவுடன் பசும் இலைகள் காய்ந்து போகத் துவங்கின. 'நீயொரு சாபம், இங்கிருந்து புறப்படு'. நான் எப்படி சாபம்? நான் விமோசனம் தரும் தூதுவனாயிற்றே. அவ்விடம் நீங்கினேன். இலைகள் பசுமைப் பூசிக்கொண்டன. இது என்ன அற்புதம். நான் சாபம்தானோ? என் சாபத்தை ஊரான்கள் மேல் ஊற்றினால் என்ன?. இது பழி வாங்குதலில் அடங்காதுதானே?. அத்தையின் பிணமருகே ஊர்ந்து சென்றேன். பத்தி பொருத்தி வாசனை கமழச் செய்திருந்தனர் அறையை. அவளுக்கு சதைகளே இல்லை. சாவதற்கு முன்னேயிருந்தே கூடாய்தான் சுற்றி வந்தாள். ஒரு சூனியக்காரியின் முகம் அவளுக்கு. அப்பொழுது அவள்தான் என்னை சாபமாக்கியிருப்பாளோ? நிச்சயமாய் அவளேதான்.
மயானத்திற்கு பிணத்தைத் தூக்கினர். வழிநெடுக பூக்களைப் பிய்த்துப்போட்டுக் கொண்டே சென்றேன். சாலையெங்கும் பூஞ்சோலை. அத்தைக்கு பிள்ளையும் புருசனும் இல்லை. அவளுக்கு ஒரு தம்பி மட்டும்தான். அவன் என் அப்பன். அப்பன்தான் கொல்லியிட்டான். அந்த நெருப்பு என்னை அழைத்தது. 'வா என்னுடன் உறங்கு, சாபம் நீங்கும்'. மிரட்சியுடன் அங்கிருந்து விலகினேன். மாமாங்கம் கடந்து இப்போது தோன்றுகிறது, அன்றே நெருப்புடன் உறங்கியிருக்கலாம். அன்றுவிட்டது இன்றுவரை பின் நகர்ந்து என் தோளின் மீதேறி தாட்டியம் செய்கிறது. எல்லோரும் மழையில் நனைகிறார்கள். என் வாழ்வில் மழைக்கு இடமில்லை. எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு நகைப்பு கானல். எனக்கு மகன் இருக்கிறான். அவனுக்கு அத்தை இருக்கிறாள். அவளுக்கு பேறு இல்லையே. இச்சாபம் காலம் கடந்தும் தொடர்கிறது. 'அப்பா, நீ எப்போது நெருப்புடன் உறங்குவாய்?'. 'மகனே இப்போதே'. நெருப்பும் நானும் உறங்கினோம். சூடு இதம். கட்டிக்கொண்டேன். மகனின் அத்தைக் கருவுற்றாள். என் இழவில் மகன் மனதிற்குள் கண்டிப்பாய் சிரித்திருப்பான்.
- தமிழ்மணி
Comments
Post a Comment