தடயம்
மிஷின் ராட்டின் எடையுள்ள அம்மா
தூசிப்படிந்து இயங்காமலிருக்கிறாள்
காத்தாடி கால்கள் நூற்பஞ்சேந்தி
ஓடாநிலையானது
பாவோடிக் கூப்பிட்டும் எழவில்லை
கச்சாத்தில் கணக்கு முடிக்கவுமில்லை
பிரேத பரிசோதனையில்
துண்டாக்கப்பட்டது ராட்டு
வார்ப்பட்டைப் பிரச்சனையாம்
அழுதார்ப்பறித்த சொந்தங்களே
உங்களுக்கொன்று தெரியுமா?
அன்று திணறியது என் மூச்சு
அம்மாவின் நூற்சேலை வாடை
என் மூக்கின் மேலமர்ந்து
தாட்டியம் செய்தது
"யாரும் கண்டுபிடிக்காதபடி ஒளித்து வைத்திருக்கிறாள் என் மூக்குச்சளி தடயங்களை அவள் முந்தானையில்"
Comments
Post a Comment