தமோனோ
சமீபத்தில் மறைந்த இந்தோனேஷியா கவிஞர் 'சபார்டி ஜோகோ தமோனோ'வை சில நாட்களாக தான் தெரியும். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான விக்ரம் சிவகுமார் அடிக்கடி தமோனோவைப் பற்றி சொல்வார். மொழிபெயர்ப்பாளர் விருட்சன் மொழிபெயர்த்த தமோனோவின் கவிதைகள் கைக்கு கிடைத்தது.
“கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்.”
- நிக்கனார் பாரா
வாழ்த்துகள் விருட்சன்.
ஒரு பிரதி அதற்கான சரியான எழுத்துகளோடு இருக்கும்போது மேற்படியான விடயங்களை நாம் எங்கும் தேடியலையத் தேவையில்லை. கவிதைகளை பகலின் வெக்கையில் வாசித்தேன். பின் இருளின் ஒளியில். பிற்பாடு நல்லதொரு மழைநாளில். வாசிப்பவனின் புறச்சூழலுக்கு ஏற்றபடி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கின்றன எழுத்துகள். இவரின் கவிதைகளுக்கும் சூழலுக்கும் மிகப் பெரிய தொடர்பு இருக்கிறது. கவிதையில் கோடையும் மழையும் வசந்தமும் மாறிமாறி வருகின்றன. உணர்வுகளையும் இயற்கையையும் இவரால் ஒன்றிணைக்க முடிகிறது.
'குழந்தைகளின் கைகளில்' என்ற கவிதையில் காகிதம் சிந்துபாத்தின் படகாக உருமாறுகிறது. கவிதையின் முடிவில்,
"கனவானே!
தயவுசெய்து
என் விளையாட்டைத் தொந்தரவுசெய்யாமல்
விட்டுவிடுங்கள்"
என இக்கவிதை முடிகிறது. இது இங்கு முடியவில்லை. அப்படியே 'காகிதப் படகு' என்ற கவிதையை வாசித்தால் அங்குதான் முடிவடைகிறது.
"ஒரு பெரும் வெள்ளத்தில்
நான் உனது படகைப் பயன்படுத்தினேன்
அது இப்பொழுது
எங்கோ
ஒரு மலைமீது
தனித்திருக்கிறது"
தமோனோ என்ற படகை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும். அது தனித்து இருக்கவே விரும்புகிறது. இங்கு கவிஞனுக்கான தனிமையை கவிதைக் காட்டிக்கொடுத்துள்ளது. தனிமையிலிருந்து விடுபட ஏரியாக மாற வேண்டும். 'ஏரி நான்' கவிதையில் கண்காணிக்கிறார். தனிமையை தனிமையிலிருந்து கண்காணிக்கிறார்.
'புல்லாங்குழல்', 'எனக்குள் நானே', 'உரையாடலுக்கு பிறகு' கவிதைகளை நான் பிரமிளின் கண்களால் வாசிக்கிறேன்.
மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு
பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம்தான் வெளி
- பிரமிள்
மனிதன் தன் சொந்த வாழ்வின் இருப்பில்
புல்லாங்குழலின் துவாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
- தமோனோ
அதேபோல மௌனி வந்து போகிறார்
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?
- மௌனி
இப்பொழுது உடனடியாக தெரிந்தாகவேண்டும்.
நான் யாருடைய உடலை அணிந்திருக்கிறேன்?
- தமோனோ
மொழியும் அதன் வார்த்தைகளும் எவ்வளவு கூர்மையானது என்பதை 'நாங்கள் மூவர்' கவிதை சொல்லுகிறது. அங்கே அறையிலிருந்த நான், கத்தி, மொழி இவற்றுள் இறுதி வடிவமாய் யாருக்கும் இன்றுவரை தன்னை முழுதாக ஒப்புக்கொடுக்காமல் இருப்பது மொழியின் வார்த்தை பதம்தான். இந்த பதம் குறையும்போது முடிவற்ற நிசப்தம் ஏற்படுகிறது. உணர்வுகள் வலுவிழந்து ஒளிந்துகொள்கின்றன.
'வேட்டைக்காரர்கள் உணர்வுகளின்
அடையாளங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....."
6
நீங்கள் படிக்கும் அனைத்து
வார்த்தைகளிலும்
எப்பொழுதும் எழுத்துகள் விடுபட்டுப் போய் இருக்கின்றன
நினைவுகளின் தோப்புகளுக்கு மத்தியில் மீண்டும்
என்றாவது ஒரு நாள் அவற்றை நீங்கள் கண்டடையலாம்.
(நாலடிப் பாடல்)
மீண்டும் வாழ்த்துகள் விருட்சன்.
இவைகளெல்லாம் மனதிற்கு நெருக்கமான கவிதைகள்.
Comments
Post a Comment