புரளிகள் நம்பத்தகுந்தவைகள்
நட்சத்திரங்களாய் போனால் என்ன
என்று கனா கண்டவர்களுள்
ஓரத்தில் எனக்கும் ஓரிடமுண்டு. அந்த ஓரத்தை யாருக்கும் விட்டுத்தரப்
போவதில்லை. ஓரம் எனக்கானது
எனக்குள் மூழ்கிக் கிடக்கும் கணங்களுக்கானது. இலையுதிர்காலம் தொடங்கிவிட்டது. இரவில் நட்சத்திரங்களை எண்ணுவதற்கு இலைகளின் தடங்கல் இல்லை. யாருமே இல்லாத சாலையில்
உங்கள் அனைவருக்கும் தெரிந்த
மனிதனுடன் நடந்து சென்றேன். அவரை சந்திக்கும் முன்பாய் எதிர்வந்த நாயொன்றை "கருப்பி" என அழைத்தேன். அருகில் வந்து கையை நக்கிச் சென்றது. அந்த மனிதர் என்னை விடுவதாய் இல்லை. சில காலங்கள் கழித்து வந்த கருப்பி "லொள்"ளென்றது. அதன்பிறகே மனிதன் என்னைவிட்டு நீங்கினான். அவன் நீங்கியது நல்லதுதான். அவனைவிட என்னைப் புரிந்துகொண்ட உயிர் "கருப்பி"தான். அதனிடம் நான் ஆயிரம் பேசுவேன். பதிலுளுக்கு "லொள்" என்றே பதில் சொல்லும். அந்த "லொள்"ளில் எத்தனை பகடி, எத்தனை பேருண்மை, எத்தனை கல்லடிகள். கருப்பியின் குரல்வளையை எனக்கும், என் குரல்வளையை அதற்கும் பொருத்திப்பார்த்தேன். என்னை இதுவாக்கியது அது. அதை அவனாக்கியது எனது. என் பெயரைக் கத்தி சொன்னான், உளறினான், கொந்தளிப்பின் மீது அமர்ந்தபடி ஓலமிட்டான். பதில் சொல் இதுவே என்று கட்டளையிட்டான், சீண்டினான், யாசித்தான். "லொள்" என்றேன். ஆஹா! எவ்வளவு சுலபம் நாய்பாஷை. நட்சத்திரங்கள் எனக்கருகில் வந்தன. நீ எங்களுள் ஒருவனாய் வந்துவிடு என்றன. சரி என்று என் மொழியில் மூன்றுமுறை சொன்னேன். "லொள்..லொள்..லொள்".
அடுத்த காலப்பொழுதுகளிலெல்லாம்
நட்சத்திரங்களைக் காணமுடிவதில்லை. அவைகள் "லொள்"ளிற்கு பயந்த வண்ணம் வானத்திலேயே இருந்துவிட்டன. கருப்பியின் உடலில் வெண் மச்சங்களாய் போய்விட்டதெனவும் அல்லது கருப்பி விழுங்கிவிட்டதெனவும் புரளிகள் ஊரில் பரவின. புரளிகளும் நம்பத்தகுந்தவைகள்தானே. ஆமாம் "லொள்..லொள்..லொள்.."
- தமிழ்மணி
Comments
Post a Comment