ஊருக்கு செல்லும் வழியும் நானும்
ஊருக்கு செல்லும் வழியும் நானும்
காலையின் உணவு இட்டிலி என்றால் அன்று நிச்சயமாக கார்த்தியலாக (கிருத்திகை) இருக்கும். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இவற்றுடன் சுடச்சுட சாம்பார். அன்றைக்கு இரவு மூனு தோசை. அதிலும் மூனாவது தோசை சீரகம், மிளகு போட்ட முட்டை தோசை. தோசையை வட்டமாக சாப்பிட்டு முட்டைப் பகுதியை கட்டங்கடைசியில் முழுங்குவதென்பது அலாதி. 'கார்த்தியல் அதுவுமா, முட்ட சாப்டுறீயே' என்ற அம்மாவின் சொல்லுக்கூடே முட்டையின் பகுதி வயிற்றுக்குள் தொலைந்திருக்கும். கார்த்தியலுக்கு முதல்நாள் வீட்டை பெரும்பாலான மக்கள் அலசி வைத்துவிடுவார்கள். சிலர் கார்த்தியல் நாளிலேயே வீட்டை அலசுவர். அன்றைக்கு தறியோட்ட சம்சு விடப்படும். மாதத்திற்கு ஒருமுறை நெசவுக்கும் நெசவாளர்களுக்கும் இந்நாள் பொதுவிடுமுறை. ஆம்பளையாட்கள் சினிமாவிற்கும் பொம்ளையாட்கள் ஊர் விசயங்களை பேசியும் அன்றைய பொழுது முடியும். மிஞ்சினால் டவுன் பகுதியிலுள்ள சொந்தங்கள் வீட்டிற்கு போய் அங்கேயும் இட்டிலி சாப்பிட்டுவிட்டு வருவார்கள். எனது இட்டிலி வாழ்க்கை இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் முதல் கட்டுரையே ஆவி பறக்க பால்யத்தை நியாபகப்படுத்தியது. இட்டிலியை வைத்து 'வெந்துருச்சா வேகலையா' போன்ற விளையாட்டெல்லாம் உண்டு. இட்டலியின் அழகே அம்மா அது வெந்திருக்கிறதா என குத்திவிட்டு பார்ப்பதுதான். அந்த குழி மட்டும் இல்லையென்றால் இட்டிலியின் வடிவம் பூர்த்தியாகாது.
'பிரதிகாரம்' கட்டுரையில் நடந்தேறிய சண்டையைப் போல் ஒவ்வொரு நபர்களுக்கும் தங்கள் வகுப்பு நண்பர்களுடனும் தெருப்பயல்களுடனும் பிரச்சனை உறுதியாக இருக்கும். கபடி, கிட்டி, பம்பரம், பச்சைகுதிரை தொடங்கி எரிபந்து விளையாட்டு வரை சண்டை முத்திபோய் அடிதடிகளெல்லாம் ஆகியிருக்கிறது.
'மைதானம்' கட்டுரையில் கார்த்திக் அவர்களுக்கு ஹாக்கி விளையாட்டுபோல் எங்கள் வயதிற்கு கிரிக்கெட் தான் விளையாட்டு. எழுத்தாளர் சரவணன் சந்திரனின் 'பார்பி' நாவல் படித்த பிறகுதான் கோவில்பட்டி ஊர் ஹாக்கியின் பூமி என்றே தெரியும். பள்ளியில் கிரிக்கெட் விளையாட அனுமதியில்லை. கிரிக்கெட் ஒரு விளையாட்டே இல்லை என்று எங்களின் உடற்கல்வி ஆசிரியர் அடிக்கடி சொல்வார். அதனாலே பள்ளியில் ஃபுட்பால் தான். ஆனால் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் போதும் ஆளுக்கு அஞ்சு ரூபாய் கைகாசை போட்டு நான்கு ஸ்டெம்பர் பந்துகளை வாங்கி மட்டையைத் தூக்கிக்கொண்டு கொய்யாத்தோப்பிற்கு ஓடிவிடுவோம். அங்கிருக்கும் மூன்று மணிநேரம் சொர்க்கம்.
'தேர்வு காலத்தை' பொறுத்தவரை பத்தாம் வகுப்பு நகராட்சி உயர்நிலைப்பள்ளியை மறக்க முடியாது. என்னை உருப்பட வைத்தவர்கள் அந்தப் பள்ளி வாத்தியார்களும் ஆசிரியைகளும் தான். பள்ளியைப் பற்றியும் தேர்வு அறைப் பற்றியும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். பொதுத்தேர்வு ஆங்கிலத்தில் காப்பாற்றிவிட எல்லாருக்கும் ஒரு ஆசிரியர் அமைந்துவிடுவார் போல.
பாம்பு பலருக்கு பயத்தை விழைவிக்கும் பொது எதிரியாகதான் உள்ளது. அதற்காகவே 'சர்ப்ப விரோதம்' கட்டுரையை இரவில் வாசிக்காமல் பகலில் வாசித்தேன்.
அங்காடித் தெரு, நத்தைக்கூடும் மண் உண்டியலும், மழையும் சம்சாரியும், நாலுகால் ஜீவன், ஊருக்கு செல்லும் வழி, கனாக்காலம், களவாணித்தனம், தொடுப்புகள், கீரைக்கார ஆச்சி, சாவுக்கு முந்தி இவையெல்லாம் ஊரார்கள், பயணங்கள், வேலைகள் கலந்த கலவையான கட்டுரைகள். இக்கட்டுரைகள் மனித உணர்வுகளின் சாட்சி. பேருயிர், தன்னனம் நாதினம், கோசர், அணிகலன், வேட்டும் பட்டாசும், கடையம், தாகமும் தண்ணீரும், பல்லரிசி பஞ்சம், கிராமத்து தேவதை, தமிழ் நிலத்தின் தொன்மம் ஆகிய கட்டுரைகள் அரசியல், வரலாறு, நாம் மறந்துவிட்ட, மறக்கடிக்கப்பட்ட விடயங்களை நோண்டி வெளியெடுத்து நீட்டியுள்ளார் கார்த்திக்.
திக்கு தெரியாத ஊரில் மாட்டிக்கொண்ட எங்கள் ஊரார்கள் டி.என்.67 எண் வைத்த வாகனத்தைப் பார்க்கும்போது கழிவிரக்கம் அடைவார்கள். அப்படிதான் கார்த்திக் என்னுடைய பால்யத்தை மீண்டும் கொணர்ந்து தந்திருக்கிறார். இதில் இன்னும் சில கட்டுரைகள் என் மற்றும் எங்கள் மனிதர்களின் வாழ்வோடு ஒட்டிப்போயிருக்கிறது. அதைப் பற்றி இங்கு அதிகம் சொல்வது சரியல்ல. அது இந்நற்கட்டுரையை கெடுத்துவிடுமென்பதால் எழுதவில்லை. தொண்ணூறுகளின் பால்யத்தின் மிச்சத்தை என்னைப் போன்ற இரண்டாயிரத்தின் பால்யத்தினர் கொஞ்சம் வாழ்ந்திருக்கின்றோம் என்பதில் பேருவகையே. ஊருக்குள்ளேயே இருக்கும் நான் ஊருக்குள்ளேயே திரும்பிகொண்டிருக்கிறேன். எழுத்தாளர் அகரமுதல்வன் குறிப்பிட்டது போல அப்புவும் ஆச்சியும் கார்த்திக் புகழேந்தியின் எழுத்தில் இருக்கிறார்கள்.
- தமிழ்மணி
அருமை
ReplyDelete