மரணம் எய்
மனிதன் மீது அதீத வெறுப்புணர்வு வருகிற காலத்தில் சாளரத்தின் வழியே மழைத்தூறலை கண்கொட்டிப் பார்க்கிறேன். மழை மெதுவாய் வானில் உள் வாங்குகிறது. வெயில் துளிர்க்கத் தொடங்கி ஈரம் காய்கிறது. எனது எதிரில் பொறுப்பற்ற மனிதன். அப்படியென்றால் நான் பொறுப்பானவனா?. வலது புறத்தில் மதிப்புக் கொடுக்காத மனிதன். அப்படியென்றால் நான் பிறரை மதிப்பவனா?. இடது புறம் பொய்களைப் பேசும் மனிதன். அப்படியென்றால் நான் நிஜமா? முதுகுப்புறம் சொல்லியதை திரித்துக் கூறும் மனிதன். அப்பொழுது நான் நேரடி சொற்கடத்தியா?. மௌனத்தை தலையில் ஏற்றிக் கொண்டு நீண்டநாள் தவம் எய்தினேன். மௌனம் என்னிடம் உரையாடியது. 'நீ கல்லாய் இரு' அல்லது 'நீ அருவமாகு'. எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. பதில் கிடைக்கவில்லை. பதிலினால் இத்தவ வாழ்வு முடிவுக்கு வந்துவிடுமா? என்ற கேள்வி மனச்சிறையில் தொக்கி நிற்கிறது. ஊசலாய் ஆடியது. ஆட்டத்தை நிறுத்த பதிலைத் தேடுவதற்குள் இன்னொரு சொல் முன் நிற்கிறது. 'மரணம் எய்', அதுவே நற்பதில். என் மௌனத்தில் மீண்டும் மனிதனைப் பார்க்கும் போது போலியாகத் தெரிகிறானே? போலியிலிருந்து மீண்ட நான் அவனுக்குள் அருவருக்கும் பண்டமாய் இருக்கிறேன்.
'மரணம் எய்' என்ற சொல் துரத்துகிறது. அதை விலக்குகிறேன். என் நிழலொற்றி பின் வருகிறது. துளிர்த்த வெயிலை அழித்துவிட்டால் நிழல் உருவாகாது. நான் வெயிலை அழிக்கப் போகிறேன். வெயிலை அழிக்க முதலில் செங்கதிரோனைச் சாய்க்க வேண்டும். ஒரு மலையைக் கட்டு, அதன்மேல் மேகத்தைக் கூட்டு, நெருப்பை மறை. நிலத்தைப் பெயர்த்தெடுத்து குவிக்க ஆரம்பித்தேன். குவிந்து குவிந்து மலையானது. 'ஓ, மேகங்களே உங்களுக்கு உணவு வைத்துள்ளேன் ஓடோடி வாருங்கள்'. வேகமெடுத்து வந்தன. கொண்டுவந்த நீருணவை மிடறி தொந்தி வளர்த்தன. இரு மேகங்களின் தொந்தியிடித்து மின்னல் வெட்டியது. மின்னலின் பாய்ச்சல் என்னை சாம்பல் போல் செய்தது. காற்றில் தூசி ஆனேன். கலந்தேன். மறைந்தேன். என் புறங்களில் அன்றிருந்த மனிதன் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.
- தமிழ்மணி
Comments
Post a Comment