மாவெயில் போற்றுதும்

மாவெயில் போற்றுதும்



இன்றுதான் வெயிலைப் பார்க்கிறோம்

மார்கழியின் இரண்டாம் திங்களில் காணாமல் போயிருந்தது

சூரியனின் வருகைக்கு ஏங்கியது சமீபங்களில்தான்

அடைமழைவிட்ட ஞாயிற்றுக்கிழமை 
மதியம்,
வானவில்லில் சறுக்கிக்கொண்டு 
ஓடிவந்தது ஏழுவர்ண நாய்

ரயில்வே நடைபாலத்தின் படிக்கட்டுகளில் கால்வைத்து 
ஒவ்வொரு படியாய் வெயில் ஏறுகிறது

பின்னே நாயும் ஓடுகிறது

பின்னே நானும் ஓடினேன்

உச்சியில் வெயிலின் மஞ்சளைக் கோரைப்பற்களால் கவ்வி ஊரைநோக்கி ஊளையிட்டது ஏழுவர்ணம்

வெயில் ஊரில் அடைமழையாய் விடாது பெய்தது 

நாய் ஊளையிடுவது ஆபத்தின் அறிகுறி என்றாள் அப்பத்தாள்

'சும்மாயிருக் கெழவி...'

"மாவெயில் போற்றுதும் மாவெயில் போற்றுதும்"


- தமிழ்மணி







Comments