இடைவெளி என்றொரு சாவு
"இடைவெளி என்றொரு சாவு"
சம்பத் நீங்கள் ஏன் இப்படி பாடாய்படுத்துகிறீர்கள். உங்களை நினைத்தாலே சாவு...சாவு...சாவு.
சுருக்கை அவிழ்க்க முடியாதபடி போட்டுவிட்டீர்கள். ஒவ்வொரு இரவிலும் அந்த சுருக்கு கழுத்தை நெறித்து தற்கொலைப் புரிய வைக்கிறது. அவ்வளவு சுலபமா மரணம்? இருக்க முடியாதே? இருக்க வாய்ப்பேயில்லை. நீங்கள் உளன்ற இடைவெளியில் துள்ளித் தாவி பைத்தியநிலையில் நானும் சுற்றுகிறேன். அந்த கிறுக்கு தினகரனுக்கு ஏற்பட்ட அதே கிறுக்குதான். அத்துக்க நிலையிலிருந்து வெளிக்கிட இவான்ஸ் போன்றொருவன் எனக்கு வாய்க்கவில்லையே. இவான்ஸ் மட்டும் தானே? பத்மா, கல்பனா இவர்கள்கூட இல்லையே. இப்படி நான் உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சாவிடம் பதில் கேட்டு சொல்லுங்கள்.
அந்த பெரியப்பா போன்று எனக்கொரு பெரியப்பா இருந்தார். அவர் வாய்க்குள் பாலூற்றும்போது தொண்டைக் குழிக்குள் இறங்காமல் ஊசாலடியபடி அந்தப் பால் இருந்தது. அதை அவர் வெளியே தள்ளிக்கொண்டே இருந்தார். அதுதான் நான் அருகிருந்து பார்த்த முதல் சாவு. அப்போது அந்த இடைவெளியை அவரிடம் பார்த்தேன்.
சாவிற்கு பின்பாக மனிதர்களின் உடல்கள் இருளுக்குள் செல்லுமா? இல்லை பேரொளிக்குள் செல்லுமா? இக்கேள்விகளுக்கும் சாவிடம் பதில் கேட்டு சொல்லுங்கள். சாவிற்கு எப்போது சாவு வரும் சம்பத். அது மனிதர்களைப் பிடித்து ஆட்டுகிறதே. நீங்கள் அதன் முன் சுலபாக மண்டியிட்டுவிட்டீர்கள். என்னைப் போன்றோர்கள் பயந்து சாகிறோம். ஆம் அந்த பயம் ஒரு சாவுதானே. சாவின் இடைவெளியில் சாவிகொண்டு திருகி அந்த யாருக்கும் அறியாத, தெரிந்துகொள்ள விரும்பாத உலகத்திற்குள் கூட்டிக்கொண்டுச் செல்லுங்கள். முடிந்தால் சாவின் முன் நானும் மண்டியிடுகிறேன்.
இந்த நாவல் முழுதும் இருக்கக்கூடிய கேள்விக்கும் பதிலுக்கும் நடுவில் இருக்குமொரு சின்ன இடைவெளி மௌனம். மௌனமும் சாவுதான் போல.
சம்பத் என்னைக் கொன்றுவிட்டார். சாவின் கொல்லைப்புறத்திலிருந்து உங்களுக்கு ஒரு கைகுலுக்கலோடு மண்டியிடுகிறேன் சம்பத்.
சாவை எளிதில் வரவேற்க முடியுமென்கிற மனநிலையில் ஒரு இரவைக் கடந்துவிட்டேன். விழித்தலில் இருந்தே உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது. உயிர் உதிருவதை சாவு ஒரு மூலையில் இருந்துகொண்டு கவனித்தபடியே இருக்கலாம். அதன் கண்களைக் கட்டி ஒரு வனத்துக்குள் அனுப்ப வேண்டும். அதன் பிடறியில் அடித்து மண்டியிடு...மண்டியிடு...என்று கத்த வேண்டும் போலெல்லாம் இருக்கிறது. இவ்வளவு கத்திக் கூப்பாடிட்டாலும் நம் தலைமீதே ஏறி நிற்கும் அந்த சாவு. மானுடத்தின் மேல் ஒரு பீடிக்கப்பட்ட நோய் இருக்கிறது. அந்த நோயை வெற்றிடத்தில் படரவிட்டு சாவை ஊற்றுங்கள். சாவு, அதுதான் அது மட்டும்தான் விடுதலையடையச் செய்யும். மாண்டு போங்கள் மனிதர்களே!
அப்படியாவது மனிதர்களை விட்டு தள்ளியிருப்போம் மனிதர்களே!
Comments
Post a Comment