"மியாவ்கள்"


     இலையுதிர்கால தார்சாலையில் சுடுகாற்றின் உஷ்ணத்தில் பெருந்திரள்களினூடே சாளரத்தின் வெளியைக் கண்டுகொண்டிருக்கிறேன். பேருந்து பயணத்தில் சந்திக்கும் மனிதர்களின் முகங்கள் எதையோ தேடியலைவதாய்த் தெரிகிறது. சிலர் உறங்குகிறார்கள். சிலர் பேசிச் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். வேடிக்கைப் பார்ப்பவர்களின் கண்களில்  செத்துப்போன தனிமையின் மீதத்துளிகள் மிதந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.  காற்றைக் கிழித்துக்கொண்டு வேப்பமரத்தின் பச்சையுமில்லாத மஞ்சளுமில்லாத வண்ணத்திலிருந்த இலை எனது மடியில் வந்து விழுந்தது. நீண்ட நேரம் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்துக்கொண்டே இருப்பது எளிதான காரியமாக எனக்குப்படவில்லை. அந்தயிலை பிணம்போல அசைவற்று நீண்ட நேரம் மடியிலேயே கிடந்து சருகானது. வாயால் ஊதி அதைப் பறக்கச் செய்ய எத்தனித்தேன். சருகு உடையத் தொடங்கியது. "சருகின் உடைந்த பகுதிகளின் இடைவெளியில் ஒளிந்துகொண்டால் என்ன?".  சாளரத்தின் வெளியேயிருந்து வந்த காற்று உடைந்த சருகை என் காலடிக்கு கொண்டுசென்றது. எவ்வளவு அற்புதம். "இந்த காற்றாய் மாறிப் போனால்தான் என்ன?". "மனிதனாய் பிறந்தது தவறாகிவிட்டதே!" என்று மனம் உளன்று கொண்டிருக்கையில், பேருந்து நடத்துனரின் விசில் சப்தம் மீட்டெழுப்பியது. நாசிக்குள் சர்க்கரைப்பாகின் நெடி ஏறியது. ஊருக்குள் நுழைந்துவிட்டேன். சுற்றிலும் கரும்புத்தோட்டம். கூடாரம் வேய்ந்த குட்டிக்குட்டி சர்க்கரைப்பாகு உற்பத்தி செய்யும் இடங்கள். "இத்தனை பசுமையை யார் இந்த ஊரின் மீது நெய்திருப்பார்கள்?". நிச்சயம் இந்த ஊரை கடக்க யாரும் நினைக்கமாட்டார்கள். ஒரு உத்தேசத் தோரணையுடன் என்னை அவர் பார்க்க வந்தார். அவர் மனக்கணக்கில் ஊகித்து வைத்தது சரியே! அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார், அவரை நானும். பேசுவதைப் பொருட்படுத்துதலுக்குள் செலுத்தாமல் அவருடன் வேகமாக நடந்தேன். அந்தி வேலையின் சூரியஒளி ஊரின் பச்சையை மஞ்சளாக சிரமப்பட்டு மாற்றிக்கொண்டிருந்தது.  ஊரின் வால்பகுதியை நோக்கி எங்கள் நிழல்களோடு ஜோடி சேர்ந்து நடந்துகொண்டு இருந்தோம். சர்க்கரைப்பாகின் நெடி வீழ்ந்து எலுமிச்சையின் நெடி வீசியது. எங்களையும் எங்கள் நிழலையும் தவிர இப்போது அங்கு யாருமில்லை. மயில் அகவும் சத்தம் கேட்டது. காதுகொண்டு கூர்ந்து கேட்கலானேன். அகவல்கள் பீரிட்டு வந்தது. "நாம் இப்போது இருப்பது எங்கே?" என்ற எனது கேள்வியை எடுத்து வைத்தேன். "ஒரு மலையின் நிழலில்" என்று அவர் பதிலுரைத்தார். அப்போதுதான் அதைக் கண்டேன். எங்கள் இருவரின் நிழல்களையும் காணவில்லை. அவை இந்த மலையின் நிழலிற்கு பின் ஒளிந்து கொண்டுள்ளன. கண்ணைச் சிமிட்டி சிமிட்டி அந்த இடத்தைச் சுற்றி பார்த்தேன். எங்களிருவரையும் குன்றுகள் சூழ்ந்திருந்தன. அவருக்கு அது முன்பே தெரியும்போல. பயத்தை அவரின் கண்களில் நான் பார்க்கவில்லை. என் கண்களில் அவர் பார்த்துவிட்டார். ஒவ்வொரு குன்றின் முனைப்பகுதியிலும் வேல் ஊன்றப்பட்டு இருந்தது."நாம் எங்கே செல்லப் போகிறோம்?". "அதோ அங்கேத் தெரியும் பெரிய குன்றின்மேல் ஒரு கோவிலிருக்கிறது அங்கே". ஊருக்குள் தலைகாட்டாத மயில்கள் இந்தக் குன்றைச் சுற்றி நூறுக்குமேல் இருக்கின்றன. மலையேறும் படிக்கட்டுக்கு வந்தோம். அதன் எதிர்ப்புறம் பயன்பாட்டில் இல்லாத இடிபாடுகளுடன் கூடிய வீடொன்று நின்றது. அவ்வீட்டின் வலதுபக்க முன்விளிம்பில் ஆண்மயில் அமர்ந்து இருந்தது. அவர் என்னைப் படிக்கட்டுகளின் வழி மலைமீது ஏற்றிச் சென்றார். போகப்போக செங்குத்தாக இருந்தது. எப்படியோ அந்த செங்குன்றத்தில் ஏறி கோயிலை அடைந்தோம். எங்களைக் கண்ட பெண்மயிலொன்று திடுதிடுவென்று ஓடியது. நான் மூச்சு வாங்கியபடி தலையைக் கீழே குனிந்தேன். என்னயிது எங்கள் நிழல்கள் எங்களுக்குப்பின் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நடை சாத்தியிருந்தது. முருகன் அலங்காரத்துடன் வீற்றிருந்தான். எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. கோவணத்தோடுதான் முருகன் இருந்திருக்க வேண்டும். இங்கே அவன் செல்வங்கொழிப்பவன் போல. பட்டாடையுடன் இருக்கிறான். இருக்கப்பிடிக்காமல் அவருடன் கீழே இறங்கினேன். இறங்கிக்கொண்டிருக்கும்போதே படிகட்டுகளின் இடதுபகுதியில் ஒரு சிறுபடிக்கட்டு இருந்தது. அங்கே அழைத்துச்சென்றார். அங்கொரு பதினெட்டுபேர் அமர்ந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். அந்த பதினெட்டு பேரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவர் என்னை "இங்கு இருக்க வேண்டாம் கிளம்புவோம்" என்று அவசரப்படுத்தினார். அந்த அவசரத்தில் பயம் தெரிந்தது. அவர் கண்களில் இப்போதுதான் பயத்தைப் பார்த்தேன்.  சூரியன் தேய்வதற்குள் நானும் அவரும் மலையிறங்கி ஊருக்குள் சென்றோம். " நீ இங்கு எதற்காக வந்தாய்" என்றார். "காட்டுக்குள் தொலைந்திருக்கும் பூனை சாமியாரைத் தேடி வந்துள்ளேன்", அவருடன் இந்த பசுமையின் நிறத்தில் கலக்கப்போகிறேன்" என்று பதிலளித்தேன். காற்று பலமாக அடித்தது. பலம் என்றால் பெரும்பலம். 
"மியாவ்" என்ற சப்தம் கேட்டது. என்னைப் பார்த்து அவர் சிரித்தார். "நீ தேடி வந்தவர், தாவரங்களின் உரையாடலில் வருபவரா?" என்று கேட்டார். இப்போது நான் சிரித்தேன். என் சிரிப்பில் உண்மையை கண்டறிந்திருப்பாரென்று எனக்கு தெரியும். 


"மியாவ்" என்று இன்னொருமுறை சப்தம் கேட்டது. அவர் கண்களை மீண்டும் பார்த்தேன். கண்களில் பயமல்ல. அவை பயமுறுத்தின. அவை சாம்பல் நிறத்தில் காட்சியளித்தன. "பூனை சாமியார்" எனது தாத்தா என்று சொன்னார்.  அதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் கண்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதுபோல் பார்த்தன. "உன்னால் நம்பமுடியவில்லையென்று முகஜாடை காட்டிக்கொடுக்கிறது" அவர் கூற, "என் குண்டியைப் பாருங்கள் புரியும்" என்றேன். அவர் என்னைத் திருப்பினார். என் கால்சராயை கழட்டினேன். குண்டியில் வால். பெரிய வால். "பூனை சாமியார், எனக்கும் தாத்தா"தான் என்று அவருக்கு புரிந்தது. பிறகு என் வாலைப் பார்த்து ஆழ்மன யோசனைக்குள் கருவொன்றை கண்டறிந்தவராக, 'உலகிலேயே மிகப்பெரிய வாலைக் கொண்ட மிருகம் புனைவு,  அப்புனைவு நீதான்' என்றார்.
     
"மியாவ்கள்" பறந்தன.

- தமிழ்மணி

(தாவரங்களின் உரையாடல் கதையில் வரும் "இராபர்ட்சன்"னிற்கு)

Comments