தொடர்பற்றவைகளால் நெய்த காழகம்

                       1

ஓட்டுக்கண்ணாடி வழி 
ஊடுருவிய சூரியன்
அம்மாவின் இடத்தை 
பிடித்துக்கொண்டது பொழுதுசாய்வதற்குள்
ஒற்றைச் சேலையை நெய்தது
வாரநாள் முடிவில்
வரவுசெலவு கணக்கு தீர்க்க
அப்பன் கொண்டுபோன சேலையிலொன்று காணமல்போயிற்று
சூரியன்மீது சந்தேகம்
சந்தேகம் உண்மையானது
ஆம் அன்று சூரியகிரகணம்


                       2

பாண்டிநாட்டில் சேலைவிற்கபோன 
தாத்தாவை  காணவில்லை
சூரியன் கடத்தியிருக்கலாம்

              
                        3
                        
அழகர்மலை கல்வெட்டிலிருக்கும்
அறுவை வணிகன் 
தொலைத்த காழகம்
கொடுமணலில்தான் இருக்குமோ?
சொல் மதுரைக்காஞ்சியே...
நானும்
தலையானங்கானத்து செருவென்றவன் சந்ததியின் மிச்சம்தான்.


                           4

அப்பாவின் வேட்டியில்
தூமைத்துணி அளவிற்கான 
பகுதியை யாரோ வெட்டியிருக்கிறார்கள்
நெடுஞ்செழியனே 
உன் மனைவியின் யோனியை
சோதிப்பாயாக.


                             5

பல

..டட்டக் டட்டக் டட்டக் டட்டக் டட்டக் டட்டக்..

ஒரு நூற்சேலை தயார்


                               6

புற்களுக்காக அலைந்த பசுவொன்று
என் வீட்டினுள் நுழைந்தது
பாவோ(ட்)டி கொடுத்துப்போன
பச்சைநிற ஊடைநூலை 
மேய்ந்து தள்ளியது
துடைப்பம் கொண்டு 
சாபம்விட்டபடி துரத்தியடித்தாள் அம்மா

'ஆசேந்தவழி மாசேப்ப'
மாங்குடி மருதனின் இவ்வாக்கு பலிக்க...


                               7

என்ன செய்யலாம்?
தறி ஓட்டலாம்...


                             8

ஐம்பது வயதில் அம்மா கர்ப்பமாயிருந்தாள்
அவமானப்பட இதிலே என்ன இருக்கிறது
அழகாக ஒரு தறியை ஈன்றெடுத்தாள்

                           9

சாயக்காரனிடம் 
சிகப்பு வண்ணம் பற்றாக்குறை
மாதவிடாயிலிருந்த மகளை
சாயத்தொட்டிக்குள் அனுப்பி வைக்க
'செந்துவர்' வண்ண நூல் தயார்

                           10

கரிசல்மண்ணின்
'நெய்தல்'வாசி
நாங்கள்


                          - தமிழ்மணி














Comments