பேரமைதி


விடிபல்பு அணைந்தணைந்து எரிகிறது

பால்வெளி மண்டலம் இப்படிதான் கண்சிமிட்டுமோ?

அதன் அமைதியைக் காணவேண்டும்

நடை பழகிய குழந்தையின் காலடி சப்தம்போல் இருக்குமென்கிறது பிரக்ஞை

பிரபஞ்சத்தின் அமைதி எங்கள் தெருவில் உள்ளது என்று கடவுள் சொன்னார்

அவரின் தெருவில் 
வாகனங்களின் இரைச்சல்கள்
புனிதர்களின் பேச்சுகள்
பல ஓயாத ஒலிகள்

கடவுளின் விரலைப்பிடித்து என் தெருவிற்குள் நுழைந்தேன்

எங்கு திரும்பினாலும் தறிகளின் ஓசை

இதுதான் சமநிலை
இதுதான் மௌனம்
இதுதான் பிரபஞ்ச அமைதி

இதைத்தாண்டி வேறு ஓசை உங்கள் செவிகளில் குறுக்கிட்டால் 
அன்று ஒரு நெசவாளி இறந்துவிட்டான் என்று கொள்க


- தமிழ்மணி 


Comments

Post a Comment